செய்வதாக கூறியவற்றுக்கு செயல் வடிவம் கொடுங்கள் (அரசாங்கத்திடம் முதலமைச்சர் சி.வி கோரிக்கை)


மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதை விடுத்து செய்வதாக கூறுகின்ற விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எமது பணிவான கோரிக்கைகளை ஏற்க மறுத்து தம்மை உலகப் பெருந்தலைவர்கள் என பிதற்றிக் கொண்ட பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளமை இந்த அரசாங்கத்துக்கு ஒரு பாடமாக அமையட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில்  சர்வதேச விதவைகள் தின நிகழ்வு நேற்றைய தினம் நல்லூர் ஸ்ரீ துர்க்கா தேவி மணி மண்டபத்தில் நடை பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

மகளிர் விவகாரம் தொடர்பான பிரச்சினைகளை எனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொண்டு வருமுகமாக மகளிர் சம்பந்தமான திணைக்களத்தை எனது அமைச்சின் கீழ் மீளக் கொண்டு வந்துள்ளேன். பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வை வளம்படுத்தல் தொடர்பாக பல விபரங்களையும், அவர்கள் தேவை பற்றியும் எனது அமைச்சின் அதிகாரிகள் தரவுகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர்களின் மிக முக்கியமான தேவைகளை விரைவில் நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற செய்தியை இத் தருணத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன்.

வடமாகாணசபையைப் பொறுத்த வரையில் வட பகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தின் பயனாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், விசேடமாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் விரைந்து உதவ வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளோம். 

எதிர்பாராத வகையில் நிர்க்கதியாக்கப்பட்ட பல குடும்பங்கள் துவண்டு வீழ்ந்துவிடாது அவர்களைத் தாங்கி மீண்டும் அவர்களை இந்த சமூக நீரோட்டத்தில் அங்கத்துவம் பெறக்கூடிய வகையிலும் அவர்களுக்கான தொழில் முயற்சிகளையும் மற்றும் வழிகாட் டல்களையும் வழங்கி அவர்களைத் தமது சொந்தக்கால்களில் நின்று குடும்பப் பாரத்தை தாங்கக்கூடியவர்களாக மாற்றி அமைக்கவும் வேண்டியது எமது தலையாய கட மையாக உள்ளது. 

சாலாவப் பகுதியில் இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு அனர்த்தங் களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு விரைந்து உதவிகளை நல்க வந்திருப்பது பாராட்டப்படக்கூடியது. இது அரசின் கடமையுமாகும். எதிர்பாராத இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான உதவிகள் விரைந்து வழங் கப்படவேண்டும். 

ஆனால் வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட இலட்சோப இலட்சம் மக்கள் உறவுகளை இழந்து, உடல் அங்கங்களை இழந்து, வீடுகளை இழந்து, வாசல்களை இழந்து, பிள்ளைகளை இழந்து, இன்னல்படுகின்றார்கள். ஆகக் குறைந்தது அவர்களின் மிக மிக அடிப்படைத் தேவையாக கருதப் படக்கூடிய உணவுத் தேவைக்கு கூட எந்தவொரு உதவியையும் அரசு வழங்காது தாமதித்து வருவதை நாம் ஏற்க முடியாது. 

ஒற்றுமையாக இருப்போம் எம்முடன் இணைந்து செயற்படுங்கள் என நேசக்கரம் நீட்டுகின்றார்கள். நாங்கள் மறுக்கவில்லை. நீங்கள் தமிழ் மக்களை நோக்கி அவர்களின் குறைகளைக்களையும் நோக்கில் ஓர் அடி முன்னோக்கி வாருங்கள் நாம் பத்து அடி உங்களை நோக்கி வருகின்றோம் எனத் திரும்பத் திரும்ப கூறி வருகின்றோம்.

நடந்தவற்றை மறப்போம் புதிய நல்லுறவை சிருஷ்டிப்போம் என் கின்றார்கள். எப்படி மறப்பது? மறக்கக் கூடிய விதத்திலா தமிழர்களுடன் உறவுகள் பேணப்பட்டு வந்துள்ளன? மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமைந்துவிடாது. நீங்கள் கூறுகின்ற விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள் என்று அரசாங்கத்தை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.  

சகல வசதிகளுடனும் இருந்த மக்களில் எத்தனை ஆயிரம் பேர் அகதி முகாம்களில் ஏதிலிகளாக இன்று கிடக்கின்றார்கள் என்பதை நாம் கருத்தில் எடுக்க வேண்டும். பொது மக்களின் காணிகளை விடுகின்றோம் என்கின்றார்கள். எமது மக்களும் இலவு காத்த கிளியாக தவங்கிடக்கின்றார்கள். இது எப்போது நிறைவேறப் போகிறது என்று எமக்கும் தெரியாது அரசுக் கும் தெரியாது. 

இவ்வாறான செயற்பாடுகளே எம்மைச் சினமடைய வைக்கின்றன. எனினும் எமக்கு ஒரு மன ஆறுதல். அரசு கவனிக்காவிட்டால் என்ன எங்கள் இரத்த உறவு களைப் பாதுகாக்க நாங்கள் உதவ முன்வருகின்றோம் என எத்தனையோ வெளிநாட்டு உறவுகள் மற்றும் உள் @ர் கொடையாளிகள் முன்வந்து கொண்டிருகின்றார்கள். 

இவர்களின் உதவிகள் ஆனைப் பசிக்கு சோளம் பொரி என்பது எமக் குத் தெரியும். ஆனால் அந்த உதவி யாவது கிடைப்பதாக உள்ளதே என்பது ஒரு மன ஆறுதல். இவ்வா றான உதவிகளுடன் நாம் மெல்ல மெல்ல எழுவோம். எம் மக்களின் மன உறுதியும் அயரா உழைப்பும் அவர்களை சுபீட்சமாக வாழ வழி வகுக்கும். 

தற்போதைய அரசிற்கு ஒரு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. தமிழ் மக்களின் இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் இந் நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் உரு வாக்குவதற்கான திட்டங்களை விரைந்து செயற்படுத்துவார்களேயாயின் அவர்கள் அழியாத் தலைவர்களாக எம்மவர்களாலும் ஏன் இலங்கையிலுள்ள ஒட்டு மொத்த சமூகங்களாலும் போற்றி கௌரவிக்கப்படுவதுடன் இவர்களின் பெயர்கள் எமது முன்னைய உலகப் பெருந் தலைவர்களின் பெயர் வரிசைகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை. 

மாறாக எமது பணிவான கோரிக்கைகளை ஏற்க மறுத்து தான் தோன்றித்தனமாக இறுமாப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டகதி என்ன என்பதனையும் அவர்கள் நன்கு அறிவார்கள். 
தம்மை உலகப் பெருந்தலைவர் கள் என பிதற்றிக் கொண்ட பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளமை இந்த அர சாங்கத்திற்கு ஒரு பாடமாக அமையட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.    
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila