அகிலதாஸிடம் இரவிரவாக ஓடியதை மறந்தாரா சீ.வீ.கே?

வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினில் சுதந்திரக்கட்சி சார்பு உறுப்பினரான அகிலதாஸிடம் கையொப்பம் பெற இரவிரவாக தனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாது கொழும்பு வத்தளைக்கு பயணம் செய்தவர் வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.இப்பொழுது தனக்கு எதுவுமே தெரியாதென புலுடா விடுகின்றாராவென கேள்வி எழுப்பியுள்ளனர் சக மாகாணசபை உறுப்பினர்கள்.
சமகால அரசியல் கருத்தரங்கும், கேள்வி பதில் நிகழ்வும் என்னும் தொனிப் பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதியைச் சேர்ந்தவர்களால் கலந்துரையாடல் ஒன்று நேற்று நீர்வேலி கந்தசாமி கோவில் வடக்கு வீதியில் உள்ள சிறீமுருகன் மாதர் சங்கத்தின் மண்டபத்தில்; நடந்தது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்ட அன்று நான் கட்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். நான் அங்கு போனபோது ஏற்கனவே முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரையப்பட்டு, கணினியில் தட்டச்சு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
முதலமைச்சருக்கு எதிரான அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் முதலாவது என்னுடைய பெயர் இருந்தது. கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் நான் கையெழுத்திடுகிறேன். ஆனால் என்னுடைய பெயரை முதலாவதாக போட வேண்டாம் என நான் இரண்டு மூன்று தடவை சென்னேன்.
இருப்பினும் தொடர்ந்தும் என்னுடைய பெயரைத்தான் தீர்மானத்தில் முதலாவது பெயராகப் போட்டார்கள். என்னுடைய பெயர் முதலாவதாக போட்டதற்கு நான் கட்சியின் மூத்த உறுப்புரிமை என்று சொன்னார்கள்.
இதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. நான் முதலாவதாக கையெழுத்து வைத்துவிட்டேன். என்னால் அங்கு நின்று சண்டை போட முடியாது. இதற்குப் பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப் புறப்பட்டோம்.
நான் வாகனத்தில் ஏறியபோது பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன் என்னுடைய கையில் நம்பிக்கையில்லாத் தீர்மான பைலைத் தந்தார். நான் இத்தீர்மானத்தை கையளிப்பது சரியல்ல. வேறு யாரிடமும் கொடுத்து கையளியுங்கள் என்று அவரிடம் கூறினேன்.
பைலை மீண்டும் அவரிடம் கொடுத்துவிட்டேன். இது உண்மையாக நடந்தது எனவும் சிவஞனம் விளக்கமளித்தார்.
தீர்மானப்பைலை திருப்பி கொடுத்துவிட்டு நான் வாகனத்தில் ஏறினேன். அதற்கு முன்னரே சில வாகனங்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டன. ஆளுநர் அலுவலகத்திற்குள் நான் அவர்களைத் தொடர்ந்து சென்றேன். உள்ளே வருமாறு அழைத்தார்கள். அப்போது சிலர் முன்னுக்குச் சென்றார்கள். எனக்கு பின்னாலும் சிலர் நின்றார்கள்.
ஆளுநரிடம் செல்வதற்காக உள்ளே சென்றபோது வாயிலில் வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மான பைலை என்னுடைய கையில் திணித்து விட்டார்கள் எனவும் சிவஞானம் தெரிவித்தார்.
அச்சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மான பைலை என்னுடைய கையில் திணித்தவர் யார்? என்று எனக்குத் தெரியாது. சம்பந்தருடைய கையில் சிங்கக் கொடியைப் புகுத்தியது போன்றே நம்பிக்கையில்லாத் தீர்மான பைலும் என்னுடைய கையில் திணிக்கப்பட்டது.
எனது கையில் நம்பிக்கையில்லாத் தீர்மான பைல் வந்த பின்னர் அவ்விடத்தில் நின்று என்னுடைய கட்சியை காட்டிக் கொடுக்கவோ, சண்டை பிடிக்கவோ நான் விரும்பவில்லை. நான் அந்தத் தீர்மானத்தை வருத்தத்துடன், முகம் சுழித்தவாறே ஆளுநரிடம் கையளித்தேன். இது தான் உண்மையாக நடந்தது.
நான் சிரித்துக் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கையளிக்கவில்லை. அவ்வாறு வெளியான புகைப்படம் அன்றைய தினம் தீர்மானம் கையளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் வேறொரு சூழலில் நடந்தது எனவும் சிவஞானம் தனது விளக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனையே கேள்விக்குள்ளாக்கியுள்ள முதலமைச்சர் ஆதரவு மாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சரிற்க எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஒப்புதலளிக்கமாட்டேனென கொழும்பினில் பதுங்கியிருந்த சுதந்திரக்கட்சி உறுப்பினர் அகிலதாஸை இரவிரவாக தேடிச்சென்று ஒப்பம் வாங்கியதும் அவருக்கு மறந்துவிட்டதோ தெரியவில்லை.
அதே போன்று பெரும்பான்மையின எதிர்கட்சி உறுப்பினர்களான செனவிரத்ன,ஜெயதிலக ஆகியோரிடம் சென்று கையொப்பம் பெற அலைந்ததும் அவர்கள் திட்டி விரட்டியடித்ததும் கூட வயோதிபம் காரணமாவோ பதவியாசை காரணமாவோ மறந்துவிட்டதாவெனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக முதலமைச்சரை கவிழப்பதற்கு கூட மாகாணசபை நிதியினில் சொகுசு வாகனங்களினில் சுற்றித்திரிந்ததற்கு அவர்கள் பதிலளிக்கவேண்டுமென கேட்டுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila