படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதில் தாமதங்கள் உள்ளன. காணாமல்போனோர் விடயத்திலும் பிரச்சினைகள் உள்ளன. மீள்குடியேற்றத்தில் தாமதங்கள் உள்ளன. இவ்வாறான விடயங்கள் ஒட்டுமொத்தத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இயல்பு நிலையினை ஏற்படுத்துவதில் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.
போரின் பின்பாகவோ அல்லது ஆட்சி மாற்றத்தின் பின்பாகவோ இனப்பிரச்சினைத் தீர்வு காலதாமதமின்றி முன்வைக்கப்பட்டிருக்குமாயின் அதற்குள்ளாக மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் இயல்பாகத் தீர்த்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன.
எனினும், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்திலும் காணப்படும் இழுபறி நிலைகள் ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்களையே பாதிக்கின்றன. புதிய அரசாங்கம் பெறுப்பேற்று 18 மாதங்கள் கடந்துவிட்டன. கடத்தப்பட்டு காணாமல் போனோர் விடயத்தில் பொறுப்புச் சொல்லுதல் இன்று வரையில் திருப்திகரமானதாக இல்லை.
தற்போது காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைப்பது தொடர்பில் பேசப்படுகின்றது. காணாமல் போனோருக்கான சான்றிதழ் பற்றி விவாதிக்கப்படுகின்றது.
அவ்வாறு சான்றிதழ் வழங்கப்படுவது காணாமல் போனோரின் உறவுகளின் கண்ணீரைத் துடைக்கவே என அரசாங்கம் கூறுகின்றது. எனினும், காணாமல் போனோர் தமது பிள்ளைகள் மீள வரவேண்டும். தமது பிள்ளைகளுக்கு நேர்ந்த கதி தொடர்பில் தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் மஹிந்த தரப்பினரைக்கொண்ட பொது எதிரணியினரால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புக்களையும் தாண்டி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ் அலுவலகம் தொடர்பில் அரசாங்க கடும்போக்காளர்கள் தத்தம் அரசியல் ரீதியிலான நலன்களை முன்வைத்து எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர். எனினும் பாதிக்கப்பட்ட காணாமல் போனோரின் உறவினர் தமக்கு இதற்குள்ளாக நியாயம் கிட்டவேண்டும் என இவ் அலுவலக நடைமுடையில் சில மாற்றங்களையும் உறுதியான போக்கினையும் கோருகின்றனர்.
தமது சான்றிதழோ இழப்பீடுகளோ கால இழுத்தடிப்புக்களோ வேண்டாம். எமக்கு எமது பிள்ளைகளே வேண்டும். இராணுவத்திடம் எனது பிள்ளையைக் கையளித்தேன். பொலிஸார் அல்லது கடற்படையினர் எனது பிள்ளையினைக் கொண்டு சென்றனர்.
அதற்கான ஆதாரங்கள் உண்டு என பெற்றோர் சாட்சியமளித்துள்ளனர். வவுனியாவில் ஜெயவனிதா என்ற தாய் தன் பிள்ளை காணாமல் போன பின்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இன்றைய ஜனாதிபதியுடன் அப் பிள்ளை காணப்படுகின்றார். அதனை ஜனாதிபதி கடந்த தேர்தல் பிரச்சார பிரசுரத்தில் பயன்படுத்தியுள்ளார். ஆகவே தனது மகள் எங்கே எனக் கேட்டு அலைகின்றார்.
இவ்வாறாக வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் சாட்சியமளிககையில் பாதிக்கப்பட்டோரின் உறவுக்கு இவ் அலுவலகம் எதைக் கொடுக்கப் போகின்றது என்பது கேள்வியாகவே உள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தினை நியமிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் இவ்வாரம் வெளிவிவகார அமைச்சர் விளக்கமளிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காணாமல் போனோருக்காக நரகத்திற்கும் செல்லத் தயார் என பாராளுமன்றில் தெரிவித்தார்.
ஆனால் நாம் நரகத்திற்கோ அல்லது ஜெனீவாவுக்கோ செல்லாமல் நாம் காணாமல் போனோருக்குப் பதிலொன்றை பெற்றுக்கொடுப்பதற்குத் தயாராகியுள்ளோம் என்கின்றார். அவர் காணாமல் போனோர் சான்றிதழ் ஒன்றை வழங்குவதன் ஊடாக காணாமல் போனோரின் குடும்பங்களில் நிலவிய காணிப்பங்கீடு, திருமண உறவுகள் போன்றவற்றிலான சட்டச் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அடிப்படையில் இத் தெரிவிப்புக்கள் பல வினாக்களைத் தொடுக்கின்றன?
அதாவது. காணாமல் போனோர் குடும்பங்களில் சொத்துக்களைப் பகிர்தல், உரிமை கொண்டாடுதலில் பலதரப்பட்ட பிரச்சினைகள் உள்ளமை உண்மை தான். எனினும் இன்றுவரையில் காணாமல் போனோரின் உறவினர்கள் யாரும் காணாமல் போனோரால் தமது சொத்துக்களை பகிர முடியாதுள்ளது எனத் தெரிவித்து எந்தப் போராட்டங்களையும் நடத்தவில்லை. மாறாக தங்கள் பிள்ளைகளை கேட்டே தாய்மார் போராடுகின்றனர்.
நாளை மறுதினம் (30) சர்வதேச காணாமல் போனோர் தினம் வருகின்றது. இத் தினத்தில் அவர்கள் மாவட்டம் தேறும் கண்ணீர் சிந்திப் போராடவுள்ளனர். மேலும் கொழும்பில் பேராளர் மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளனர். இவற்றிலும் கூட காணாமல் போனவர்கள் எதனைக் கேட்கின்றனர் என்பது உலகம் அறிந்த விடயமாகப்புலப்படும்.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நல்லிணக்கச் செயற்பாட்டாளருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க யாழிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அவர் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு ஒன்றுக்கு 5 மணிநேரம் தாமதித்தே மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்தார்.
அப்படியிருந்தபோதும் அவரிடம் காத்திருந்து பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்தனர். கூட்டத்தில், மக்கள் கேள்வி நேரத்தின்போது தன்னுடைய பிள்ளையை எப்பொது வீடு திரும்புவார் என காணாமல் போனோரின் தாயொருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சந்திரிக்காவின் பதில் மகிந்தவின் காலத்தில் இடம்பெற்றவை இவை என்ற தொனியில் இருந்துள்ளது. இந்நிலையில் உடனடியாகக் குறுக்கிட்ட மற்றொரு தாயொருவர் உங்களின் ஆட்சிக்காலத்தில் தான் என் பிள்ளை காணாமல் போகச் செய்யப்பட்டது என்று கேட்க உரிய பதில்கள் வழங்கப்படாது இருபது நிமிடங்களுக்குள் சந்திப்பு பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான போக்குககள் எப்போதும் காணாமல் போனோர் விடயத்தில் உறுதியான பதில்கள் இல்லை என்பதைத் தான் காட்டுகின்றன.
இதற்கு அடுத்தபடியாக அரசியல் கைதிகளின் விடுதலை சார்ந்த விடயம் இருக்கின்றது. அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக குடும்பங்களோடு இணைவோம் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். அவர்களது காத்திருப்பு யுத்தத்தின் பின்னர் நியாயமானது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமக்கு விடுதலை கிட்டும் என்ற நம்பிக்கை பொய்த்துப்போக தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தினர். உடலை வருத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். எனினும் அவர்களுக்கான தீர்வுகள் இன்றும் கிட்டவில்லை. உலகமே காட்டுமிராண்டித்தனமானது என்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் கைதிகள் உண்ணா நோம்பிருக்கையில் தமிழ் அரசியல்த் தலைவர்கள் ஊடாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வொன்றை தான் முன்வைப்பேன் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனினும் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் தற்போது மீளவும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் புனர்வாழ்வு அளிக்கப்படத்தக்கோரின் விபரங்களைக் கோரியுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அடிப்படையில் பல ஆண்டுகளாக விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடயத்திலும் கருணை காட்டப்படுவதில் கால தாமதமே நல்லாட்சியிலும் நிலவுகின்றது.
