வலிகாமம் பிரதேசத்தில் 11 கிராமங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாதெனவும் அதற்குப் பதிலாக இழப்பீடு வழங்கப்படுமெனவும் நேற்று முன்தினம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமிலுள்ள மக்களுக்கு கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புத் தொடர்பாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
காணி விடுவிப்புத் தொடர்பாக அண்மையில் அரசாங்கம் நடத்திய சந்திப்பையடுத்து, நலன்புரி முகாம்களிலுள்ள மக்களுக்கு காணிகள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் அதற்குப் பதிலாக இழப்பீடு வழங்கப்படும் என கடிதம் வழங்கப்பட்டது. மக்கள் இக்கடிதத்தை வாங்காது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மக்களிடம் இக்கடிதத்தில் ஒப்பம் வைக்கவேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடு செய்தபோது, குறித்த கடிதம் குறித்து தமக்கு தெரியாதென்றும் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தம்மால் அவ்வாறானதொரு கடிதம் வெளியிடப்படவில்லையென மீள்குடியேற்ற அமைச்சரிடம் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாகவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
காணி விடுவிப்புத் தொடர்பாக அரசாங்கத்துக்குள் பல குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியாது அவரது செயலர் தன்னிச்சையாக முடிவெடுத்து அனுப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.