பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஓமந்தையில் அமைப்பதே சரி என்ற தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், அதிகமானோர் நேற்றைய வாக்கெடுப்பில் ஓமந்தைக்கு வாக்களித்ததன் மூலம் ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமையும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என மத்திய அரசு முன்னர் நிபந் தனை விதித்திருந்தது. எனினும் குறித்த இடத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள்ளும் வடக்கு மாகாண சபைககுள்ளும் உறுப்பினர்கள் பிரிந்து ஒருபகுதியினர் தாண்டிககுளத்தி லும் மறுபகுதியினர் ஓமந்தையிலும் அமைக்குமாறும் கோரி யிருந்தனர். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இரண்டு கட்ட பேச்ச்சுவார்த்தைகள் நடத்தியிருந்த போதிலும் அது பயனளிக்காத நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இது தொடர்பில் தாம் தலையிடாதது போல் காட்டிக் கொண்டது.
வடக்கு மாகாண முதலமைச்சர் எடுப்பதே இறுதி தீர்மானம் எனவும் தலைமைப்பீடம் அறிவித்தது.
எனினும் முதலமைச்சர் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே சிறந்தது என முடிவெடுத்த போதிலும் அதனை ஏற்றுக் கொள்ளாத மறுதரப்பு தொடர்ந்தும் எதிர் நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணமே இருந்தது. இந்த இழுபறியின் காரணமாக வடக்கு பாராளுமன்ற மற்றும் மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே கருத்தறிவது என்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையினால் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மாகாண, பாராளுமன்ற உறுப்பினர்களிடயே வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு வாக்குச்சீட்டும் தயாரிக்கப்பட்டு அதில் பொருளாதார மத்திய நிலை யம் ஓமந்தையில் அமைவது சிறந்ததா? மாங்குளத்தில் அமைவது சிறந்ததா? எனவும் குறிப்பிடப்பட்டது. இந்த வாக்கெடுப்புக்கான வாக்களிப்புக்கள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நிலையில், வாக்களிப்புக்கான காலம் நேற்று மதியம் பன்னிரண்டு மணி அளவில் முடிவுக்கு வந்தது.
இந்த முடிவின்படி ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைவதற்கு ஆதரவாக 21 பேரும் தாண்டிக்குளத்தில் அமைவதற்கு ஆதரவாக 05 பேரும் 13 பேர் வாக்களிக்காது நடுநிலைமை வகித்துள்ளனர். இதன்படி வாக்கெடுப்பில் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கே பெரும் பான்மையான வாக்குகள் கிடைத்துள்ளன.
இதில் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிறீதரன், சித்தார்த்தன் வட மாகாண சபை அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்களான விந்தன், கஜதீபன், சர்வேஸ்வரன், அரியரட்ணம், குணசீலன், அன்ரனி ஜெகநாதன், ரவிகரன், சிவனேசன், இந்திரராசா, தியாகராசா, பசுபதிப்பிள்ளை, சிவாஜிலிங்கம்,அனந்தி சசிதரன், சிவயோகன், தர்மலிங்கம் ஆகிய 21 பேர் வாக்களித்திருந்தனர்.
தாண்டிக்குளத்தில் அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன், வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண சபை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி ஆகியோர் வாக்களித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், ஆனோல்ட், அஸ்மின், சிராய்வா, கமலேஸ்வரன், சார்ல்ஸ், சயந்தன், லிங்கநாதன் ஆகியோர் வாக்களிக்கவில்லை.
இவ்வாக்கெடுப்புடன் வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த சர்சைக்குரிய விடயம் நேற்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கின் பொருளாதார துறை சார்ந்தவர்களினா லும் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படு வதே பொருத்தப்பாடானது என முன்னர் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.