பேராதனையில் அமைந்துள்ள குறிஞ்சிக் குமரன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டுவிட்டு திரும்பிய பேராதனைப் பல்கலைக் கழக்த்தின் முதலாம் வருடத் தமிழ் மாணவர்கள் மீது இரண்டாம் வருட சிங்கள மாணவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். தாக்குதலுக்கு இலக்கானவர்களில் 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலுக்கான காரணங்கள் வெளிவராத போதிலும் இன ரீதியான சிந்தனையின் வெளிப்பாடு என்பது தெளிவாக தெரிகின்றது.
தொடர்ச்சியாக பல்கலைக் கழங்களில் பேரினவாதம் தனது கைவரிசை அவ்வப்போது காண்பித்து வருகின்றது. அந்தவகையில், கடந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்ட்ட மூன்றாவது இனரீதியான தாக்குதலாக குறித்த தாக்குதல் அமைந்துள்ளது.
கிழக்கு பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டித்த மாணவன் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அண்மையில் யாழ். பல்கலைக் கழகத்தில் புதுமுக மாணவர் வரவேற்பின்போது வழக்கிற்கு மாறாக கண்டிய நடனத்தினை புகுத்த முற்பட்டமையினால் மோதல் உருவாக்கப்பட்டிருந்தது.
தற்போது காரணமே இல்லாமல், மத வழிபாடுகளிலே பங்குபற்றி விட்டு திரும்பிய சிறுபான்மையின மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு தொடர்ச்சியாக இன ரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து செல்வதன் பின்னணியில் இனவாத தீயை மூட்டி குளிர்காய நினைக்கின்ற சில தீயசக்திகள் செயற்படக்கூடும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காண்பபடுகின்றது.
அதேவேளை, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றின் அக்கறையீனங்களும் காரணமாக அமைகின்றன என்கின்ற விமர்சனங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நடைபெறுகின்றன சம்பவங்களுக்கு வெளிப்படையான – நீதியான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளபடுவது ஏனையவர்களுக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தும்.
அந்த விடயத்தில் பல்கலைக் கழக நிர்வாகங்களினதும் அவற்றின் உயர் கட்டமைப்புக்களினதும் செயற்பாடு மந்தமானதாகவும் வெளிப்படைத் தன்னையற்றதாகவுமே இருக்கின்றது. இதற்கு மாற்றன் தாய் மனப்போக்கும் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளை கண்டும் காணாமல் இருந்தமையின் தாக்கங்களைத்தான் இன்றும் நாடு அனுபவித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நல்லிணக்கம் புரிந்துணர்வு என்று வகுப்பெடுக்கின்ற அரசியல் ஜாம்பவான்கள் உட்பட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டு விட்டார்கள் என்று ஒப்பாரி வைத்த மனிதாபிமானத்தின் காவலர்களும் ஜனநாயகத்தின் தூண்களும் தமிழ் மாணவர்கள் தாக்கப்படுகின்றபோதும் – பாதிக்கப்படுகின்ற போதும் கும்பகர்ணன்களாக மாறி விடுவது, இந்த நாட்டில் மனிதாபிமானத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இருக்கின்ற அளவுகோல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இந்நிலையில், பேராதனை பல்கலைக் கழக உப வேந்தரின் செயற்பாடுகள் சற்று தெம்பளிக்கும் வகையில் அமைகின்றன. சம்பவம் நடைபெற்றதும் பல்கலைக்கழகத்தினை இழுத்து மூடிவிட்டு மாணவர்களை பேரூந்துகளில் ஏற்றி அனுப்பி நிலமையை மோசமடைய செய்யவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக சந்தித்து “உங்கள் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பு” என்று நம்பிக்கையூட்டும் வகையிலும் பலருக்கு முன்மாதிரியாகவும் செயற்பட்டிருக்கின்றார்.
இதுமட்டும் போதுமானதல்ல, சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தி பல்கலைக் கழக சமூகத்திலும் நிலைமாறுகால நீதியை அமுல்படுத்தி முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பதே பேராதனை பல்கலைக் கழக உபவேந்தர் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் ஆகியவற்றின் மீதான எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இனவாதத்தின் ஊற்றுக்களாக பல்கலைக் கழகங்களை பயன்படுத்த யாரும் முனையக் கூடாது – அனுமதிக்க கூடாது. தவறுவோமாயின் இலங்கை தீவு இரத்த தீவாவகவே தொடருவதற்கு நாம் ஒவ்வொருவரும் பங்காளிகள் எனும் பெருமைக்குரியவர்களாக மாறிவிடுவோம்…
—————————————————————————————
சந்தேகநபர்களே.. விசாரணை நடத்தும் விசித்திரமான நீதிப் பொறிமுறை…
யுத்தக் குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சிறப்பு மேல் நீதிமன்றை அமைப்பதுடன் சர்வதேச கண்காணிப்பாளர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர் பரணகமவினால் அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்திற்கு இடமே இல்லை என்று சக்தி மிக்கவர்கள் எல்லாம் கூறிவருகின்ற நிலையில், கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் சட்டப்படி குற்றமில்லை என்று வியாக்கியானம் கொடுத்தவர் சட்ட வித்துவான் பரணகம. இவர் இவ்வாறு கூறியிருப்பது மேலோட்டமாக செய்தியை பார்ப்பவர்களுக்கு விசித்திரமாக இருக்கலாம்.
