யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (16.07.2016) தமிழ் - சிங்கள மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தை எவரும் ஒரு சாதாரண விடயமாகக் கருதிவிடக் கூடாது.
ஏனெனில் அந்த சம்பவமானது தென்பகுதியில் இனக்கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களை மீண்டும் தாக்கி அழித்து, அவர்களின் சொத்துக்களை கபளீகரம் செய்து, அங்கிருந்து அவர்களை துரத்துவதற்கான சதித்திட்டமாக இருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் - சிங்கள மாணவர்களின் மோதல் சம்பவம் அமைந்துள்ளது என்று அனுமானிப்பதில் தவறவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் நடந்த புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் முன்கூட்டியே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் அதிரடியாக கண்டி நடனம் புகுத்தப்பட்டது எனில், இது ஒரு சதித்திட்டம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நிரலில் கண்டி நடனம் இல்லாதபோதும் அதனை உள் நுழைத்தவர்கள் யார்?
கண்டி நடனத்தில் பங்குபற்ற வந்தவர்கள் எங்கிருந்து வந்தனர்? இவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? இந்த ஏற்பாடுகளை செய்தது யார்? என்ற கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறிய உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
உரிய விசாரணை இல்லாமல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இயங்குமாக இருந்தால் அதன் விளைவு தமிழ் மாணவர்களுக்கு மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிறுத்திட்டமான உண்மை.
எனவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டி நடனத்தை அரங்கேற்ற முற்பட்டவர்கள் இனங்காணப்படாதவரை; கண்டி நடனத்தில் பங்கேற்றவர்களை கைது செய்து பொலிஸார் விசாரிக்காதவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்துவது மகாகடினம் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
அதேசமயம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவத்தின் பின்னணியாக அமைந்த கண்டி நடனம் சடுதியாக ஏற்பாடு செய்யப்பட்டதாக ஒருபோதும் இருக்க முடியாது.
ஆக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் அதிகூடிய எண்ணிக்கையில் சிங்கள மாணவர்கள் இருப்பர்.
இச்சந்தர்ப்பத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக கண்டி நடனத்தை நுழைத்தால் தமிழ் மாணவர்கள் குழப்பம் அடைவர்.
இக்குழப்பத்தை சாட்டாகக் கொண்டு தமிழ் மாணவர்களை தாக்க முடியும் என்பதுடன் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை தாக்கினால் அதனை தமக்கு சாதகமாக்கி தென்பகுதியில் ஒரு பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்தலாம் என்பது யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதலின் நோக்கம் என்ற உண்மை உணரப்படக்கூடியது.
எது எவ்வாறாயினும் யுத்தம் முடிந்த கையோடு சிங்கள மாணவர்களை பெரும் எண்ணிக்கையோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுமதித்தமைக்குள் தென்னிலங்கை சூழ்ச்சியுடன் செயற்பட்டது உண்மை என்றால்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் - சிங்கள மாணவர்களிடையேயான முரண்பாடுகள் தொடரவே செய்யும்.
ஆனால் பல்கலைக்கழகத்தை மீள இயக்குவதற்கு முன்னதாக தென்பகுதியில் இருந்து யாழ்.பல்கலைக்கழகத்துக்கு வந்தவர்கள் அனைவரும் மாணவர்களா? அல்லது மாய மான்களா? என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும்.