பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வரும் விதம் குறித்து ஐ.நா செயலாளர் பான் கீ மூனுக்கு, சமாதானம் மற்றும் நீதிக்கான பிரசார அமைப்பின் இயக்குநர் பிரட்கார்வெர் கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
இறுதிப்போரில் தனது மகனை தொலைத்தவரே ஜெயக்குமாரி. இவரைப் போன்று பல தாய்மார் இறுதிக்கட்ட போரில் தமது பிள்ளைகளை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் நிலையில், ஜெயக்குமாரி நடத்தப்படும் விதமானது தமது பிள்ளைகளை பறிகொடுத்த ஏனையவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதென சுட்டிக்காட்டிள்ளார். அத்தோடு, இலங்கையின் உண்மையை அறியும் பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்த ஜெயக்குமாரியை, விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டம் அளிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்து சிறைவைத்ததோடு, அவரது மகளும் சுமார் ஒரு வருட காலமாக சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தார் எனக் குறிப்பிடப்பட்டு கடந்த வருடம் ஜெயக்குமாரி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அத்தோடு, கடந்த ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதியும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பாலேந்திரன் ஜெயக்குமாரி கைதுசெய்யப்படும்போது அவரது அடையாள அட்டை, வங்கிப்புத்தகம் என்பன பொலிஸாரால் பெறப்பட்டதோடு, அவரது பிணை நிபந்தனையாக கடவுச்சீட்டும் நீதிமன்றத்தால் பெறப்பட்டது. எனினும் தொடர்ந்தும் அவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளுக்காக அழைப்பது, மனித உரிமை செயற்பாட்டாளர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா செயலாளர் நாயகம் தற்போது இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இவ்வாறான விடயங்கள் குறித்து கவனஞ்செலுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே பாலேந்திரன் ஜெயக்குமாரியின் விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.