ஆனால், உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்று கூறிவருகின்ற தமிழர் தரப்பையும் சர்வதேச பங்களிப்பை உள்வாங்கி நம்பகத் தன்மையை வெளிப்படுத்துங்கள், என்று கூறுகின்ற சர்வதேச சக்திகளையும் திருப்திப்படுத்துவதற்காகவே சர்வதேச கண்காணிப்பாளர்கள் என்கின்ற கண்துடைப்பு வார்த்தை ஒன்று பயன்படுத்தப்பட்டிருகின்றது என்பது ஆழமாய் பார்ப்பவர்களுக்கு புரியும்.
குறித்த அறிக்கையில் சர்வதேச நீதிபதிகளுக்கு எட்டிப் பார்க்கவும் இடமில்லை எனவும் வழக்கு தொடரும் தரப்பாக சட்ட மா அதிபர் திணைக்களம் மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்க வேணுடும் எனவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிபதிகளை கொண்டு வருவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு அவர்களின் முன்னிலையில் விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என்று பரணகம ஆலோசனை வழங்கியிருந்தால் கூட பெரிதாக ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியதில்லை.
ஏனெனில் அதுவும் ஒரு கண்துடைப்பு மட்டும்தான். வேண்டுமானால் என்ன செய்கின்றோம் எதுக்கு செய்கின்றோம் என்று புரியமால் கத்துகின்ற இனவாதிகளுக்கு வாய்க்கு அவலாக அமைந்திருக்கும்.
அவ்வளவு தான்!
பொதுவாக வழக்கு நடைமுறைகளிலே, வழக்கு தொடுக்கின்ற தரப்பினாலே சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்படுகின்ற குற்றத்ததை 100 வீதம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். சிறிதளவு சந்தேகம் இருந்தால்கூட சந்தேக நபர் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது சட்டத்தின் ஏற்பாடு.
ஆக, சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்படுகின்றதா? என்பதை அவதானித்து தீர்ப்பை எழுதுவது மட்டுமே நீதிபதிகளின் கடமை.
இதனை உள்நாட்டு நீதிபதிகள் செய்தாலென்ன சர்வதேச நீதிபதிகள் செய்தாலென்ன வித்தியாசம் பெரிதளவில் இருக்கப் போவதில்லை.
ஆனால் வழக்கு தொடுக்கின்ற தரப்பின் கையில்தான் வழக்கின் மூக்கணாங் கயிறு இருக்கப் போகின்றது. எதைஎதை ஆதராங்களாக முன்னிலைப்டுத்துவது, யார் யாரை சாட்சியங்களாக முன்னிறுத்துவது, வழக்கை எந்த திசையில் கொண்டு செல்வது என்பதையெல்லாம் தீர்மானிக்கும் வாய்ப்பு வழக்கு தொடுக்கும் தரப்பிற்கு காணப்படுகின்றது.
வழக்கு தொடுக்கின்ற தரப்பு ஒருவரை குற்றவாளி என்று நிரூபிப்பதற்குதான் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். குற்றத்திலிருந்து விடுதலை செய்வது என்று தீர்மானித்து விட்டால் குற்றவாளிக்கு சார்பாக வழக்கை அசால்டாக திசை திருப்பி விட்டுப் போகலாம்.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் ஆதாரங்கள் குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை என்றுகூறி சந்தேக நபரை நீதிபதி விடுதலை செய்து வழக்கை முடித்து வைத்து விடுவார்.
சர்வதேச கண்காணிப்பாளர்களாக இருக்கின்றவர்கள் என்னதான் நேர்மையானவர்களாக இருந்தாலும் வழக்கு தொடர்பில் சிறப்பு தரச் சான்றிதழ் கொடுத்துவிட்டு விமானம் ஏறுவதை தவிர ஏதுவுமே செய்ய முடியாது.
இதனால்தான் பரணகம தன்னுடைய அறிக்கையில், வழக்கு தொடுப்பவர்களாக சட்டமா அதிபர் திணைக்களத்தை தவிர யாரையும் நியமிக்க கூடாது என்று உறுதியாக சொல்லியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றக் கூடியவர்கள் மட்டுமே யுத்தகுற்ற விசாரணையில் வழக்கு தொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பது தெளிவாக தெரிகின்றது.
அதாவது இது அவருடைய விருப்பம் அல்ல. அரசாங்கத்தின் விருப்பத்தை வெள்ளோட்டம் விட்டுள்ளார்.
அதாவது, தற்போதைய குடைச்சலாக இருக்கின்ற யுத்தக் குற்ற விசாரணையை எந்த திசையில் கொண்டு சென்று சர்வதேசத்தை வாயடைக்கச் செய்ய அரசாங்கம் திட்டமிடுகிறது என்பது பரணகமவின் அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆக, மறுபக்கமாக பார்த்தால் சந்தேக நபர்களே நீதிபதிகளாகவும் வழக்கு தொடுக்கும் தரப்பாகவும் செயற்படுகின்ற விசித்திரமான நீதிப் பொறிமுறை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்ப்பு வழங்கப் போகின்றது.
அப்பாவி தமிழ் மக்கள் நம்புகின்ற அல்லது நம்ப வைக்கப்படுகின்ற சர்வதேசம் அந்த தீர்ப்பிற்கு நற்சான்றிதழ் வழங்கி ‘சுபம்’ சொல்லப் போகின்றது.
“நல்லாட்சியால் நல்ல சூழல் வந்துள்ளது. யாரும் குழப்பிப் போடாதேங்கோ…” என்கின்ற தரப்பு, சர்வதேச பிரசன்னத்துடன் யுத்த குற்ற விசாரணை நடைபெற்று நீதி நிலைநாட்டப்பட்டமை தங்களுக்கு கிடைத்த வெற்றி என மார் தட்டப் போகின்றது.
ஆனால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள்………..,?