1990ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமல் போனோரின் நினைவுதினம் இன்று நினைவுகூரப்படுகின்றது.
1990ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த 158 தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவத்தினர் சுற்றிவளைத்துக் கைதுசெய்து கொண்டுசென்றனர்.
இதுவரை காலமும் இவர்களுக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் கைதுசெய்யப்பட்டு காணாமல் போன மக்களை ஒவ்வொரு வருடமும் செப்ரெம்பர் மாதம் 5 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இதனை முன்னிட்டு இன்று நண்பகல் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள மட்டக்களப்பு கொம்மாந்துறை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு 25 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை என்ன நடந்ததென்பதுகூட தெரியாத நிலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நினைவு தினத்தை அனுட்டிப்பற்கு பல்கலைக்கழக நிர்வாகம் இடமளிக்கவில்லையெனவும் அம்மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இம்முறையாவது பல்கலைக்கழகத்தில் நினைவுதினத்தை அனுட்டிக்க அனுமதிக்குமாறும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.