இராணுவம் அழைத்துச் சென்ற என் மகனை காணாது நான் பதறுகையில் ஆடு, மாடு, கோழி தருகிறோம் என்றனர்


வீட்டில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன் 8 வருடங்களாகிய நிலையில் இது வரை வீடு திரும்பவில்லை. அன்றைய சூழ்நிலை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான காலமாக இருந்தது. அதனால் உண்மையை யாரிடமும் கூற முடியவில்லை. ஆனால் தற்போது எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்கள் இராணுவம்தான் என என்னால் உறுதியாக கூறமுடியும் என தாய் ஒருவர் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறி முறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான வலய செயலணி நேற்று 
சனிக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. நல்லிணக்க பொறி முறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை  இ.செபமாலை அடிகளார் தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்த, மன்னாரில் வீட்டில் வைத்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போன இளைஞன் ஒருவருடைய தாய் அவ்வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

வீட்டில் இருந்த எனது பிள்ளையை யார் கொண்டு சென்றது என்று என்னால் அப்போது கூற முடியாது அச்சநிலை இருந்தது. தற்போது கூறுகின்றேன். இராணுவமே எனது மகனை அழைத்துச் சென்றது. துணிந்து சொல்ல தற்போது தைரியம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற போது எமது கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படவில்லை. 

மாறாக விசாரணைகளை மேற்கொண்டவர்கள் எங்களுடைய கவனத்தை திசை திருப்பும் வகையில் வாழ்வாதாரத்திற்காக ஆடு, மாடு, கோழி தருகின்றோம் என பொறுப்பற்ற வகையில் கூறினார்கள். 
இந்த நேரத்தில் எங்களை உரிய பதில் கூற சந்தர்ப்பம் வழங்கவில்லை. இராணுவம் தான் எங்களுடைய பிள்ளைகளை கொண்டு போனது என நாங்கள் கூறியிருக்க முடியும். ஆனால் அச்சநிலைமைகளால் நாங்கள் ஒதுங்கிக்கொண்டிருந்தோம். 

2008 ஆம், 2009 ஆம் ஆண்டுகளில் மன்னாரில் பிடிக்கப்பட்ட, கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களை சுட்டுக் கொன்று விட்டு கண்ட இடங்களில் எல்லாம் சடலங்களை தூக்கி வீசிப்போட்டு சென்றார்கள். 
அந்த சமயத்தில் எனது மகனாக இருக்குமோ என்ற அச்சத்தில் நாங்களும் சென்று குறித்த சடலங்களை பார்வையிட்டோம். 

ஆனால் எனது மகன் எங்கேயும் சுட்டு போடப்படவில்லை. எனது மகன் எங்கேயோ ஒரு இரகசிய தடுப்பு முகாமில் தற்போது வரை உயிரோடு இருக்கின்றான் என நான் முழுமையாக நம்புகின்றேன்.
எனவே காணாமல்போன அனைவரையும் எங்களுக்கு காண்பிக்க வேண்டும். அப்படி காணாமல்போன எமது பிள்ளைகளையும், உறவுகளையும் காட்டமுடியாது விட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று உண்மையை பகிரங்கமாக கூற வேண்டும் என அந்தத் தாய் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila