சுமந்திரனின் பேச்சுவார்த்தை முடியும் வரை பொறுமையாக இருக்கக் கோரிய முதலமைச்சர்
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கிளிநொச்சி செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இணைத் தலைமைகளான வட மாகாண முதலமைச்சர், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கயன், எஸ்.சிறிதரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இன்றைய கூட்டத்தில் கல்வி, விவசாயம், போக்குவரத்து, நீர்வழங்கல், மீன்பிடி, சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன. உள்ளுர் இழுவை முறை மீன்பிடி காரணமாக இப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும், பாதிக்கப்படும் மீனவர்களிற்கும் அவ்வாறான மீன்பிடி முறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் அல்லது முழுமையாக தடுக்கப்பட வேண்டும் எனவும் மாகாண சபை உறுப்பினர் தவநாதன் கோரிக்கை விடுத்தார். இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மீன்பிடித்துறை அமைச்சருக்கு அது தொடர்பில் ஒரு பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளதாகவும், விரைவில் அதற்கான தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், தீர்வு எட்டப்படாதவிடத்து தமக்கும் இழுவைமுறை மீன்பிடிகைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் மீனவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் குறித்த மீன்பிடி முறையானது தடைசெய்யப்பட்ட முறை எனவும், அவ்வாறு எம்மால் அனுமதி வழங்கினாலும் அம்முறை தடைசெய்யப்படும் எனவும் முதலமைச்சர் தெளிவுபடுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் பேசி தீர்வு எட்டும் காலம் வரை தமக்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என மீனவர்கள் கோரியபோது, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்காகவே குறித்த முறைக்கு உள்ளுரில் அனுமதி வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் எனவும், அதுவரை சற்றுக் காத்திருக்குமாறு முதலமைச்சர் கோரியமையால் குறித்த விடயம் முடிவுக்கு வந்தது.
Related Post:
Add Comments