மீள் பிரேத பரிசோதனைக்காக இன்று காலை லசந்தவின் உடலம் தோண்டியெடுக்கப்பட்டபோது, பொரளை மயானத்தில் பிரசன்னமாகியிருந்த அவர் ஊடகவியலாளர்களிடம் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
லசந்தவின் பிரேத பரிசோதனையை முன்னெடுத்திருந்த வைத்தியர் மொஹான் சில்வாவின் அறிக்கைக்கும் அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைக்கும் முரண்பாடுகள் காணப்படுவதாக குறிப்பிட்ட சட்டத்தரணி அதுல, இதன் உண்மைத்தன்மையை கண்டறியும் நோக்கிலேயே சடலத்தை மீள் பிரேத பரிசோதனை செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்ததாக குறிப்பிட்டார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் லசந்தவின் உடலம் மயானத்தில் வைத்தே பரிசோதனை செய்யப்பட்டதோடு, குடும்ப உறவினர்கள் மட்டுமே குறித்த இடத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தார் முன்னிலையில் லசந்தவின் மீள் பிரேத பரிசோதனை ஆரம்பம் (2ஆம் இணைப்பு)
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் உடலம் மீதான மீள் பிரேத பரிசோதனை அவரது குடும்பத்தார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் லசந்தவின் உடலம் சற்றுமுன் தோண்டியெடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அதிகாரிகள் பொரளை கனத்தை மயானத்திற்கு சென்றுள்ளதோடு, அங்கேயே பிரேத பரிசோதனையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்திற்குள் செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தூசு தட்டப்படும் வழக்குகளால் நெருக்கடிக்குள்ளாகும் மஹிந்த அரசு
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நல்லாட்சி அரசாங்கத்தில் துல்லியமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த காலத்தில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருப்பதோடு, அவை கடந்த ஆட்சியாளர்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
குறிப்பாக கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய முக்கிய சம்பவங்களுள் ஒன்றாக கருதப்படும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை, இலங்கையின் ஊடகத்துறைக்கு பெரும் சவாலாக காணப்பட்டிருந்தது.
மஹிந்த ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய லசந்த விக்ரமதுங்க, மஹிந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்திருந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்த போது இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தாம் உயிரிழந்தால் அதற்கு மஹிந்த அரசே பொறுப்பென அவர் தெரிவித்திருந்ததாக கூறும் வகையில், அவர் இறப்புக்குப் பின்னர் வெளியான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, அதற்கு பின்னர் குறித்த கொலை தொடர்பான விசாரணை கிடப்பில் போடப்பட்டது.
கடந்த அரசாங்கத்தில் கிடப்பில் போடப்பட்ட லசந்த, எக்னெலிகொட, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர, வசீம் தாஜூதீன் போன்றோர் தொடர்பான வழக்குகள் நல்லாட்சி அரசாங்கத்தில் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தொடரும் விசாரணைகளில் மஹிந்த அரசாங்கத்தின் தீவிர விசுவாசியாக கருதப்படும் இராணுவ புலனாய்வு அதிகாரி மேஜர் உதாலகம கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு லசந்தவின் சாரதியால் அடையாளமும் காணப்பட்டுள்ளார்.
லசந்தவின் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது உடலத்தை தோண்டியெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு இன்றைய தினம் உடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளது.
லசந்தவின் கொலை தொடர்பாக கடந்த 7 வருட காலமாக நீடித்து வந்த மர்மத்தின் முடிச்சு, அவரது உடலம் மீதான மீள் பிரேத பரிசோதனை மூலம் அவிழ்க்கப்பட்டுவிடும் என நம்பப்படும் அதேவேளை, இச்சம்பவமானது கடந்த ஆட்சியாளர்களை கிலி கொள்ள வைத்துள்ளது. இக் கொலை தொடர்பான உண்மைத் தன்மை கண்டறியப்பட்டால், விடைகிடைக்காத பல குற்றச்செயல்கள் குறித்த உண்மைகளும் வெளிவரலாம் என நம்பப்படுகிறது.