இலங்கைத் திருநாட்டை போதையற்ற தேசமாக மாற்றும் நோக்கில் செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் எதிர்வரும் செப்ரெம்பர் 9-ம் திகதி யாழ்ப்பாணத்தில் போதைக்கு எதிரான பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குகிறார்.
போதைவஸ்துப் பாவனையால் இலங்கை மிகப் பெரிய திண்டாட்டங்களை அனுபவித்து வருகின்றது.
அதிலும் குறிப்பாக யுத்தத்துக்குப் பின்னர் வட பகுதியில் போதைப் பாவனை மிக வேகமாக அதிக ரித்திருப்பதை காணமுடிகிறது.
ஒவ்வொருநாளும் போதைப்பொருள் மீட்பு என்ற செய்திக்கு குறைவேயில்லை. நாள்தோறும் வட புலத்தில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன எனும்போது தப்பித்துச் செல்லுகின்ற போதைப் பொருட்களின் அளவு பற்றியும் நாம் கருத்தில் எடுக்கவேண்டும்.
போதைப்பொருள் பாவனையை அடியோடு தடைசெய்வதற்கான முயற்சிகள் பலமுனைகளில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அதற்கான பெறுவனவு இன்னமும் திருப்தியாக இல்லையொன்றே சொல்ல வேண்டும்.
இதற்குக் காரணம்தான் என்ன? என்று ஆராய்ந்தால் தடை செய்ய வேண்டியவர்களே போதைப்பொருள் விற்பனையின் பின்னணியில் இருப்பதான தகவல்களை அறியமுடியும்.
தடுக்க வேண்டியவர்களே தகாத செயலைச் செய்வார்களாயின் குற்றச்செயல்களை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை.
அந்தவகையில் வடபுலத்தில் இப்போது ஏற்பட்டி ருக்கக்கூடிய போதைப்பொருள் விற்பனையின் பின்னணியில் பலமான கரங்கள் உண்டு என்ற உண்மையை நாம் மறந்துவிடலாகாது.
எனவே, இலங்கையில் - வடபுலத்தில் போதைப் பொருள் பாவனையை முற்றுமுழுதாக தடைசெய்ய வேண்டும் என நினைத்தால், அதற்காக அமைக்கப்படும் காவலரண்கள் மிகவும் பலமானதாக இருக்க வேண்டும்.
அதாவது வேலிகள் சரியாக இல்லையொன்றேறால் அல்லது வேலிகளே பயிர்களை மேயுமாக இருந்தால் போதைக்கு எதிராக முன்னெடுக்கின்ற எந்த நடவடிக்கையும் வெற்றி தராது என்பது நம் தாழ்மையான கருத்து.
அதிலும் வடபுலத்தைப் பொறுத்தவரை போதைப் பொருள் கடத்தல் - விற்பனை என்ற விடயத்தில் ஒரு பலமான சமூக விரோதிகள் உள்ளனர் என்று கூறுவது அவ்வளவு பொருத்துடையதன்று.
ஏனெனில் யுத்தத்துக்கு முன்னர் வடபுலம் போதையற்ற ஒரு தேசமாகவே இருந்தது. யுத்தம் முடிந்து, தமிழ் மக்கள் ஒரு அச்சமான சூழ்நிலைக்குள் ஆட்பட்டனரோ அதன் பின்னரே வடபுலத்தில் போதைப்பாவனை அறிமுகமாகி வலுப்பெற்றது.
ஆகவே வடபுலத்தில் இப்போது தலைவிரித்தாடும் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை என்பவற்றின் பின்னணியில் சமூகச் சீரழிவை ஏற்படுத்தல் என்ற நோக்கமும் இருப்பதை அவதானிக்க முடியும்.
ஆக, வடபுலத்து போதைப்பொருள் விற்பனை என்ற விடயத்தில் வேலிகளைச் சரிபார்ப்பதே பொரு த்தமான நடவடிக்கையாகும் வேலிகளைச் சரிபார்க்காமல் எதைச் செய்தாலும் அதன் முடிபு வெற்றியாக அமையாது.