இதனை உள்நோக்கமாகக் கொண்டு சபை கூட் டப்படுகிறது.
சூதாட்டத்துக்கு பாண்டவர்களை வரவழைத்தால், காய் உருட்டும் தந்திரத்தால் அவர்களை தோற்கடிக்க முடியும் என சகுனி தன் மருமகன் துரியோதனனுக்கு உறுதியளிக்கிறான்.
கூடிய சபையில் பாண்டவர்களை சூதாட்டடத்துக்கு வருமாறு துரியோதனன் அழைப்பு விடுக்க, மறுக்க முடியாத நிலையில் தருமர் சம்மதிக்கிறார்.
சூதாட்டத்தின் முடிவில் பாண்டவர்கள் வனவாசம் போகவேண்டியதாயிற்று.
14 ஆண்டுகள் வனவாசம் செல்வதால் ஒன்று மில்லை என்று யாரேனும் நினைக்கலாம். ஆனால் அதுதான் இல்லை.
சகுனியின் சூழ்ச்சியால் துரியோதனன் பாண்டவர்களை சூதாட்டத்துக்கு வலிந்து இழுத்ததால்தான் துச்சாதனனின் குருதி பூசியே இக்கேசம் முடிப்பேன் என்று திரெளபதி சபதம் செய்கிறாள்.
அச் சபதமே குருசேத்திரப் போர் நடக்கவும் கெளரவர் சேனை அழியவும் காரணமாயிற்று.
அட! இப்போது இந்தக் கதை எதற்கு என்று நீங் கள் கேட்கலாம். அதற்கும் காரணம் உண்டு.
ஒருபோதும் கெடுதிக்காக சபை கூடுவது நல்லதல்ல. அவ்வாறு சபை கூடுமாயின் அது அழிவையே தரும்.
அழிவுக்காக சபை கூடுவதும், கூடுகின்ற சபையை அழிவை ஏற்படுத்துமாறு நகர்த்த முற்படுவதும் மிகப் பெரும் பாவச் செயல் ஆகும்.
இத்தகைய செயல்கள் பொதுவில் சூழ்ச்சியின் காரணமாக நடப்பதுண்டு.
அதாவது சபையைச் சாராதவர்கள் சபையில் இருக்கக்கூடிய ஒரு சிலரை ஆசை வார்த்தை காட்டி, தம்சூழ்ச்சி வலையில் வீழ்த்தி குழப்பத்தை ஏற்படுத்தச் செய்வதாகும்.
இத்தகைய குழப்பங்கள் மக்களை உய்ய விடாது; எந்தவித முன்னேற்றங்களுக்கும் களம் அமைக்க விடாது; மக்களை ஆளுகின்ற சபைகள் கூடுவது என்பது மக்களுக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும். அல்லது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கானதாக அமைதல் வேண்டும்.
எச்சந்தர்ப்பத்திலும் குழப்பதின் பொருட்டு சபையைக் கூட்டுவது; சபையை நடத்துவது; சபையை திசை திருப்புவது என்பன மக்களுக்குச் செய்கின்ற துரோகமாக அமையும்.
குழப்பங்களையும் சூழ்ச்சிகளையும் நோக்கமாகக் கொண்டு உறுப்பினர்கள் சபைக்கு வருவார்களாயின் அது சூதாட்டத்துக்கான சபையாகவே மாறும்.
சூதாட்டம் என்பது வெறும் சூதாட்டத்தை மட்டும் குறிப்பதல்ல. சூழ்ச்சி கொண்ட மனநிலையில் இருக் கக்கூடிய சந்தர்ப்பங்கள் எல்லாம் சூதாட்டம்தான்.
சபையைக் குழப்பும் எண்ணம்; அதற்கான திட்டமிடல்; சூழ்ச்சி செய்பவர்களின் தொடர்பு என அனைத்தும் சபையை சூதாட்டக்களமாக்கும்.
ஒரு சபை சூதாட்டக்களமானால் அதன் விளைவு என்னவாகும் என்பதை விளக்கவே துரியோதனன் ஆடிய சூதாட்டக்கதையை இங்கு கூறினோம்.
இனி, எங்கள் மக்களுக்கு நன்மை செய்ய சபை கூடுவதா? அல்லது சூதாட்டத்துக்காக சபை கூடுவதா? என்பதை எங்கள் உறுப்பினர்களே தீர்மானிக்கட்டும்.