ஜெனீவாவுக்குப் போதல் – நிலாந்தன்

கட்டுரைகளில் இதற்கு முன்னரும் கூறப்பட்டது போல சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனையில் ஏற்படும் மாற்றமே இலங்கைத் தீவைப் பொறுத்த வரை மெய்யான மாற்றமாகும். அதில் மாற்றம் வராத வரை எந்த ஒரு நிலைமாறு காலமும் மேலோட்டமானது. மேலோட்டமான நிலைமாறு காலச் சூழலை மேலோட்டமான பொறிமுறைகளுக்கு ஊடாகவே அரசாங்கம் கடந்து செல்ல எத்தனிக்கும்.ஒரு அரசியல் செய்முறையை என்.ஜி.ஓக்களின் புரெஜெக்ற்றாகக் குறுக்க எத்தனிக்கும்.

சிங்கள பௌத்;த மேலாதிக்கச் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது ஓர் அரசியல் தீர்மானமாகும். அந்த மாற்றம் ஏற்பட்டால்தான் இலங்கை தீவின் ஜனநாயக சூழலை அதன் மெய்யான பொருளில் பல்லினத் தன்மை மிக்கதாக கட்டியெழுப்பலாம். அப்பொழுதுதான் அரசியலமைப்பும் பல்லினத் தன்மைமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்பும் விதத்தில் மாற்றப்படும். எனவே மூல காரணத்தில் மாற்றம் வராமல் நிலைமாறு கால நீதிச் சூழலலையும் நல்லிணக்க பொறிமுறைகளையும் அவற்றின் அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க முடியாது.

ரணில் விக்கிரமசிங்க பௌத்தத்திற்கு வழங்கப்படும் முதன்மையை மாற்றப் போவதில்லை என்று கூறியிருக்கும் ஒரு பின்னணியில் அந்த சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்தை பாதுகாக்கும் ஒரு போரை வழிநடத்திய தளபதியை ஆளும் கட்சிக்குள் இணைத்துக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில் நல்லிணக்க பொறிமுறைகளையும், நிலைமாறு கால நீதிச் செய்முறைகளையும் அல்ஹ_சைன் நம்புவது போல மேம்படுத்த முடியுமா? அதற்காக வழங்கப்படும் கால அவகாசமானது சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் தன்னை சுதாரித்துக் கொள்வதற்கு உதவுமா? அல்லது அது தன்னை சுய விசாரணை செய்து கொள்ள உதவுமா?

கடந்த 18 மாத கால மாற்றங்களை வைத்துப் பார்த்தால் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் தன்னை சுதாகரித்துக் கொள்கிறது என்றே தோன்றுகிறது. அதே சமயம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ மேலும் தளர்வுறும் நிலைமையே வளர்;ந்து வருகிறது.

நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் பொதுசனங்களின் பங்களிப்பை அல்ஹ_சைனின் அறிக்கை அழுத்திக் கூறுகிறது. இவ்வாறு பொது மக்களின் கருத்தை அறியும் செயலணியின் சந்திப்புக்களின் பொழுது என்ன நடக்கிறது? இங்கு இரண்டு உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம்.

1. தமிழ் மக்கள் மத்தியில் கருத்தறியும் சந்திப்புக்கள் நடத்தப்படும் பொழுது பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் தமக்கு நீதி வேண்டும் என்பதில் ஓர்மமாக இருப்பதை காண முடிகிறது. அதே சமயம் இன்னொரு பகுதியினர் எங்களுக்கு உடனடியாக உதவி தேவை என்று கேட்பதையும் காண முடிகிறது. 

உழைக்கும் நபரை இழந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் உதவிகளையே அதிகம் எதிர்பார்ப்பது தெரிகிறது. அந்த உதவிகளும் கூட மிகவும் அற்பமானவைகள். அப்படி உதவிகள் கிடைத்தால் அவற்றோடு திருப்திப்பட்டு விடக்கூடிய ஒரு மனோநிலையை ஆங்காங்கே காண முடிகிறது. நிலைமாறு கால நீதிச் செய்முறையின் கீழ் தங்களுக்கு உரிய உதவி தரப்பட வேண்டும் என்பதும் அது தங்களுக்குரிய ஓர் உரிமை என்பதும் அந்த மக்களில் அநேகருக்கு தெரியாது. மேற்படி சந்திப்புக்களை ஒழுங்குபடுத்தும் என்.ஜி.ஓக்கள் அல்லது சிவில் அமைப்புக்கள், அல்லது மனித உரிமை அமைப்புக்கள் போன்றவற்றைச் சேர்ந்தவர்களும் இது விடயத்தில் அந்த மக்களை போதியளவு விழிப்பூட்டியதாக தெரியவில்லை. 

மாறாக அற்ப சொற்ப உதவிகளோடு ஆறுதலடையக் கூடிய ஒரு மனோ நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. அந்தளவிற்கு அந்த மக்கள் நொந்து போய் விட்டார்கள். தொடர்ச்சியான சந்திப்புக்கள், திரும்பத் திரும்பப் பதிவுகள் போன்றவற்றால் அவர்கள் சலிப்பும், களைப்பும், விரக்தியும் அடைந்து விட்டார்கள். இது இப்படியே போனால் எங்களுக்கு நீதி வேண்டாம் நிவாரணம் கிடைத்தால் போதும் என்று கூறும் ஒரு நிலைமை வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டி உள்ளது இது முதலாவது.

