வரலாறு என்ற சொற்பதம் ஆவணப்படுத்தலில் இருந்து பிறந்தது என்று சொல்வதில் தவறில்லை.
ஆவணப்படுத்தல் இல்லாமல் வரலாறு பற்றி எவரும் பேசமுடியாது. இலங்கையின் வரலாறு பற்றி பேசுகின்றவர்கள் அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நிரூபணம் செய்கின்றனர்.
இன்று இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற இன விவகாரத்தின் பின்னணியில் ஆவணப் படுத்தல்களில் ஏற்பட்ட அக்கறையீனங்கள் காரணமாக உள்ளன என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் தங்களின் வரலாறுகளை ஆவணப்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை என்பது மறுதலிக்க முடியாத உண்மையாகும்.
தென்பகுதிக்குச் சென்றால் அங்கிருக்கக் கூடிய பெளத்தவிகாரைகள், குளங்கள், ஓவியங்கள், கட்டுமானப்பணிகள் தொடர்பில் ஒரு வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவநம்பியதீசன், மகிந்ததேரர், சங்கமித்தை என்பவர்களுடன் வரலாறு தொடுக்கப்பட்டு ஒரு நெறிமுறையில் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக பெளத்த விகாரைகள் அமைந்த வரலாறு, அதன் பின்னணி என்பன அந்த பெளத்த விகாரையிலேயே ஆவணமாகப் பாதுகாக்கப்பட்டு வருவதுடன் அந்த ஆவணங்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் தமிழர்களாகிய நாங்கள் ஆவணப்படுத்தல் என்ற விடயத்தில் முன்பும் கருசனை கொள்ளவில்லை. இப்போதும் கருசனை கொள்ளவில்லை.
இதன் காரணமாக தமிழர்களின் பூர்வீகம், அவர்களின் இருப்பு, அவர்களின் வாழ்விடம் என்பன குறித்த விடயங்களில் திரிபுபடுத்தல்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான திரிவுபடுத்தல்களை முறியடிப்பதற்கான ஒரே வழி ஆவணப்படுத்தல் என்ற ஆதாரங்களாகவே இருக்கமுடியும். இருந்தும் அத்தகைய ஆவணங்களை-ஆதாரங்களை பாதுகாப்பதிலும் அவற்றை மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்துவதிலும் நாங்கள் இன்னமும் முன்னேற்றம் காணவில்லை.
ஆகையால் தமிழ் மக்களின் வரலாறு, தமிழ் மக்களின் வழிபடுதலங்கள் தோன்றிய காலங்கள், அவர்களின் வாழ்வியல்கள், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஆதாரங்கள் என்பவற்றை பேணிப்பாதுகாக்கும் ஆவணக்காப்பகம் வடக்கு மாகாண சபையின் கீழ் அமைக்கப்படவேண்டும்.
இத்தகையதொரு ஆவணக்காப்பகத்தை அமைப்பதற்கும் அங்கு அடையாளச் சின்னங்கள், கல் வெட்டுக்கள், புதைபொருள் ஆராய்ச்சியில் கிடை த்த எச்சங்கள் என்பனவற்றை பாதுகாத்து அவற்றை பொதுமக்களும் வெளிநாட்டவர்களும் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.
இதற்கு மேலாக எங்கள் முன்னோர்களின் வாழ்வியலில் பயன்படுத்தப்பட்டு வந்த வீட்டு உபகரணங்கள், கருவிகள் என அனைத்தும் விற்பனையாகி தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு மிகப் பெரிய இலாபங்கள் வெளிமாவட்ட வர்த்தகர்களால் ஈட்டப்பட்டுள்ளன.
இன்னும் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன என்ற நிலையில், எங்கள் முன்னோர்களின் வாழ்வியல் அடையாளங்களை பாதுகாப்பது தொடர்பிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எங்கள் வரலாறு ஆவணப்படுத்தலின்றி அஸ்தமனமாகி விடும்.