இலங்கையில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது?


நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசு அமைவதில் தமிழ் மக்களின் வகிபாகம் காத்திரமானது.
எனினும் ஆட்சிக்கு வந்த பின்னர் நல்லாட்சியினரும் தமிழ் மக்களை மறந்துவிட்டனர் என்பதுதான் உண்மை.

இந்த நாட்டில் மிகப்பெரியதொரு யுத்தம் நடந்ததன் காரணமாக தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

யுத்தத்தின் இழப்புகள் வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்புநிலை மிக உச்சமாகியதன் காரணமாக இன்றுவரை தமிழ் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக அலைகின்றனர்.

நடந்து முடிந்த போர் தமிழ் மக்களுக்கு பேரிழப்பைத் தந்தது. உண்மையில் இத்தகையதொரு போரின் கொடுமைக்குக் காரணம் இந்த நாட்டைக் காலத்திற்குக் காலம் ஆட்சி செய்தவர்கள் செய்த கொடுமைத்தனமாகும்.

ஆட்சி செய்கின்றவர்கள் இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு உரிய உரிமை கொடுத்து அவர்களும் சம அந்தஸ்துடன் வாழச் செய்ய வேண்டும்.

ஆனால் தமிழ் மக்களை நசுக்குவது அவர்களின் உரிமைகளை வழங்க மறுப்பது இதற்காக காலத்திற் குக்காலம் தமிழினத்தை துவம்சம் செய்வது என்பதாக கொடூரம் நீண்டு செல்கிறது.

இந் நிலையில் இழப்புகளைச் சந்தித்த தமிழ் மக்கள்தான் விட்டுக்கொடுப்பை செய்ய வேண்டும் என தமிழ் அரசியல் தலைமை கருதுகிறது.

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களே விட் டுக்கொடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பது மகா தவறு.

இலங்கை திருநாட்டில் அமைதியும் நிலைத்த சமாதானமும் ஏற்பட வேண்டுமாயின் பெரும்பான்மை இனமும் விட்டுக்கொடுப்பை செய்யவேண்டும்.

ஆனால் அதற்கு இங்கு இடமே இல்லை தமிழ் மக்களின் வாழ்விடங்களில் புத்த விகாரைகளை அமைப்பதில் தவறில்லை என்று சொல்கின்றவர்கள் தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இராணுவ முகாம்கள் அமைந்திருப்பதும் சரியானதல்ல என்று  சொல்ல மறுக்கின்றனர்.

ஆக நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் நடைபெறவில்லையே தவிர, நில ஆக்கிரமிப்பும் தமிழ் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய அழிப்பும் சர்வசாதாரனமாக நடந்துவருகிறது.

இதன் ஒரு வெளிப்பாடு தான் வடக்கு கிழக்கி லிருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற் றப்படமாட்டாது என்ற இராணுவத் தளபதியின் அறிவிப்பாகும்.

தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இராணுவ முகாம்களை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துவரும் அதேநேரம் தமிழ் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் புத்த விகாரைகளை அமைக்கின்ற நடவடிக்கைகளும் மிகவேகமாக நடக்கின்றதெனில்,
நல்லாட்சியின் போக்கு எவ்வாறு உள்ளதென்பதை நாம் உணர முடியும்.

வடக்குக் கிழக்கில் உள்ள இராணுவத்தினரை படிப்படியாக அகற்றுவோம் என்று இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். அதேநேரம் இராணுவத்தளபதியோ வடக்குக் கிழக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது எனக் கூறுகிறார்.

இப்போது தமிழ் மக்கள் எந்த ஆட்சியின் கீழ் இருக் கின்றனர் என்பதுதான் புரியாமல் உள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila