சிங்கள மக்களிடமும் சிங்கள அரசியல்வாதிகளிடமும் நாம் நிறைய கற்க வேண்டும் என்றிருந்த நிலைமை மேலும் விரிவடைந்து இப்போது சிங்கள மக்களுடன் சேர்த்து முஸ்லிம் மக்களிடமும் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமும் இருந்து நிறைய கற்ற வேண்டும் என்ற உண்மையை உணர்த்தி நிற்கிறது.
சிங்கள மக்கள் தாம் சார்ந்த பெளத்த மதத்தை போற்றுகின்ற உயர்ந்த பண்பு முதல் பெளத்த பிக்குகளை தமது ஆசிரியர்களை, பெற்றோர்களை, பெரியவர்களை மதிக்கின்ற பண்புவரை அவர்களின் சிந்தனை வெற்றிக்கு உதவுகின்றது என்ற உண்மையை ஏற்றுத்தானாக வேண்டும்.
இராணுவ வீரர்களாக இருப்பவர்களிடமும் இறைபக்தி மிஞ்சி நிற்பதை காண முடியும்.
இதேபோன்று அரசியலிலும் அவர்களிடம் இனம் தெரியாத ஒற்றுமை இருப்பதை நாம் நிராகரித்துவிட முடியாது.
போருக்குப் பின்பு மகிந்த ராஜபக்சவின் ஆட்சி நாட்டுக்கு ஆபத்தாகின்றது; குடும்ப ஆட்சிக்கு வழி கோலுகின்றது என்று தெரிந்தவுடன்,
ஒருபோதும் ஒற்றுமைப்பட முடியாது என்றிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றுபட்டன.
நாட்டைப் பாதுகாத்தல் என்பது ஒற்றுமைப் பாட்டின் கோமாக இருந்தது.
அதேநேரம் மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் இருந்து இறக்கினாலும் தமிழர்களுக்கு அவர் செய்த போர்க் கொடுமை தொடர்பில் மகிந்தவுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க சமகாலத்து சிங்கள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
போர்க்குற்றம் நடைபெறவில்லை, சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இடமில்லை, விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற முடிவில் மகிந்தவை வெளியேற்றிய ஆட்சியாளர்கள் மிகவும் இறுக்கமாக இருப்பது இங்கு நோக்குதற்குரியது.
ஆக, மகிந்தவின் ஆட்சியை முடிவுறுத்த வேண்டும் என்று நினைத்தாலும் தமிழர்கள் விடயத்தில் மகிந்த ராஜபக்சவை குற்றவாளியாகக் காண்பதற்கு அனுமதிக்க முடியாது என்பதுதான் சிங்கள அரசியல்வாதிகளின் ஒற்றுமைக்கான உதாரணமாகும்.
இதேபோல் இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்களும் அவர்கள் சார்ந்த அரசியல் தலைமைகளும் தமது இனம், சமய மார்க்கம் என்பதில் மிகவும் இறுக்கமாகவும் அவதானமாகவும் இருக்கின்றனர்.
ஒவ்வொரு முஸ்லிம் குடும்பங்களும் அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் எங்கள் இனம் இந்த நாட்டில் தனது இருப்பை நிலைநிறுத்த முடியும் என்பது தொடக்கம்,
கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் மக்கள் மாகாணமாக ஆக்குதல், அரசுடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை பெற்றே முஸ்லிம் மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவது, இராஜதந்திர ரீதியில் தமிழர்களுக்கு கிடைப்பதை தடுத்து நிறுத்துவது,
அரச தமிழ் ஊடகங்களில் இணைந்து தமது இனம், சமய மார்க்கம் என்பன தொடர்பில் நிறைந்த பிரசாரங்களைச் செய்வது என்பதுவரை முஸ்லிம் மக்களும் அவர் தம் அரசியல்வாதிகளும் மிகவும் ஒற்றுமையுடனும் நிதானத்துடனும் செயற்படுகின்றனர்.
மாறாக இலங்கையில் தமிழினம் தான் அன்று முதல் இன்றுவரை ஆளை ஆள் கடித்துக் குதறி, கிடைக்க வேண்டியதையும் கிடைக்காமல் செய்து ஒற்றுமை இன்றி எல்லாவற்றையும் குழப்பி நாசம் செய்கின்றது.
இதற்கு வீட்டுத்திட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு மாகாணசபையை குழப்பும் சதிவேலை வரை பல உதாரணங்களை காட்ட முடியும்.
கடவுளே! எப்போதுதான் நாம் திருந்துவோமோ அறியோம் பராபரமே.