இதுபோன்றே நிலங்களை படையினரின் பிடிக்குள் இருந்து விடுவிப்பதிலும் தாமதங்களே நிலவுகின்றன. ஜனாதிபதி எதிர்வரும் ஆறுமாதங்களுக்குள் மக்களின் நிலங்கள் அவர்களிடம் கையளிக்கப்படும் என யாழில் வைத்து
இவ்வாண்டுத் தொடக்கத்தில் உத்தரவாதம் அளித்திருந்தார். எனினும் அவ் உத்தரவாதம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போதும் யாழ் மாவட்டத்தில் 31 பொரியளவிலான நலன்புரி நிலையங்களில் அரசாங்கத்தின் தகவல்களின் படி மக்கள் வீடு திரும்ப முடியாது தங்கியுள்ளனர். சுயாதீனத் தகவல்களின் அடிப்படையில் 40 வரையான இடைத்தங்கல் முகாம்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் உள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஓரளவுக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் சில பகுதிகளில் இருந்து படையினர் நீங்கியுள்ளனர். எனினும் அது மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இடம்பெறவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் முல்லைத்தீவில் இராணுவத்தினரிடம் இருந்து நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது இலங்கைக்கு ஐ.நா.வின் பொதுச் செயலாளர் விஜயம் அமையவுள்ள நிலையில் இடைத்தங்கல் முகாம்களை மூடுமாறும் அங்குள்ள மக்களை எவ்வாறெனினும் மீளக்குடியேற்றுமாறும் அரசாங்கம் அரச அதிகாரிகளைப் பணித்துள்ளது. உண்மையில் மக்களின் விடயத்தில் அரசாங்கம் பொறுப்பாக நடந்து
கொள்ளுமாயின் ஐ.நா. செயலாளர் வருகின்றார் என இவ்வாறான அவசரங்கள் தேவைப்படாது என்பது யதார்த்தமாகும். இப்படியாக பல பிரச்சினைகள் தமிழ் மக்களை நீடித்த அவலத்திற்குள் தள்ளியுள்ளது. இந் நிலைமைகள் சாராண மனித நேயத்துடன் அனுகப்பட்டு தீர்க்கப்படத்தக்கவை. இவைகளை நிறைவேற்றுவதற்கே நாட்டில் ஏராளமான தடைகளும் தாமதங்களும் காணப்படுமாயின் மிகுந்த அர்ப்பணிப்புடன் அணுகவேண்டிய இனப்பிரச்சினைத் தீர்வு நடவடிக்கையினை நாடு எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற கேள்வியே எழுகின்றது.
காணாமல் போனோரின் விடயங்களை அணுவது மற்றும் அரசியல் கைதிகளை விடுவிப்பது இராணுவத்தினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பது போன்ற விடயங்கள் கூட தெற்கில் மக்களைக் குழப்பும் வகையில் விசமப் பிரசாரமாக மகிந்த தரப்பினர் பயன்படுத்தப்படுகின்றனர். அது மறுப்பதற்கு இல்லை. இவ்வாறானதோர் சூழ்நிலையில் தெற்கில் இடம் பெறும் இனவாதப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு உத்திகளை அரசாங்கம் வகுத்து செயற்பட வேண்டும்.
தெற்கின் கடும்போக்காளர்களைச் சமாளிப்பதற்காக அது தமிழர்களின் பிரச்சினைகளை சரியாக அணுகாது விடுவது நல்லாட்சிக்குக் குந்தகமான விடயமாகும்.போருக்குப் பின்பான சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பொறுப்புச் சொல்ல முன்வரவில்லை. அதனால் போருக்குப் பின்பாக நாடு அடையப்பெற்றிருக்க வேண்டிய பலவிடயங்களை மக்கள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்பார்க்கின்றனர். இந் நிலையில் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து துரிதமாகச் செயற்படவில்லை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இவ்வாரம் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படையில் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் தீர்க்கப்படாது மலிந்தே கிடக்கின்றன. அவற்றிற்காக இன்றும் மக்கள் போராடவேண்டியே இருக்கின்றது. எனவே மனிதாபிமானப் பிரச்சினைகளை தீர்ப்பதில் தடைகள் இருப்பதாக மட்டும் அரசாங்கம் சொல்வதில் நியாயங்கள் கிடையாது. தடைகளைத் தாண்டி அவற்றினை தந்திரோபாயமாக அணுகி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அரசியலையே அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.