நல்லாட்சியின் பயனை தமிழ் மக்கள் அனுபவிக்க...


நல்லாட்சியின் பயனை தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டனரா என்றால் எதுவும் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

எதுவும் இல்லாத அசைவற்ற நிலைமையை எவரும் ஒரு நல்ல சூழ்நிலை என்று சொல்லவில்லை. ஏனெனில் அசைவற்ற நிலைமையானது மதில் மேல் பூனை போன்றது.

அந்தப்பக்கமா? இந்தப்பக்கமா? என்று தெரியாத ஒரு கட்டம். எனவே எதுவும் அற்றவை ஒரு தற்காலிக அமைதி என்று சொல்லலாமே அன்றி அதுவே உயர்ந்த நிலைமை என்று சொல்லிவிட முடியாது.

ஆக நல்லாட்சி என்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும். இதற்கு மேலாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் எழுகைக்கான உதவிகள் வழிகாட்டல்கள் என்பன  தாராளமாக நடந்தாக வேண்டும்.

இருந்தும் இது எதுவும் நடப்பதாக தெரியவில்லை. ஒரு பெரும் போரை நடத்திய அரசை தேர்தலில் தோற்கடித்து சில கட்டமைப்பு மாற்றங்களை செய்யும்வரைக்கும் பொறுமை அவசியம் என யாரேனும் கூறுவார்களாயின் அதனை அடியோடு நிராகரிப்பதற்கு நாம் தயாரில்லை.

இருந்தும் கட்டமைப்பு மாற்றங்களை செய்வது என்பது அதிரடியாக மேற்கொள்ள வேண்டியது. இது விடயத்தில் எடுக்கும் காலதாமதம் வேறுவிதமான சூழ்நிலையை தோற்றுவித்து விடலாம்.

இத்தகைய சூழல் மாற்றம் என்பது முன்னைய அரசின் குழப்பங்களை மட்டும் குறிப்பிடுவதாக அமையாது. மாறாக நல்லாட்சிக்குள் இருக்கக் கூடிய இனவாதிகள் பொறுப்பான பதவிகளில் இருப்பார்களாயின் அமைதியான இச் சூழலை பயன்படுத்தி தங்களின் ஆதிக்கத்தை அமுல்படுத்த தலைப்படுவர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இப்போது நல்லாட்சியிலிருக்கக் கூடிய அமைச்சர்கள் சிலர் தத்தம் இன நலனை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படுவதை காண முடிகின்றது.

இத்தகைய போக்கு தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் என்பது நிறுத்திட்டமான உண்மை. அன் மைக்காலத்தில் சில அமைச்சர்கள் எழுந்தமானமாக செயற்படுவதை காண முடிகின்றது.

நல்லாட்சி - போருக்கு பின்பான அமைதி என்பவற்றை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பு செய்வது, தமது இன மக்களை அத்துமீறி குடியமர்த்துவது, தமது இனம் சார்ந்தவர்களின் நலனுக்காக மட்டும் செயற்றிட்டங்களை வகுப்பது, தமிழ் இனத்தை அவர்களின் மாகாண அரசை புறம்தள்ளுவது என்ற நயவஞ்சகத்தனம் எழுந்து ஆடுவதை காணமுடிகிறது.

இத்தகைய நிலைமைகள் நல்லாட்சியை விட முன்னைய ஆட்சி பரவாயில்லை என்றதான சிந்தனையை ஏற்படுத்திவிடும்.

அதாவது முன்னைய ஆட்சியில் இப்போது அமைச்சர்களாக இருக்கின்றவர்கள் எல்லை மீறி ஆடமுடியாது. அவ்வாறு ஆடினால் கதிரையால் அடி வாங்கப்படும் நிலைமையும் ஏற்பட்டிருக்கும்.

அந்தளவிற்கு முன்னைய ஆட்சியில் முழு அதிகாரமும் ஒருவரிடம் அல்லது ஒரு குடும்ப உறுப்பினர் களிடம் இருந்தது.

ஆனால் நல்லாட்சியில் அதிகாரங்கள் வல்லவர்களால் எடுத்துக்கொள்ளப்படுவதாக இருக்கின்றது. 

இந்த நிலைமை அடியோடு மாற்றப்பட வேண்டும். இதை மாற்றுவதாக இருந்தால் இதற்கான ஒரே வழி தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது. போர்ப் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களின் புனரமைப்புப் பணிகளை தமிழர் சார்ந்த செயலணி கவனிப்பதென்பதாக நிலைமைகள் மாற்றியமைக் கப்பட வேண்டும்.

அப்போது தான் நல்லாட்சியின் பயனை தமிழ் மக்கள் அனுபவிக்க முடியும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila