திருகோணமலை – குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேரை சுட்டு படுகொலை செய்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதைக் காரணம் காட்டி, அனுராதபுர மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 இராணுவ கோப்ரல்களையும், எல்லாக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாக தீர்ப்பளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குமாரபுரம் படுகொலை அதிர்ச்சித் தீர்ப்பளித்தது நீதிமன்றம்!
திருகோணமலை மாவட்டம் – குமாரபுரப் படுகொலையுடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்களை நிரபராதிகள் என அனுராதபுரம் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கானது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவினை நீதிமன்றம் பிறப்பித்தது.
11.2.1996ஆம் ஆண்டு (20 ஆண்டுகளுக்கு முன்னர்) மூதூர் தெகியத்த இராணுவ முகாமைச் சேர்ந்த 8 இராணுவத்தினர் குடிபோதையில் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 26பேர் கொல்லப்பட்டதுடன் 39 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே தமிழ் மக்களாவர்.
இந்தப் படுகொலை வழக்கில் 8 இராணுவத்தினர் மீது மூதூர் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து 1996ஆம் ஆண்டு குறித்த வழக்கு மூதூர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தவேளையில், குறித்த 8 இராணுவத்தினரும் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், எதிரிகளின் பாதுகாப்புக் கருதியும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் வழக்கு அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள், சிவில் சமூகத்தினர் உட்பட 121 பேர் சாட்சிகளாக மூதூர் காவல்துறையினரால் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வந்த இந்த விசாரணைக்கு குறித்த சாட்சிகளில் 20 பேர் அழைக்கப்பட்டுள்ள போதிலும் 16 பேர் மட்டுமே சமூகமளித்திருந்தமையும் ஏனைய நான்குபேரும் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், 6 இராணுவத்தினரும் நிரபராதிகள் என அனுராதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்து சட்டம் ஒரு இருட்டறை என்பதை நிரூபித்துள்ளது.