வடக்கின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் போராளி உட்பட 7பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் திருடப்பட்ட பெருமளவான பொருட்களும் கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது,
கடத்த 13ஆம் திகதி வேப்பங்குளப் பகுதியில், வீடொன்றினுள் புகுந்து வீட்டு உரிமையாளரைக் காயப்படுத்திவிட்டு, 35பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பாக முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றது.
இதையடுத்து காவல்துறை அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திஸிரகுமாரஇ உதவி காவல்துறை அத்தியட்சகர் பியசிறி பெனாந்துஇ வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி சோமரட்ன விஜயமுனி ஆகியோரின் வழிகாட்டலில் வவுனியா காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமிந்த செனரத் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக பட்டாணிச்சூர் பகுதியில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலினடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளி மனோகரன் சீலன் நிசாந்தன், வவுனியாவின் பூந்தோட்டம், பட்டக்காடு, பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மதியரட்ணம் திலீப், ஆறுமுகம் விஜயகுமார், அப்துல் ரதீப் முகமட் முஸம்மில், முஸ்தபா ஹாஜ்தீன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவர்களினால் திருடப்பட்ட நகையை விற்பனை செய்ய உதவியவரும், நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் குழுவினர் 2013ஆம் ஆண்டிலிருந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் இருந்து 28 பவுண் தங்க நகை, இரண்டு கைக்குண்டுகள், உள்ளூர் துப்பாக்கி, வாள், இரண்டு கத்திகள், தொலைக்காட்சிப்பெட்டி, தளபாட வேலைகளுக்கு பயன்படுத்தும் 8 இலத்திரனியில் பொருட்கள், இரு நவீனரக மோட்டார் சைக்கிள்கள், போலிக் கைத்துப்பாக்கி, பெண்களின் ஆடைகள், எரிவாயு சிலிண்டர், உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து 550 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முன்னாள் போராளியும் இச்சம்பவம் தொடர்பாகவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.