ஓமந்தையா? தாண்டிக்குளமா? கன்னைபிரிந்து கயிறு இழுங்கள்


வட பகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் நிர்மாணிப்பதா? தாண்டிக்குளத்தில் அமைப்பதா? என்ற பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு வடக்கு மாகாண சபை எக்காலத்திலும் ஒன்றுபட்ட முடிவை எடுக்க கூடாது என்பதை உறுதி செய்துள்ளது.

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்துடையது என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஏலவே கூறியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் தெளிவாக முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்ற முடிவை எடுப்பதற்காக மேற்குறித்த விவகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரிடம் செல்கிறது.

இந்த இடத்தில் தமிழ் மக்களிடம் - வடக்கு மாகாண சபையில் - மாகாண சபை உறுப்பினர்கள், வடபுலத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற தரப்புகளுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று இரா.சம்பந்தர் நினைத்திருந்தால்,

ஓமந்தையா? தாண்டிக்குளமா? என்ற முடிவை எங்கள் மரியாதைக்குரிய வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களே தீர்மானிப்பார்.

அவரின் தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு அவர் கூறியிருந்தால் அதுகண்டு இலங்கை அரசும், இலங்கை மீது கவனஞ்செலுத்தும் உலக நாடுகளும் தமிழர்களின் ஒற்றுமையும் இராஜதந்திரமும் இன்னமும் சேதமடையாமல் உள்ளது என்று நினைத்திருப்பர்.

ஆனால் வடக்கு மாகாணசபையை குழப்ப வேண்டும்; அங்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கன்னைபிரிந்து கயிறு இழுக்க வேண்டும் என்று நினைத்ததன் காரணமாகவே, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இடையே வாக்கெடுப்பு நடத்துவது என்ற முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இடையே வாக்கெடுப்யை நடத்துவதென்பது எங்களிடம் இருக்கக்கூடிய ஒற்றுமை இன்மையையும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை செவிமடுக்காத தன்மை என்பதையுமே வெளிப்படுத்தும்.

அதேநேரம் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வடக்கு மாகாணசபையில் ஒரு பொது உடன்பாட்டிற்கு எவரும் வரப்போவதில்லை என்பது நிறுத்திட்டமான உண்மை.

ஆக, வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பது என்று ஒருசாராரும் தாண்டிக்குளத்தில் நிர்மாணிப்பது என்று மறுசாராரும் கன்னைபிரிந்து வாதம் செய்வர்.

பெரும்பாலும் வடக்கின் முதலமைச்சர் செய்ய நினைப்பதை எப்பாடுபட்டும் எதிர்ப்பது என்ற முடிவில் மிகவும் உறுதியாக இருக்கக்கூடிய- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமைக்கு என்றும் விசுவாசமாக செயற்படும் அன்பர்கள், தமிழ் மக்களின் நலன் என்பது பற்றி சிந்திப்பார்களா என்ற கேள்வியின் மத்தியில்,

அன்புக்குரிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்களே! வடக்கின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களே! தமிழர்களுக்கு கிடைப்பது சரியான இடத்தில் அமைய வேண்டும்.

இங்கு அரசியல் என்பதை விடுத்து எம் இனம் என்று சிந்தித்து செயற்படுங்கள். உங்கள் சிந்தனை நிச்சயம் தமிழ் மக்களிடம் வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila