குறித்த கூட்டம் இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கை கனிம மணல் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கனிம மணலினை அகழ்வது தொடர்பிலும், அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்ட அராசாங்க அதிபர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், படைத்துறையினர், கடற்படையினர், பொலீஸ் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் வனவளபாதுகாப்பு பிரிவினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கான கருத்தமர்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இது அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் ஒரு கருத்தமர்வாகவுள்ளது என்று ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை இதனை தொடர்ந்து இந்த கனிம மணல் அகழ்வு செயற்பாடு தொடர்பில் மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அடுத்த கட்டமாக கலந்துரையாடல் நடத்தப்படும் என்று அதன் பின்னரே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அங்கு வருகை தந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் முன்னர் திருகோணமலை புல்மோட்டைப்பகுதியில் எவ்வாறு கனிம மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாயில் இருந்து நாயாறு வரையான கரையோர பகுதிகளில் கனிம படிவு (இல்மனைட்) காணப்படுவது இனம் காணப்பட்டுள்ளது.
கனிம மணல் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டின் படி கொக்குளாய் பகுதியில் தொழிற்சாலை ஒன்று கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது, இதன் ஊடாக ஐநூறு பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் எனவும், கரைவலை பாடுகளில் கனிம மணலினை அள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கரையோர பகுதிகளில் படியப்படும் கனிம மணல் எடுக்கவேண்டிய தேவை உள்ளது என்பதையும் குறித்த கனிம மணல் எடுக்கப்படும் இடங்கள் மணல் போட்டு நிரப்பப்படும் என்றும் கடற்கரைபகுதியில் இருந்து எடுத்தால் அவை கடற்காற்றுக்கு நிரப்பும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பில் 11 அரச நிறுவனங்கள் சுற்றாடல் தாக்க மதிப்பீடு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசியல்வாதிகளிடம் பேசப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.