வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தினால் வடமாகாண சபை முன்றலில் நாளை 12ஆம் திகதி முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு வட பகுதி மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என யாழ் மாவட்ட கடற்தொழில் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளதுடன் இந்திய மீனவர் பிரச்சினைக்கு வடக்கு மாகாண சபையை ஏன் முற்றுகையிடவேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
யாழ் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சம்மேளனத்தின் தலைவர் வே.தவச்செல்வம் உள்ளிட்ட கடற்றொழிலாளர்கள் மேற்படி அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பாக தற்போது இரு நாட்டு அரசாங்கமும் ஆராய்ந்துவரும் நிலையில் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் இதை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த நடவடிக்கையானது ஒட்டுமொத்தமாக வடக்கில் உள்ள மீனவர்களுடைய பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய நட வடிக்கையாகும்.
இது தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் எம்முடன் பேச்சுவார்த்தையை நடத்தி இது தொடர்பிலான தீர்வினை மேற்கொள்ளவேண்டும். ஒருதலைப்பட்சமாக இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்த முடிவுகளையிட்டு நாம் அடுத்தகட்ட நட வடிக்கைகளுக்கு செல்லநேரிடும்.
அதாவது வடக்கில் 118 சங்கங்களை உள்ளடக்கிய 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவ குடும்பங் களை கொண்ட பலமான அமைப்பாக நாம் இருக்கிறோம். எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாம்தான் உறுதியான கருத்தை கூற முடியும்.
எம்முடன் எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளாமல் தென்னிலங்கையில் உள்ள ஒருசில சக்திகள் தமது அரசியல் வியாபாரம் கருதி இங்கு வந்து எமது மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி தங்களுடைய அரசியல் இலாபத்தை தேட முற்படுகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதன் காரண மாகத்தான் எமது கடல்வளங்கள் அழிக்கப்படுகின்றன. நாங்கள் பலமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இவர்களது செயற்பாடு தடையாக உள்ளது. பணம் கொடுத்து அவர்களை கூட்டிவந்து திருப்பி அனுப்பும் செயற்பாடுகளை மேற் கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் என்று சொல்லும் புதிய அமைப்பு ஒன்று தற்போது இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
அதாவது எதிர்ப்பு போராட்டம் என்பது பலமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த போராட்டத்தின் ஊடாக இரண்டு அரசும் தமது போக்கை மறுபரிசீலனை செய்யக் கூடிய அளவு பலமாக இருக்க வேண்டும். ஆனால் இதை மழுங்கடிப்பதற்காக ஒரு சிலரை கூட்டி வந்து போராட்டத்தை முன்னெடுக்க முற்படுகின்றனர்.
இந்த நடவடிக்கை தொடர்பில் யாருடனும் கலந்துரையாடாமல் இவ்வாறான செயற்பாட்டை மேற் கொள்கின்றனர். வடக்கு மீனவர்கள் பொருளாதார ரீதியாக பல கஷ் டங்களை சந்தித்து வருகின்றார் கள் அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளை முடக்குவதென்பது கவலைக்குரிய விடயம்.
வடக்கு மீனவர்கள் வழமை போன்று தமது தொழில் நடவடிக் கைகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் இப்போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள்.
நாம் வெகுவிரைவில் பெரிய அளவிலான எதிர்ப்பு நடவடிக்கை களில் ஈடுபடவுள்ளோம். அது தொடர்பில் அனைத்து சங்கங்களுடனும் எதிர்வரும் 16ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளோம்.
அதன் பின்னர் இரு அரசுக்கும் எதிராக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கு முன்னர் கடற்பகுதியில் மீன்பிடிப்ப தால் உள்ள பாதிப்பு தொடர்பாக விரிவாக இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் வருகின்ற வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றினை அனுப்பவுள்ளோம்.
வடக்கு மீனவர்களை வைத்து அரசியல் நடத்த முற்படுகின்ற தென்னிலங்கை தீயசக்திகள் தமது செயற்பாடுகளை இதனுடன் நிறுத் திக்கொள்ள வேண்டும். வடக்கில் தமது அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டு தெற்கில் தமது நடவடிக் கைகளை செய்வது பொருத்தமாக இருக்கும்.
அத்துடன் வடமாகாண சபையை முடக்குவதாலோ அதை முற்றுகையிடுவதாலோ எமது பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டால் எமது ஆதரவை கொடுத்திருப்போம். அதைவிடுத்து இலங்கை, இந்திய அரசாங்கங்களுக்கு கொடுக்கும் அழுத்தங்களை தணிப்பதற்கான செயற்பாடாகத்தான் இது அமைகிறது.
எனவே தான்தோன்றித்தன மாக பொதுமக்களை குழப்பும் செயற்பாட்டில் ஈடுபடும் தீயசக்திகளின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க மாட்டோம். அத்துடன் நாளை 12ஆம் திகதி மீனவர்களின் வழமையான செயற்பாடுகள் அனைத்தும் நடைபெறும் என சம்மேளனத்தினர் மேலும் தெரிவித்தனர்.