65 வருடகாலமாக தமது உரிமைகளுக்காக போராடியதுடன், சமஷ்டி முறையிலான தீர்வினையே வலியுறுத்தி வந்த தமிழ் மக்கள் மத்தியில், ஒற்றையாட்சி தீர்வினை ஏற்றுக்கொள்வதற்கான மனோநிலையை உருவாக்குவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே, மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்கவின் கருத்துக்கள் அமைவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகின்றார்.
புதிய அரசியல்யாப்பு அமைக்கப்படவுள்ள நிலையில், வடக்கு மக்கள் சமஷ்டி முறையிலான தீர்வு திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றும், அவர்கள் ஒற்றையாட்சிக்குள் வாழ்வதற்கு விரும்புவதாவும், புதிய அரசியல்யாப்பு தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்திருந்தார்.
அவரது, கருத்து தொடர்பில், ஆதவன் செய்திப் பிரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குறிப்பிடுகையில், இது எதிர்பார்த்திருந்த ஒரு விடயம் என்றும், கடந்த 2010ஆம் ஆண்டு ஒற்றையாட்சி முறையிலான தீர்விற்கு சர்வதேசம் வலியுறுத்தியதன் காரணமாகவே தாம், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதாகவும் கூறினார்.
அதுமாத்திரமன்றி லால் விஜேநாயக்க, இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவுடன், ஒற்றையாட்சி முறையிலேயே தீர்வு சாத்தியம் என்றும், ஒற்றையாட்சிக்கு அப்பால் தீர்வினைத் தேடுபவர்கள் தீவிரவாதிகள் என்று கூறியதாகவும் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினாலும், வெறுமனே ஆள் மாற்றமே ஏற்பட்டுள்ளதாகவும், இவர்கள் முன்னதாகவே தீர்மானித்த ஒற்றையாட்சி என்ற நிகழ்ச்சி நிரலுக்கு, தமிழ் மக்களை படிப்படியாக தயார்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தினார்.