பொருளாதார மையம் சதிமுயற்சி அம்பலம் சூறையாடல்களை வெளிப்படுத்துகிறார் முதலமைச்சர்


வட மாகாணத்திற்கு பொருளாதார மையமொன்றை தருவது போல் இதுவரை காலமும் கூறிவந்தவர்கள் தற்போது அதனை மதவாச்சியில் அமைக்க கேட்டு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும் சதி முயற்சி அம்பலமாகியுள்ளதாக பகிரங்கமாக தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள மற்றும் கிடைக்க வேண்டி பல திட்ட அமைவுகளை சூறையாட திரைமறைவில் பாரிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தினதும், குமரன் விளையாட்டுக் கழகத்தினதும் உயர்த்தும் கரங்கள் செயற்திட்டத்தினூடாக ராஜா பிளாசா மாதிரிக் கிராமம் 15 வீட்டுத் திட்ட திறப்புவிழா நேற்றைய தினம் நவக்கிரி புத்தூர் தெற்கு, மஸ்கன் வீதியில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

சென்ற திங்கட்கிழமை மத்திய அமைச்சரவை அமைச்சர்களுடன் மற்றைய மாகாண முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. கூட்டத்திற்குச் சென்றதுந்தான் தெரிந்தது வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது. நான் சென்றதால் சதி அம்பலமானது.

வடமாகாணம் நோக்கி எமக்கு பொருளாதார மையமொன்றைத் தருவது போல் இது காறும் பெரிதாகக் கூறி வந்த கிராமிய பொருளாதார அமைச்சர் தன் உள்ளக் கிடக்கையை அன்று வெளியிட்டுவிட்டார். நான் அன்று வருகை தர இருந்ததை அவர் எதிர்பார்க்க வில்லை. அதாவது வடமாகாண மக்களால் பொருளாதார மையத்தை எங்கு நிறுவலாம் என்பதில் ஸ்திரமான நிலைப்பாடு  ஒன்று இல்லாததால் அதனை மதவாச்சியில் அமைக்க வேண்டும் என்று கேட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் வேறு விடயங்கள் என்ற தலைப்பின் கீழ் தமது கருத்தைத் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுடீனும் ஒத்துப் போனார் போல் தெரிந்தது. 

நான் விளக்கமாகக் கூறினால், பொருளாதார மையம் வவுனியாவில் நிறுவுவது சம்பந்தமாக எமக்கு அறிவிக்கப்பட்டதும் ஐந்து இடங்களை அடையாளம் கண்டு அவற்றில் எது சிறந்தது என்று நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துக் கேட்டோம். அவர்கள் தாண்டிக்குளத்திலும் மற்றைய மூன்று இடங்களிலும் அமைப்பது கூடாது என்றும் ஓமந்தையில் அமைப்பதே சிறந்தது என்றும் கருத்து வெளியிட்டார்கள்.  

தாண்டிக்குளத்தில் அமைத்தால் எமது விவசாய கல்லூரியும் விவசாயப் பண்ணையும் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். வேறு பல காரணங்களையும் முன்வைத்தார்கள். எனவே நான் ஓமந்தையில் நிறுவுமாறு அமைச்சரிடம் கேட்டிருந்தேன். அதன் பின் நான் பங்குபற்றாமல் நடந்த மாவட்ட ஒரு ங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ரிஷாட் பதியுதீன் தாண்டிக் குளத்தில் நிறுவ வேண்டும் என்று கூறி முடிவு எடுக்க வைத்தார். இந்தப் பிரச்சினையைத் தொடக்கி விட்டவரே அவர் தான். 

இது பிரச்சினையாகியவுடன் பொருளாதார மையத்தை இழக்கக் கூடாதென்ற காரணத்தினால் நான் அமைச்சர் ஹரிசனைப் போய் நேரில் சந்தித்தேன். அவர் தாண்டிக்குளமும் ஓமந்தையும் தூரமாய்ப் போய்விட்டன. வவு னியா நகரத்தினுள் ஒரு இடம் தரவேண்டும் என்று கேட்டார். இதற்கு வடக்கு நோக்கி அமைதலே உசிதம் இது வடக்குக்குக் கிடைக்க வேண்டிய மையம். எனவே மாங்குளத்தில் அமைப்பதே சிறந்தது. அப்படி இல்லை என்றால் வவுனியாவின் வடக்கில் இருக்கும் ஓமந்தையே சிறந்தது என்று கூறிப்பார்த்தேன். 

அமைச்சர் ஒரேயடியாக நகரத்தினுள் இடந் தாருங்கள் என்று விடாப்பிடியாகக் கேட்டார். எனவே ஒரு வாரத்தினுள் நான் அவர் கேட்ட வாறு ஏ-9 பாதையில் இ.போ.ச பஸ்நிலையத் திற்குப் பின்புறமாக மதவுவைத்த குளத்தில் ஐந்து ஏக்கர் காணிகளை அடையாளங் காட் டினேன். அது ரிஷாட்  பதியுடீன் அமைச்ச ராக இருந்த காலத்தில் அவரின் கோரிக்கைக்கு அமைய ஒரு கம்பனிக்குக் குத்தகைக்கு விடப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

 நான் விசாரித்துப் பார்த்து அப்படியல்ல, குத்தகைக்கு எடுப்பதாக இருந்த  கம்பனி கூறப்பட்ட பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்காமையால் இரண்டு வருடங்கள் சென்ற நிலையில் காணியைத் திரும்பப் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை அவருக்கு எடுத்துரைத்தேன். இது பற்றிய காணி ஆணையாளரின் கடிதமும் கையளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அன்று காலை அமைச்சர் கூட்டத்திற்கு முன்னர் அவர் என்னைச் சந்தித்து அவ்விடம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். 

எந்தவித குத்தகையும் கைச்சாத்திடப்படவில்லை என்று கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. பின்னர் கூட்டத்தில் அவரின் கூற்றின் போது பதில் அளிக்கையில் எம்மைப் பயப்படுத்திக் காரியம் சாதிக்கப் பார்க்கின்றார் அமைச்சர் என்று கூறி வடமாகாணத்திற்கு எப்படி என்றாலும் பொருளாதார மையத்தைத் தர வேண்டும் என்று கூறி நிபுணர்கள் கூடாது என்று  கூறியிருப்பினும் கட்டாயத்தின் பேரில் வேண்டுமானால் தாண்டிக் குளத்தில் அமையுங்கள் என்றேன். முழு அமைச்சர் குழாமிற்குங் கேட்கும் படியாக பொருளாதார மையம் வடமாகாணத்திற்கு அவசியம் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றேன். 

மத்திய அமைச்சர் மதவாச்சிக்குக் கொண்டுபோக ஆவணம் சமர்ப்பித்துள்ளார் என்பதை அமைச்சர் ரிஷாட் அறிந்து கூட மதவாச்சிக்கு எடுத்துச் செல்லும் ஹரிசனை விமர்சிக்காமல் தாண்டிக்குளத்திற்கு எடுத்துச் செல்ல முதலமைச்சர் இணங்கியுள்ளார் என்று ஜனாதிபதிக்குக் கூறினார். தாண்டிக் குளத்தில் அமைக்கத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். ஜனாதிபதியோ சிரித்துக் கொண்டு இல்லை! இதை பிரதம மந்திரியுடன் பேசி சுமூகமான ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றார். 

அமைச்சர் ரிஷாட்டுக்கு தாண்டிக்குளத்தில் அமைப்பதால் எமக்கு ஏற்படப் போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை. விவசாகக் கல்லூரி, விவசாய நிலம், விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை. 

ஆகவே தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன என்பதை உங்கள் கூட்டத்தை மையமாக வைத்து இங்கு வெளிப்படுத்துகின்றேன் என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila