தளர்ந்தேன் எம்பிரான் எனைத் தாங்கிக் கொள்ளேன்


இனி முடியாது என்றொரு நிலையில் இறைவனை சிக்கனப் பிடித்தலை சரணாகதி என்று கூறுவர். 
இப்போது சரணாகதி அரசியல் என்றொரு சொற்பதமும் நம்மிடையே பரவியுள்ளது.

எதுவாயினும் சரணாகதி என்பது இறைவனை சிக்கனப் பிடித்தலோடு தொடர்புபட்டது.
துரியோதனனின் சபையில் திரெளபதியின் துகில் உரியப்படுகிறது. ஒரு கையால் தன் சேலையைப் பற்றிக் கொண்டு மறு கையை உயர்த்தி பரந்தாமா... என்று அவலக் குரல் இடுகிறாள். 

பரந்தாமனின் உதவி கிடைக்கவில்லை. காரணம் தன் ஒரு கையால் தன் சேலையைப் பற்றிப்பிடித்து விடுவேன் என்ற நம்பிக்கை திரெளபதியிடம் இருந்தது.

இனி தன்னால் முடியாது என்றவுடன் இரு கையையும் உயர்த்தி ஆபத்பாந்தவா காத்தருள் என்று திரெ ளபதி ஓலமிட, அக்கணமே பார்த்தீபன் அவளுக்கு உதவி புரிகிறான்.

ஆக, முடியாது என்ற நிலையில் முற்றுமுழுதாக இறைவனிடம் சரணாகதி அடைவதே இறுதி வழியாக பலருக்கு இருந்துள்ளது.இந்த நிலைமை ஆளுக்காள் வேறுபடலாம். 

தந்தை செல்வநாயகம் ஒரு கட்டத்தில் தமிழ் மக்களை இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றார்.

அக்காலத்து அரசியல் சூழ்நிலைகள்; தன்னோடு இருந்த அரசியல்வாதிகளின் போக்குகள் என்பவற்றை சீர்தூக்கி ஆராய்ந்து இனி முடியாது என்ற கட்டத்தில் கடவுள்தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என அவர் கூறினார். இது தந்தை  செல்வநாயகத்தின் தீர்க்க தரிசனம்.

தந்தை செல்வநாயகத்துடன் இருந்தவர்கள் சிலர் இப்போதும் அரசியலில் இருக்கின்றனர். இவர்கள் அரசியலில் இருந்தால் நிலைமை என்னாகும் என்பதை அன்று உணர்ந்த தந்தை செல்வநாயகம், கடவு ளிடம் தமிழ் மக்களை ஒப்படைத்துவிட்டு இவ்வுலகை விட்டு ஏகினார் என்று கூறுவதில் தவறேதும் இருக்க முடியாது.

ஆம்! தமிழ் மக்களின் இன்றைய நிலைமை அவ்வாறுதான் உள்ளது. தீயவை எதுவோ அவையொல்லாம் எங்கள் வடபுலத்தில் முதன்மை பெற்றுள்ளன.

மதுபான விற்பனையில் வடபுலத்துக்கு முதலிடம், தேவையற்ற தொலைபேசிப் பாவனையிலும் நாமே முதலிடத்தைப் பெற்றுள்ளோம். போதைப்பொருள் பாவனை, மாணவர்களின் குழப்பங்கள், பாடசாலை யில் நடக்கும் விரசமான சம்பவங்கள் என்பவற்றிலும் முதலிடம் காத்திருக்கிறது. இதற்கு மேலாக கல்வி வீழ்ச்சியிலும் நமக்குத்தான் தனியிடம்.

என்ன செய்வது? இவை போர்க்கால சூழலில் இருந்து மீளும்போது வரக்கூடிய நிலைமைகள்தான் அவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்று யாரேனும் ஆறுதலும் அறிவுரையும் கூறினால் யார் கட்டுப்படுத்து வது? எங்கள் அரசியல் என்பது படுகுழியில் வீழ்ந்து பாவப்பழியில் உச்சமடைகிறது.

பதவியாசை அவர்களைப் பக்கம் பிரித்து பாதகம் செய்ய வைக்கிறது. யுத்தத்தின் கொடூரத்தால் உறவு களை இழந்தவர்கள்; அங்கவீனப்பட்டவர்கள்; காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தாங்கமுடியாத வேதனையில் காலங்கழிக்கின்றனர்.

இதுதவிர ஏழ்மையின் கொடுமையும் குடும்பச் சுமையைத் தாங்கும் விதவைப் பெண்களின் ஏக்கமும் எங்கள் மண்ணில் தீராத் துன்பமாயிற்று.

இந்நிலையிலும் எங்கள் அரசியல்வாதிகள் திருந்தவில்லை எனும்போது தளர்ந்துபோய், இறைவா! என்னைத் தாங்கிக்கொள்ளேன் என்று இறைவனை இறைஞ்சுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila