வரும் 23.06.2016 வியாழக்கிழமை நடைபெறும் பொதுவாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தமிழர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜொவான் ரையன் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது குறித்து 21.06.2016 செவ்வாய்க்கிழமை அவர் விடுத்திருக்கும் அறிக்கையில்:
‘எமது நாட்டின் நிகழ்காலத் தலைமுறை எதிர்நோக்கிய முடிவுகளில் முக்கியமானதாக வரும் 23ஆம் நாள் வியாழக்கிழமை நிகழப் போகும் வாக்கெடுப்பில் பங்கெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கும் கிடைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய நிலைத்திருப்பதற்கு ஆதரவாக என்னோடு இணைந்து வாக்களிக்குமாறு உங்களையும் நான் அழைக்கின்றேன்.
எமது ஐரோப்பிய பங்காளிகளுடன் இணைந்து செயற்படுவது எமது கட்டுப்பாட்டை அதிகரிக்குமே தவிர குறைக்கப் போவதில்லை; இது எம்மை மேலும் பலப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தப் போவதில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் நாம் இணைந்திருப்பது, தொழிலாளர்களின் உரிமைகள், பாகுபாட்டிற்கு எதிரான செயற்பாடுகள், சமத்துவம், குடிவரவு, சனநாயகம், மனித உரிமைகள் போன்ற எமக்கு முக்கியமானதாக விளங்கும் விடயங்களில் எமக்கு அதிக வலுவை அளிக்கும்.
ஈழத்தீவில் உள்ள உங்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து பிரித்தானியத் தமிழ்ச் சமூகத்தினராகிய நீங்கள் கொண்டிருக்கும் அதிக கரிசனைகளை நான் அறிவேன். உண்மை, நல்லிணக்கம், நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான குரல்களை ஆதரிப்பதற்கான சிறந்த வழி எமது ஐரோப்பிய ஒன்றிய நேச சக்திகளுடனும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களுடனும் இணைந்து செயற்படுவதாகும். வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்து அதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தை நாம் சீரற்ற நிலைக்கு இட்டுச் செல்வது அதிபர் சிறீசேன மீதும், அவரது அரசாங்கத்தின் மீது தாக்கம் செலுத்தும் எமது ஆளுமையைக் குறைக்கும்.
குடிவரவுகளும், அவற்றின் விளைவாக எமது பொதுச் சேவைகள், வசதிகள் போன்றவற்றில் ஏற்படும் அழுத்தங்களையும் கருத்திற் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களிப்பதைப் பற்றிச் சிலர் சிந்திக்கின்றார்கள்.
வெளியேறுவதற்கு ஆதரவாக நாம் வாக்களிப்பதால் பிரித்தானியாவிற்கு வருகை தருவோரின் எண்ணிக்கையில் காத்திரமான வீழ்ச்சி ஏற்படப் போவதில்லை.
பல சிறிய, பெரிய தமிழ் வாணிபங்களுக்கு நன்மையளிக்கும் வகையில் விளங்கும் பொருட்கள் மற்றும் ஆட்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு வழிவகுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தைப் பொறிமுறை மூலம் நாம் பயன்பெறுவதென்பது தொழிலாளர்களின் தங்குதடையற்ற நகர்வை நிபந்தனையாகக் கொண்டதென்பதில் ஐயமிருக்க முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காது, ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் சட்டங்களில் எந்தப் பங்களிப்பையோ, வாக்குரிமையையோ கொண்டிருக்காத அதேவேளை அதன் ஒற்றைச் சந்தைப் பொறிமுறை மூலம் பயன்பெறும் நோர்வே, சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரித்தானியாவுடன் ஒப்பிடும் பொழுது அதிக அளவிலான குடிவரவாளர்களைக் கொண்டுள்ளது.
நிகர குடிவரவு எனும் பொழுது கடந்த ஆண்டு நிகழ்ந்த ஐரோப்பிய ஒன்றியக் குடிவரவுகளை விட, அதற்கு வெளியேயிருந்து நிகழ்ந்த குடிவரவுகளே அதிகமாக இருந்தன. நாட்டிற்குள் வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் வழிமுறைகளை பிரித்தானியா கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் கூட ஐரோப்பிய ஒன்றியக் குடிவரவுகளை விட, அதற்கு வெளியேயிருந்து நிகழும் குடிவரவுகளே அதிகமாக உள்ளன. கல்வி கற்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு வரும் தமிழ் மாணவர்களின் வாய்ப்புக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தேவையற்ற தடங்கல்களை பிரித்தானியா ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை.
எமது மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் தேசிய சுகாதார சேவை மரபுவாத அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள நிதிவழங்கல் வெட்டுகளால் பெரும் போராட்டத்திற்கு ஆளாகியிருக்கின்றது. குடிவரவுகளால் தேசிய சுகாதார சேவையில் நெருக்கடிகள் ஏற்படவில்லை; உண்மையில் வெளிநாடுகளில் இருந்து வரும் மருத்துவர்கள், தாதிகள் அர்ப்பணிப்புடன் ஆற்றும் சேவைகள் இன்றி எமது மருத்துவமனைகளோ, மருத்துவர் மையங்களோ செயற்பட முடியாது.
அதேபோல் இந் நாட்டில் குடிவரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்கள் குறைந்து விட்டதாகக் கூற முடியாது. 1920களுக்குப் பின்னர் வீடுகள் கட்டும் பணிகளை இப்போதைய அரசாங்கம் மிக மோசமாகக் குறைத்திருப்பதன் காரணமாகவே வீடுகளுக்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொள்வனவு செய்யக்கூடிய விலையில் வீடுகளைக் கட்டுதல், எமது பொதுச் சேவைகளை ஆதரித்தல், எமது சிறிய வாணிபங்களுக்குப் பக்கபலமாக நிற்றல், நியாயமான குடிவரவுப் பொறிமுறையை அறிமுகம் செய்தல் போன்ற பணிகளை செயற்படுத்தக்கூடிய தொழிற்கட்சியை 2020ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற வைத்து ஆட்சியில் அமர வைப்பதன் ஊடாகவே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமே தவிர, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தீர்மானத்தை இவ்வாரம் எடுப்பதன் ஊடாக அல்ல.
23ஆம் நாளன்று நடைபெறும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதற்கு ஆதரவளிப்பது எமது சகல சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையும் என நான் நம்புகின்றேன்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதற்கு ஆதரவாக வாக்களிப்பது எமது நாட்டிற்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவகிப்பதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி நாடாக எமது நாடு திகழ்வதற்கும் வழிவகுக்கும்.’