பயங்கரவாத தடுப்பு பிரிவு ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரித்து செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பின் சிறிலங்காவுக்கான தலைவர் டக்ஷான் டயஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களை கைது செய்யும் போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழு வகுத்திருந்தது.
இதன்படி இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி பாதுகாப்பு தரப்புக்கு அறிவுறுத்தி இருநதார். ஆனால் பாதுகாப்பு தரப்பினர் இதில் ஒரு பரிந்துரையையேனும் நடைமுறைப்படுத்தவில்லை.
அண்மைக்காலமாக கைது செய்யப்பட்ட பலர் கேட்டுக் கேள்விகள் இல்லாமலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பரிந்துரைப்படி கைதாகின்றவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தவோ, அவர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிவழங்கவோ, கைது செய்கின்ற அதிகாரி குறித்த விபரங்களை வழங்கவோ இல்லை. இது கண்டனதுக்கு உரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.