வேட்பாளர் உண்டோ இங்கு வேட்பாளர் உண்டோ...



அரசியல் என்றாலே தமிழ் மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. அந்தளவுக்கு நம் அரசியல்வாதிகள் மக்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டனர்.
ஒரு காலத்தில் அரசியல் கட்சிகளில், அரசி யலில் ஈடுபடுபவர்களைப் பார்த்து பெருமிதம் கொள்ளும் நிலைமை இருந்தது.

அந்தளவுக்கு அவர்கள் மக்கள் பணியி லும் சமூகப் பணியிலும் ஈடுபட்டனர். அதனால் அவர்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. 

அன்றைய காலத்தில் தேர்தலில் போட்டி யிடுவதற்குக் கடும் போட்டி நிலவியது. கிராம சபை முதல் பாராளுமன்றம் வரை நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக கட்சி களை நாடுவதும் கட்சிக்காக கடுமையாக உழைப்பதும் கட்சித் தலைவர்களிடம் சென்று தேர்தலில் போட்டியிட ஒரு சந்தர்ப்பம் தாருங் கள் என்று கேட்பதுமே அன்றைய வழமை இருந்தது.

அன்று ஒருவர் தேர்தலில் போட்டியிட்டார் என்றால், வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. 
அந்தளவுக்கு அவர் சமூகத்தில் மதிக்கப் பட்டார். நல்ல மனிதர் எவருக்கும் உதவக் கூடி யவர் பதவிக்கு வந்தாலும் யாரும் அணுகக் கூடியவர் என்ற நன்மதிப்பை அவர் பெற்றிருந் தார். ஆனால் இன்று அந்த நிலைமை மலை யேறிவிட்டது. 
இன்று அரசியலில் இருக்கக்கூடிய பலரின் நேர்மைத் தன்மை பற்றியும் இனப் பற்றுதல்  குறித்தும் பல்வேறு வினாக்கள் எழுகின்றன.

இதன் காரணமாக அரசியலில் ஈடுபடுவது தம் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம் கொள்ளும் அளவில் நிலைமை வந்துவிட்டது.
மக்கள் சமூகத்தில் மதிக்கப்படுபவரை ஐயா தேர்தலில் போட்டியிடுகிறீர்களா? என்று கேட் டால், ஏன் நாம் நிம்மதியாக இருப்பது உங் களுக்குப் பிடிக்கவில்லையா? என்று கேட்கு மளவிலேயே இன்றைய சூழ்நிலை அமைந் துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங் கவுள்ள அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வேட்பாளர்களைத் தேடி அலைகின்றனர்.

சமூகத்தில் மதிக்கப்படுவோரின் வீடுகளுக் குச் சென்று வேட்பாளர்களாக நில்லுங்கள் என்று கேட்டதுதான் தாமதம்; அரசியல் வேண் டாம் நம் குடும்பத்தில் அதனை விரும்பமாட்டார் கள் என்பதே பதிலாக இருக்கிறது.
ஆக, இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக் கள் அரசியலை வெறுக்கின்றனர். தேர்தலில் போட்டிடுவதற்கு பலர் பின்னடிக்கின்றனர்.
நடப்பதெல்லாம் எங்களுக்குத் தெரிகிறது. தமிழினத்தின் எதிர்காலம் மிகவும் ஆபத்தாக வுள்ளது என்பதும் புரிகிறது.

ஆனாலும் எங்கள் அறிவு சொல்கிறது வேட்பாளராக நின்றுவிடாதே என்று.
இதனை வடிவேலுவின் நகைச்சுவைப் பாணி யில் கூறினால், கேட்பார்கள் ஆசை வார்த்தை காட்டியும் கேட்பார்கள் ஏன் கெஞ்சியும் கேட்பார் கள் மாட்டேன் என்று சொல்லிவிடு என்பதாக நம் புத்தி அறிவுரைக்கிறது என்று கூறுமள வில் நம் தமிழினத்தின் நிலைமை உள்ளது.
ஆக, இதிலிருந்து தேர்தல் வெற்றி என்பது கூட, வெற்றி என்று உரிமைகோர முடியாதது என்பதே உண்மையாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila