இராணுவ ஆயுதக் கிடங்கில் தீ: ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்(இரண்டாம் இணைப்பு)


0 seconds of 0 secondsVolume 90%
Press shift question mark to access a list of keyboard shortcuts
00:00
00:00
00:00
 

நீரை பயன்படுத்தும்போது முன்னெச்சரிக்கை தேவை
கொஸ்கமவில் ஏற்பட்ட தீயை அணைக்க நீரை பயன்படுத்தும் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக கலாநிதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.
தீ விவகாரம்: விசாரணை மேற்கொள்ளுமாறு சீ.ஐ.டியினருக்கு உத்தரவு
கொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்றவுடனேயே, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சீ.ஐ.டியினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுதக் களஞ்சியசாலை தீ: மின்சாரமும் துண்டிக்கப்பட்டது
கொஸ்கம மின்சார உட்பத்தி நிலையம் சற்று நேரத்துக்கு முன்னர் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் அவிசாவளை பிரதேசத்துக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
பாதுகாப்புக் கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தேவை ஏற்படின் சீதாவக்க மின்சார உட்பத்தி நிலையமும் மூடப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால தெரிவித்துள்ளார்.
நாளை அரச அலுவலங்கள், பாடசாலைக்கு விடுமுறை
கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக, அவிசாவளையை அண்மித்த அனைத்துப் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலங்கள் நாளைய தினம் மூடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சலாவ தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்
கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மூவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் காயமடைந்த எவரும், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
மக்கள் வெளியேறிய வீடுகளை பாதுகாக்க இராணுவத்தினர் ரோந்து
கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து குறித்த முகாமை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் கைவிட்டு சென்ற வீடுகளில் உள்ள பொருட்களை பாதுகாக்க இராணுவ வீரர்கள், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மாற்று வீதிகளின் விவரம் அறிவிப்பு
கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து மூடப்பட்ட அவிசாவளை – இரத்தினபுரி வீதிக்குப் பதிலாக, மாற்று வீதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஹன்வெல்ல, பகோட, கிரிந்திவெல, உரபொல, கொங்கல்தெனிய, ருவன்வெல்ல ஆகிய வீதிகள், மாற்று வீதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
‘வதந்தி வேண்டாம்’
கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் வதந்திகளை பரப்பாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்வதாக ஊடகத்துறை பிரதி அமைச்சர் கரு பரணவிதான, டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவி
கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு அவசர உதவிகளை செய்துகொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, சுகாதார சேவைகள் சேவைகள் பணிப்பாளர் பாலித்தவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தயாராக இருக்குமாறு வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தல்
இரத்தினபுரி, கொழும்பு, கரவானெல்ல, பாதுக்க, கம்பளை, இராகமை உள்ளிட்ட வைத்தியசாலைகளை தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவிசாவளைக்கு 20 அம்பியூலன்ஸ்கள் அனுப்பிவைப்பு
சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்தவின் அறிவுறுத்தலின் பேரில் சுமார் 20 அம்பியூலன்ஸ் வண்டிகள் அவிசாவளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதுவரை உயிர் இழப்புகள் எவையும் பதியப்பட்டிருக்கவில்லை
கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினைத் தொடர்ந்து, இதுவரை உயிர் இழப்புகள் எவையும் பதியப்பட்டிருக்கவில்லையென, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் காயமடைந்த எவரும், அவிசாவளை வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
எனினும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில், அவிசாவளை வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டிகள், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பிரதான வீதிக்கு அண்மையில், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் தீ விபத்து
கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிப்பே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தரைப் படை, கடற் படை மற்றும் வான் படையினர் அங்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப் பகுதியைப் பார்வையிட எவரும் செல்ல வேண்டாம் என, ஜயநாத் ஜெயவீர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவ முகாம் தீ விபத்து – வீதிக்கு பூட்டு
கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹைலெவல் வீதியின் ஹன்வெல்லவில் இருந்து கொஸ்கம வரையான பகுதி மூடப்பட்டுள்ளது.
குறித்த முகாமிலுள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிப்பே தீ விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேலும், சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள வீடுகளிலுள்ளவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
இதேவேளை கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அப் பகுதியை கண்காணிக்க விமானப் படை விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, விமானப் படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப் பகுதியில் தீயணைப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila