சுனாமி மீட்பு, புனர்வாழ்வு நடவடிக்கை: சர்வதேசத்தின் பாராட்டுக்களைப் பெற்ற விடுதலைப் புலிகள்

சுனாமி இடம்பெற்ற போது ஒரு நடைமுறை அரசாங்கத்தை வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய பகுதிகளில் சுனாமி மீட்புப் பணிகளையும், புனர்வாழ்வு நடவடிக்கைகளையும் வேகமாகவும், மிகச் சிறப்பாகவும் முன்னெடுத்தார்கள் எனச் சர்வதேச சமூகம் பாராட்டியிருந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள், அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் முன்னாள் தலைவர் பொன் மதிமுகராஜாவின் 18ஆவது ஆண்டு நினைவு நாள் மற்றும் ஆழிப் பேரலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் என்பன நேற்று பிற்பகல் யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
சுனாமிக்குப் பின்னரான முகாமைத்துவக் கட்டமைப்பை இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் செய்வதற்கு ஒப்புக் கொண்டு அதற்கான திட்டங்களெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், அதனை எதிர்த்துச் இலங்கையின் உயர் நீதிமன்றத்திலே வழக்குத் தாக்கல் செய்து பின்னர் அதனைத் தள்ளுபடி செய்தார்கள்.
இன்று வரை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சொத்தழிவுகளுக்கும் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை.
ஆழிப் பேரலை தொடர்பில் எங்களுடைய மக்கள் சரிவர அறியாத காரணத்தால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி தாக்கிய போது இலங்கைத் தீவிலே 24 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர்.
தமிழர் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் 16 ஆயிரம் மக்கள் வரை கொல்லப்பட்டார்கள். இலட்சக் கணக்கானவர்கள் சுனாமியால் உலகமெங்கும் மாண்டார்கள்.
இந்தியாவிலும், தமிழகத்திலும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் மடிந்தார்கள்.
ஆழிப் பேரலை நினைவு தினத்திலே இறந்து போன அத்தனை மக்களுக்கும் எங்களுடைய அஞ்சலியையும், இரங்கலையும் தெரிவிக்கின்ற அதேவேளை,
அவர்களை இழந்து வாடும் அத்தனை குடும்பங்களுக்கும் எங்களுடைய ஆறுதலைத் தெரிவிப்பதுடன் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.
வடமராட்சி கிழக்குப் பகுதியில் சுனாமி காரணமாக 1400 பேர் காவு மரணமடைந்தார்கள்.
இதிலே 700 பேர் வரையானவர்களின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட உடுத்துறை ஆழிப் பேரலைத் துயிலுமில்லம் இன்று(நேற்று) கண்ணீரால் நனைந்த போது அதனைப் பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
சுனாமியில் மரணமடைந்தவர்களுக்கு தொடர்ந்தும் அஞ்சலி செலுத்துவதன் மூலம் எங்களுடைய மக்களின் இழப்பீடு தொடர்பில் மனம் ஆறுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila