உயிர்வதையைப் புத்தபிரான் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்


இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னரே கண்டிருந்தால் மனிதப் பேரழிவு நடந்திருக்காது என இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மனிதநேயமுள்ள எவரும் ஜனாதிபதி மைத்திரி கூறிய கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வர்.
மனிதப் பேரழிவு தமிழ் மக்களுக்கு ஏற்படலாம் என்று சிங்கள மக்களோ அல்லது சிங்கள மக்களுக்கு ஏற்படலாம் என தமிழ் மக்களோ நினைப்பார்களாயின் அது தர்மமன்று.

மனித அழிவு எங்கு நடந்தாலும் அது தொடர்பில் கண்ணீர் விடுபவனே உண்மையான மனிதனாக இருக்க முடியும்.

மனிதப் பேரழிவில் - மனிதவதையில் - உயிர் கொலையில் இன்பம் காண்பவன் - வெற்றிவாகை சூடுபவன் கொடிய மிருகத்திலும் கொடியவன் என்பது தர்ம நூல்களின் முடிபு.

அந்த வகையில் இலங்கையின் இன விவகாரம் என்பது பண்டா - செல்வா ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்திருந்தால் இன்றைய இலங்கையின் நிலைமை எத்துணை உயர்வாக இருந்திருக்கும் என ஒருகணம் கற்பனை செய்து பாருங்கள்.

இந்த அற்புதமான உயர்நிலையை இழந்து போவதற்கு பேரினவாதத்தின் கொடுமைத்தனம் காரணமாக இருந்தது என்ற உண்மையை  உணர முடியும்.

அழகான இலங்கைத் திருநாட்டில் அழுகண்ணீரும் உயிர்க்கொலைகளும் சித்திரவதைகளும் சிறை வதைகளும் நடந்து இன்று தமிழ் மக்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கே அஞ்சுகின்ற அளவில் நிலைமை இருக்கின்றது. 

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இலங்கைக்கு அடிக்கடி வந்து இன ஒற்றுமையை ஏற்படுத்துங்கள் என்று ஆலோசனை கூறிவிட்டுப் போகின்றனர்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடூரங்களுக்கான விசாரணைகள் இன்று வரை முன்னெடுக்கப்படாமல் கொலைப் பாவம் பாதுகாக்கப்படுகிறது.

இத்தகையதொரு நிலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நடந்து முடிந்த மனிதப் பேரழிவுகள் குறித்து தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆரம்பத்திலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாதது மிகப்பெரும் தவறு என்றும் அந்தத் தவறினால் தான் இந்த நாட்டில் மிகப்பெரிய மனித பேரவலம் நடந்தது எனவும் அவர் தன் மனக்கிடக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

மனிதப் பேரழிவு குறித்து இந்த நாட்டின் ஜனாதிபதி மனம் வருந்துவது போல தென்பகுதியில் இருக்கக்கூடிய மனிதநேயம் மிக்கவர்களும் மனம் வருந்தக்கூடும்.

எதுவாயினும் வன்னிப் பெருநிலப்பரப்பில் நட ந்த மனிதவதைக்கு - மனிதப் படுகொலைக்கு காரணமானவர்கள் நிச்சயமாக அதற்குரிய பாவத்தண்டனையை அனுபவித்தே ஆவர் என்பதில் எந்த

மறுதலிப்பும் இருக்க முடியாது.
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்   தன்நெஞ்சே தன்னைச்சுடும்

என்கிறார் வள்ளுவர் இதுவே உண்மை. இந்த உண்மையை பலரும் உணர்ந்துகொள்ள மறுக்கின்றனர்.
ஆனால் இதுவே நடக்கின்றது. அதற்காக காலம் சிறிது ஆகலாம். காலதாமதம் ஏற்படுவதற்காக, செய்த பாவத்திற்கான தண்டனை இல்லாமல் போகிறது என நினைப்பது அறிவிலித்தனம்.

ஏனெனில் உயிர் வதையை கெளதம புத்தபிரான் ஒருபோதும் மன்னிப்பதில்லை. ஆகையால் செய்தற்கான தண்டனை நிச்சயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைத்தே ஆகும்.

இதுதவிர முன்பு விட்ட தவறு என்று கூறும் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தானும் தவறு செய்து விடாமல் இருக்க, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். அதுவே அவரின் மன ஆதங்கத்தை நியாயப்படுத்துவதாக அமையும்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila