யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் நியாயபூர்வமான விசாரணை நடைபெற்றால் அன்றி ஒரு சுமுகமான நிலைமையை ஏற்படுத்த முடியாது என்பது நம் தாழ்மையான கருத்து.
அதேநேரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வருகின்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அமைவிடம் சார்ந்த பண்பாட்டுக் கோலங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற ஒரு இறுக்கமான ஒழுக்கக்கோவையில் உடன்பாடு செய்வதான ஏற்பாடுகளும் அவசியம்.
பல்கலைக்கழகம் என்றால் இன, மத, மொழி வேறு பாடின்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
அதேநேரம் அந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம், அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்கள் என்பன கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பதும் நியாயமானதே.
அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது சைவப் பெருவள்ளல் சேர் பொன். இராமநாதன் அவர்களின் நிலக்காணிக்கையில் உருவானது.
கூடவே பரமேஸ்வரன் ஆலயமும் அமைந்துள்ள வளாகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இருப்பதால் அங்கு தமிழ்ப் பண்பாடே முற்றுமுழுதாக பின்பற்றப்பட வேண்டும்.
பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற மாணவர்கள் எப்படியும் விரிவுரைக்கு வரலாம், எந்த ஆடையும் அணியலாம், ஆண் மாணவர்கள் குடும்பி வைத்திருக்கலாம் என்றெல்லாம் நிலைமை இருப்பதால் பல்கலைக்கழகம் படுபாதளத்துக்குச் செல்லு மேயன்றி அதனால் அறிவுசார் உயர்வை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.
ஆகையால், தமிழ் - சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பீடாதிபதிகள், துணைத் தலைவர்கள், பேரவை உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு நல்ல நோக்குடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒழுக்கக்கோவை ஒன்றை உருவாக்க வேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறுகின்ற மாணவர்கள் அனைவரும் இந்த ஒழுக் கக்கோவைக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டும் என்பது கட்டாய நியதியாக இருப்பதும் அவசியம்.
சிங்கள மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் க.பொ.த உயர்தரத்தில் அல்லது பல்கலைக் கழகத்தில் காதல் என்ற வலைக்குள் நிச்சயம் வீழ்ந்து விடுவர். ஒரு மாணவன் தன் காதலியை துவிச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்வது; வீதியில் நடந்து செல்லும் போது ஒருவரை ஒருவர் தழுவிச் செல்வது எல்லாம் அவர்களிடையே சகயமானது. இது சிங்களப் பிரதேசங்களில் சர்வசாதாரணம். ஆனால் தமிழ் மக்கள் அவற்றை அருவருப்போடு பார்ப்பது வழமை.
எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற சிங்கள மாணவர்கள் தமது காதலிகளான சிங்கள மாணவிகளை துவிச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லும்போது, அதன் தாக்கம் தமிழ்ப் பண்பாட்டில் மிகப்பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சர்வநிச்சயம்.
ஆகையால் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமான - இழுக்கான - தமிழ் மக்கள் விரும்பாத கலாசாரங்களை அடியோடு நிறுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். தனித்து ஆசிரியரை, அதிபரை உடனிருந்தவர்களைக் கைது செய்வதால் மட்டும் எங்கள் சமூகத்தைத் திருத்திவிட முடியாது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களின் காதல் கலாசாரம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். அதுவே நியாயமும் தர்மமுமாகும்.