இலங்கை தீவின் அரசியல் யாப்பு பரிணாமமானது தமிழின ஒடுக்குமுறைக்கான கருவியாகவே வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது ஒவ்வொரு யாப்பு வருகிற போதும் புதிது புதிதாக தமிழின அடக்குமுறைக்கான கைங்கரியங்கள் தந்திரோபாயமாகவும் நேரடியாகவும் உள்ளீர்க்கப்பட்டே வந்தது. இன்று புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. குடிமக்களின் மனித விழுமியங்களை கட்டிக்காத்து பேணுவதிலும் ஒரு நாடு எப்படி இருக்க போகிறது என்பதைக் கட்டமைப்பதிலும் அத்திவாரமாக இருப்பது அரசியல் சாசனமே, அதாவது அரசியல் சாசனம் என்னும் அத்திவாரத்தின் மீதே நாடு என்னும் வீடு கட்டி எழுப்பப்படுகிறது. அரசியல் சாசனம் எந்த அளவுக்கு ஸ்திரத்தன்மை உடையதாக உள்ளதோ அந்த அளவுக்கு நாடும் ஸ்திரத்தன்மை உள்ளதாக இருக்கும். இன்றைய அமெரிக்காவின் வளர்ச்சியை ஆய்வு செய்யும் அனைவரும் மெச்சும் ஒரு அம்சம் அதன் அரசியல் சாசனம், கிட்டத்தட்ட ரெண்டே கால் நூற்றாண்டை கடந்து குறித்த சில சீர்திருத்தங்களோடு வாழும் ஓர் சாசனமாக இருந்து வருகிறது. உலகின் பல முன்னுதாரணங்கள் இருந்தாலும் இலங்கைத்தீவின் அனுபவம் என்பது புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் தமிழ் மக்களுக்கு சந்தேகங்களையும் அச்சங்களையுமே உருவாக்கி நிக்கிறது.
அண்மையில் சம்பந்தன் ஐயா வரப்போகும் அரசியல் சாசனம் யுனிட்டரி பெடரல் முறையில் அமைந்திருக்கும் என்று கூறியிருந்தார், அந்த சொல்லாடல் தமிழர்களுக்கு புதிதான ஒன்றாக காட்சி தந்தது ஆனால் அது ஏற்கனவே உலக அரங்கில் அரசியலாளர்களாலும் அவதானிப்பாளர்களாலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்லாடல் தான். அவதானிப்பின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சொல்லே தவிர அப்படி ஒரு ஆட்சி முறைமை நடைமுறையில் கிடையாது.
யுனிட்டரி பெடரல் என்பதற்கு உலகில் உள்ள ஏனைய அரசியல் அமைப்பு முறைகளை போல கோட்பாட்டு ரீதியான வரையறைகளோ அல்லது எண்ணக்கரு சார்ந்த தெளிவான விளக்கங்களோ இல்லை . மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் போது அதற்கு எதிரான கேள்விகள் எழும்போது அதனை கையாளுவதற்கு அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் பயன்படுத்தும் கவர்ச்சிகரமான சொல்லாகவே இச்சொல் இருந்து வருகிறது. யுனிட்டரி பெடரலுக்கு உதாரணமாக ஓக்லாண்டை அடையாளம் காண்பிக்கப்படுகிறது , சிலர் பிரித்தானியாவை கூட இந்த வகையானது என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியாயினும் இலங்கை தீவின் வரப்போகும் அரசியல் சாசனத்தில் இதன் ஆழம் எப்படி இருக்க போகிறது என்பது தான் நமக்கு தேவையான விடயம்.
சரி ஏன் யுனிட்டரி பெடரல் சொல்லாடலை கொண்டுவருகிறார்கள் ?
அதிகாரத்தை மையமாக வைத்து உலகில் மிகவும் தெளிவான அரசியல் சாசன முறைகள் இருக்கின்றன . யுனிட்டரி , பெடரல், கென் பெடரல், என்பவையே அவை, இவற்றுக்கு தெளிவான கோட்பாட்டு ரீதியான வரையறைகளும் எண்ணக்கரு ரீதியான விளக்கங்களும், நடைமுறை உதாரணங்களும் போதிய அளவு இருக்கின்றது இதை தாண்டி யுனிட்டரி பெடரல் என்னும் தெளிவற்ற ஒரு விடயம் கொண்டு வரப்படுகிறதென்றால் அது யாரோ ஒரு சாராரின் தேவையை நிறைவேற்றுவதற்கானதாகவே இருக்க முடியும் அந்த தேவை நிறைவேற்றல் இன்னொரு பகுதியை ஏமாற்றுவதாகவும் அமையலாம்.
ஸ்ரீலங்காவின் அனுபவத்தை வைத்து பார்க்கும் போது யுனிட்டரி தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்கான கவசமாக பெடரலை தன்னருகில் வைத்திருக்குமே தவிர சம அந்தஸ்து வழங்கி வைத்திருக்க போவது கிடையாது.
இத்தீவை பொறுத்தவரையில் யுனிட்டரி பெடரல் ஒரு விலாங்கு மீனை போலவே இருக்க போகிறது. விலாங்கு மீனின் வால் பாம்பை போன்றது அது தன்னை நிலை நிறுத்தி கொள்வதற்காக மீனைக்கண்டால் தலையை காட்டும் பாம்பை கண்டால் வாலைக்காட்டும் ஆனாலும் அடிப்படையில் அது மீன் இனம் தான். இங்கே சிங்கள மக்களுக்கு மீனின் தலையான யுனிட்டரி காட்டப்பட போகிறது தமிழ் மக்களுக்கு வாலான பெடரல் காட்டப்பட போகிறது ஆயினும் அடிப்படையில் அது யுனிட்டரியாகவே இருக்கப்போகிறது.
சம்பந்தன் ஐயா அடிக்கடி ஒரு விசுவாச பிரமாணத்தை உச்சரித்து கொள்ளுகிறார். மைத்திரி, ரணில், சந்திரிக்காவை நம்புகிறேன் என்பதே அது. ஐயாவின் இந்த நம்பிக்கையை சரணாகதி தத்துவத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள முடிகிறதே ஒழிய சாணக்கிய தத்துவத்தில் வைத்து பார்க்க முடியவில்லை.
ஆரம்பத்தில் பெடரல் என்றார்; பின்னர் குவாசி பெடரல் என்றார்; இப்போது யூனிடேரி பெடரல் என்கிறார். கழுதை தேஞ்சு கட்டெறும்பா போனாலும் பரவாயில்ல நுள்ளானாய் போய் நிக்குது. இந்த நுள்ளானும் மிஞ்சுதோ தெரியாது அதுவும் மிஞ்சாட்டிக்கு மறுபடியும் முதலில் இருந்து வரவேண்டி இருக்கும்.
தீர்வு என்னும் விடயத்துக்காக ஒரு இனத்துக்கு கிடைக்க வேண்டிய நீதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு அடகு வைத்திருப்பதாகவே உணரமுடிகிறது, சர்வதேச விசாரணை தொடர்பாக அவர்கள் காட்டி வரும் அக்கறையும் சிரத்தையும் இதனை புடம் போட்டு காட்டி நிக்கிறது
எது எப்படியாயினும் வரும் குறித்த காலப்பகுதிக்குள் ஒன்று வர போகிறது அது தீர்வு பொதியா ? அல்லது தமிழ் மக்களை நோக்கி வரும் தீர்வு பொறியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இளையவன்னியன்