2. இரண்டாவது உதாரணம் மன்னிப்பு பற்றியது. தற்பொழுது நடைபெற்றுவரும் கருத்தறியும் சந்திப்புக்களின் போது ஒரு தொகுதி கேள்விகள் பொது மக்களிடம் கேட்கப்படுகின்றன. இவற்றில் குற்றம் சாற்றப்பட்டவர்களை மன்னிக்கலாமா? என்ற தொனியிலான கேள்வியும் அடங்கும். சில மாதங்களுக்கு முன்பு களனியில் ஒரு கிறிஸ்த்தவக் குரு மடத்தில் இதையொத்த வேறொரு சந்திப்பு நடந்திருக்கிறது. அதில் சிவில் சமூக பிரதிநிதிகள் பங்குபற்றியிருக்கிறார்கள். 

வளவாளராக பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் உரையாற்றியுள்ளார். அவர் மன்னிப்பு தொடர்பில் தென்னாபிரிக்க உதாரணம் ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளார். தென்னாபிரிக்காவில் ஒரு விசாரணையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும் குற்றவாளிகளையும் வைத்துக்கொண்டு உறவினர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். “குற்றவாளிகளை மன்னிக்க வேண்டுமா அல்லது தண்டிக்க வேண்டுமா”? என்று அதற்கு ஒரு தாய் பின்வருமாறு பதிலளித்தாராம்….. 

“இக்குற்றவாளியைக் காணும் போதெல்லாம என்னுடைய மகனின் நினைவே எனக்கு வருகிறது என்னுடைய பிள்ளை இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் எனக்கு எதையெல்லாம் செய்வானோ அந்தச் சேவைகளை இந்தக் குற்றவாளி எனக்கு மாதத்தில் இரு தடவை செய்து தரட்டும்” என்று மேற்படி உதாரணத்தை அந்த வளவாளர் சுட்டிக் காட்டிய பின் வடக்கிலிருந்து சென்ற ஒரு சிவில் சமூகப் பிரதிநிதி எழுந்து நின்று பின்வருமாறு கேட்;டாராம். “மகனை இழந்த தாய்க்கு நீங்கள் கூறும் அதே உதாரணத்தை கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கும் பொருத்திப் பார்க்க முடியுமா?” என்று இந்தக் கேள்விக்கு வளவாளர் பொருத்தமான பதில் எதையும் கூற வில்லையாம். அதே சமயம் மற்றொரு கருத்தறியும் சந்திப்பில் மன்னிப்பு தொடர்பாகக் கேட்ட பொழுது ஒரு தாய் சொன்னார் “இவற்றைபற்றியெல்லாம் எனக்கு அக்கறையில்லை என்னுடைய பிள்ளையை எனக்குத் தந்தால் போதும்”; என்று.

இதுமட்டுமல்ல இதை விட கொடுமையான ஒரு வளர்ச்சியும் மேற் கண்ட சந்திப்புக்களின் போது அவதானிக்கபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெற்றோரில் பலர்; படிப்படியாக மனப் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். தேற்றப்படவியலா துக்கமும் இழுபட்டுச் செல்லும் நீதியும் சலிப்பும் களைப்பும் ஏமாற்றமும் வறுமையும் அவர்களை (வசயரஅயவணைநன) மன வடுப்பட்டவர்களாய் மாற்றத் தொடங்கி விட்டன. அதாவது சாட்சியங்கள் சோரத் தொடங்கி விட்டார்கள், தளரத் தொடங்கி விட்டார்கள். ஒரு பகுதியினர் நோயாளியாகிக் கொண்டிருக்கிறார்கள், ஒரு பகுதியினர் வயதிற்கு முந்தி முதுமையுற்று விட்டார்கள்.

இதுதான் இழுபட்டுச் செல்லும் நீதியின் விளைவு. இத்தகையதோர் சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் உளவியற் சூழலில் அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த மேலாதிக்கமானது குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதற்கும், சாட்சிகளை சோர வைப்பதற்கும் அல்லது பின்வாங்கச் செய்வதற்கும் அல்லது நீதிக்கு பதிலாக நிவாரணத்தை கேட்கும் ஓர் நிலைமையை நோக்கி சாட்சிகளை தள்ளுவதற்கும் இக்கால அவகாசத்தை பயன்படுத்தாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அதே சமயம் இவ்வாறு அரசாங்கம் தன்னை சுதாரித்துக் கொள்வதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்கும் ஓர் உலகச் சூழலை தமிழ் மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? இனியும் வெளியாரை நோக்கி காத்திருக்கப் போகிறார்களா? அல்லது உள்நோக்கி திரும்பப் போகிறார்களா? இது தொடர்பில் அண்மையில் தமிழ் சிவில் சமூக அமையைத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் சொன்ன கருத்து கவனிப்புக்குரியது. “நாங்கள் வெளிநோக்கி செயற்படுவதை விடவும் கூடுதலான பட்சம் உள்நோக்கியே செயற்பட வேண்டி உள்ளது”. அதாவது தமிழ் மக்களை பலப்படுத்தவும், ஸ்திரப்படுத்தவும், குணமாக்கவும், ஐக்கியப்படுத்தவும் வேண்டியிருக்கிறது என்பதையே இந்த ஆண்டின் ஜெனிவா கூட்டத் தொடர் உணர்த்தி நிற்கிறது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila