தீர்த்தத் திருவிழா அருளைக் குறிக்கும் பான் கீ மூனின் வருகை எதைக் குறிக்கும்?


இன்று நல்லூரானுக்கு தீர்த்தோற்சவம். பஞ்ச கிருத்தியங்களை உணர்த்துவதாக நடைபெறும் மஹோற்சவத்தில் தீர்த்தத் திருவிழா அருளலைக் குறிப்பதாகும். 

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன பஞ்சகிருத்தியம் என்று சொல்லப்படும் ஐந்தொழிலாகும். 

ஜீவராசிகளின் பொருட்டு தனு, கரண, புவன, போகங்களைத் தந்தருளிய பரம்பொருள் ஐந்தொழிலைப் புரிவதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குவதாக இந்து சமயம் போதிக்கின்றது.

ஒரு சமயத்தின் தத்துவார்த்தங்களை பிற சமயத்தவர்களும் அறிந்திருப்பது நல்லது என்ற அடிப்படையில் மேற்போந்த விடயம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 

இப்போது நாம் கூற வந்த விடயத்திற்கு வரலாம். உலகம் முழுவதிலும் தன் அடியார்களைக் கொண்டுள்ள நல்லூர்க் கந்தப்பெருமானுக்கு இன்று தீர்த்தோற்சவம். அடியார்களுக்கு கந்தப்பெருமான் தன் அருளாட்சியை வழங்குகின்ற நாள் இன்று.

இந்த நாளில் ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவது ஒரு முக்கியமான விடயமாகும். 

ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதற்தடவை என்பதாலும் நல்லூர்க் கந்தப்பெருமானின் அருளல் தினமாகிய தீர்த்தோற்சவத்தன்று ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வருவதும் குறித்துரைக்கக் கூடிய சிறப்பு அம்சமாகும்.

இவை ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற ஐ.நா பொதுச் செயலாளர் எதற்காக வருகிறார் என்ற கேள்வி தமிழ் மக்களின் மனங்களில் இருக்கவே செய்கிறது.

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் சொல்லொணாத்துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றனர். 

தமிழன் என்றால் கண்டபாட்டில் சுட்டுத்தள்ளு என்று படையினருக்கு உத்தரவிட்ட ஆட்சியாளர்கள் இருந்த மண் இது.

இந்தக் கொடூரத்தால் இந்த மண்ணில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தினால் அந்தச் சம்பவங்கள் தொடர்பில் மீட்டல் செய்தால் உலகில் மிகமோசமான இன வக்கிரகம் கொண்ட நாடு இலங்கை என்ற முடிவுக்கு வரமுடியும். 

அந்தளவுக்கு பெரும்பான்மை இனம் சார்ந்த புத்திஜீவிகளும் மத பீடங்களும் அரசியல் தலைமைகளும் படைத்தரப்புகளும் தமிழ் மக்களை எப்படியாவது இந்த நாட்டிலிருந்து அழித்தொழிக்க வேண்டும் என்ற மிக மோசமான வன்மத்துடன் செயற்பட்டனர்.

இதன் விளைவுதான் வன்னிப் பெருநிலப்பரப் பில் நடந்த தமிழின அழிப்பாகும். உலக வரலாற்றில் மனிதப் பேரவலம் நடந்த இடங்களில் ஒன்றாக முள்ளிவாய்க்காலும் பதிவாகிக் கொண்டது.

இருந்தும் இன்று வரை தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா சபை எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அதாவது தமிழ் மக்களுக் கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதன் ஊடாக, தமிழ் மக்களின் உயிருக்கு இன்னமும் ஓர் உத்தரவாதத்தை ஐ.நா செய்துதரவில்லை என்று சொல்வதே பொருத்துடையதாகும்.

இந்நிலையில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று யாழ்ப்பாணம் வருவது தமிழ் மக்களுக்கு உரிமை தருவதற்காக என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர். 

ஆக, நல்லூர் முருகன் அருள் தர அதன் வழி ஐ.நா செயலாளர் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தர ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila