போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை இராணுவத்தினால் ஆண்டுதோறும் ஒழுங்கு செய்யப்பட்டு வரும், பாதுகாப்புக் கருத்தரங்கு, கடந்த 1ம் , 2 ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்றது.
“மென்சக்தி மற்றும் பூகோள விவகாரங்களில் அதன் செல்வாக்கு” ‘Soft Power and its Influence on Global Issues’ என்பதே இந்தக் கருத்தரங்கின் தொனிப்பொருளாக, அமைந்திருந்தது.
இதுவரை இலங்கை இராணுவம் நடத்தியிருந்த பாதுகாப்புக் கருத்தரங்குகளின் மைய நோக்கில் இருந்து மாறுபட்ட விதத்தில் இந்தக் கருத்தரங்கிற்கான தொனிப்பொருள் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
2010ம் ஆண்டு முதல்முறையாக இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கை இலங்கை இராணுவம் ஆரம்பித்த போது, தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இலங்கை இராணுவத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு அனுபவப் பகிர்வுக் கருத்தரங்காகவே நடத்தப்பட்டது.
அதாவது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை இராணுவம் எவ்வாறு வெற்றி கொண்டது, இதன் போது கையாளப்பட்ட உத்திகள், தந்திரோபாயங்கள் என்பதை பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்காகவே ஆரம்பத்தில் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
தீவிரவாதத்தை ஒழிப்பதில் இலங்கை இராணுவத்தின் முன்னுதாரணத்தை, இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் நாடுகள் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தவே இலங்கை இராணுவம் இத்தகைய கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தது.
புலிகளுக்கு எதிரான போரில் இடம்பெற்ற மீறல்களை சுட்டிக்காட்டி, இத்தகைய மோசமான முன்னுதாரணத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தாலும், புலிகளுக்கு எதிரான போரில் பெறப்பட்ட வெற்றியின் பின்னாலுள்ள விடயங்களை ஆய்வு செய்யவும், கற்றுக் கொள்ளவும் பல்வேறு நாடுகளும் முண்டியடித்தது உண்மை.
மிக வலுவான அமைப்பாக- உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அமைப்பாக இருந்த விடுதலைப் புலிகளையே தோற்கடித்ததால் தான் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அப்போது மாறியிருந்தது.
இலங்கை இராணுவத்தின் எதிரியை வைத்தே அதன் திறனும், உத்திகளும் மதிப்பீடு செய்யப்பட்டன.உலகின் முன்னணிப் போராட்ட அமைப்பாக கருதப்பட்ட, விடுதலைப் புலிகளையே தோற்கடித்துவிட்ட ஒரு இராணுவத்திடமிருந்து உத்திகளையும் உபாயங்களையும் கற்றுக் கொள்வதற்கு உலகின் முன்னணி நாடுகள் எல்லாம் முண்டியடித்தன.
அந்த உபாயங்களும் உத்திகளும், தமக்கு எவ்வாறு உதவும் என்றும், அவற்றை எவ்வாறு தாம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளும் அறிந்து கொள்ளவும், ஆய்வு செய்யவும் முயற்சித்தனர்.
இரண்டு, மூன்று ஆண்டுகள் மட்டும்தான், இலங்கை இராணுவம் தனது போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், அதனை வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களுக்கு சந்தைப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புகள் இருந் தன.
அதற்குப் பின்னர், இலங்கை இராணுவத்தின் போர் அனுபவங்களை செவிமடுக்க வெளிநாட்டு இராணுவ நிபுணர்கள் தயாராக இருக்கவில்லை. இதனால், ஆண்டுதோறும் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கின் தொனிப்பொருளை மாற்றியமைக்க வேண்டிய நிலை இராணுவத்துக்கு ஏற்பட்டது.
சர்வதேச பாதுகாப்பு சவால்களை ஒட்டியதாக, இந்தக் கருத்தரங்கின் தொனிப்பொருள் ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறான சூழலில்தான் இந்தமுறை மென்சக்தி மற்றும் பூகோள விவகாரங்களில் மென்சக்தியின் செல்வாக்கு என்ற பொருளில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.வன்சக்தியைக் கையாண்டே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை இராணுவம் வெற்றி கொண்டது.
அதன் விளைவுகளால் தான், இலங்கை இராணுவம் சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகளையும் சுமந்து நிற்க நேரிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை கொழும்பில் பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில், வன்சக்தியே ஒரு முக்கியமான மூலோபாயமாக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும், ஆனால், நவீன காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில், மென்சக்தி இன்னும் பயனுள்ளதாக இருக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.
வன்சக்தியைப் பிரயோகிக்கும் போது, நண்பர்களை விட எதிரிகளையே அதிகம் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்றும், ஆனால் மென்சக்தியின் மூலம் அதிகளவு நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.பொதுவாகவே, எந்த நாட்டு இராணுவத்துக்கும் மென்சக்தி என்பது ஆச்சரியத்துக்குரிய விவகாரமாகவே இருக்கும்.
ஏனென்றால் இராணுவம் என்பது, வன்சக்தியின் அடிப்படைக் கோட்பாட்டின் மீது கட்டமைக்கப்பட்ட ஓர் அமைப்புதான். இலங்கை இராணுவம் மாத்திரம் அதற்கு விதிவிலக்கானதாக இருக்க முடியாது.
ஆனாலும், தற்போதைய சூழலில் இலங்கை இராணுவத்தின் கவனம் மென்சக்தியின் மீது திரும்பியுள்ளதற்கு அல்லது திருப்பி விடப்பட்டுள்ளதற்கு காரணங்கள் உள்ளன.
புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையில், மென்சக்தியைக் கையாளுவதன் மூலமே, இலங்கை இராணுவம் தனது இலக்குகளை அடையலாம் எனப் பலரும் கணிப்பிடுகின்றனர்.
வடக்கில் பெருமளவு படைகளை நிறுத்தி வைத்தல் என்பது இலங்கை இராணுவத்தின் பிரதான மூலோபாயமாக இருக்கிறது. ஆனால் வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு அது அச்சுறுத்தலான அவர்களால் வெறுக்கப்படுகின்ற ஒரு விடயமாகவும் இருந்து வருகிறது.
தமது நிலங்களை ஆக்கிரமித்து இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதை தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இராணுவத்தினருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமாகியுள்ளது.
இப்படியான நிலையில், வடக்கிலுள்ள மக்களின் நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் பெற்றுக் கொண்டு, அங்கு நிலைகொள்வதற்கான வழிமுறைகளைத் தேட ஆரம்பித்துள்ளது
இலங்கை இராணுவம்.பொதுமக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது இதில் முக்கியமானதாகும்.
மென்சக்தியின் பிரதான அம்சமே, இதுபோன்ற உறவாடல்கள்தான்.இதனூடாக இராணுவம் தொடர்பாக தமிழ் மக்களிடம் இருக்கின்ற அச்சத்தை போக்கவும், இராணுவத்தினருடன் இணைந்து வாழ்வதற்கான சூழலை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யாழ். படைகளின் தலைமையகம் மென்சக்தியைக் கையாள்வதில் முக்கியமான பங்கை வகிக்கிறது. அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுபவரான, யாழ். படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, இந்த விடயத்தை மிக நுட்பமாகவே கையாளுகிறார்.
1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர், புலிகளுக்கு எதிராக வன்சக்தியைக் கையாண்டு கொண்டு, தமிழ் மக்களுடன் மென்சக்தியைக் கையாள்வதற்கு இராணுவ அதிகாரிகள் பலரும் முயற்சித்திருந்தனர்.
அவர்களில் முக்கியமானவர் பிரிகேடியர் லரி விஜேரத்ன. (மரணத்துக்குப் பின்னர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார்)1996-–-----98 காலப்பகுதியில் வடமராட்சி இணைப்பதிகாரியாக இருந்த அவர், மென்சக்தியை கையாண்டு, புலிகளின் வேர்களை அறுக்க முயன்றார்.
அதனால்தான் அவர், 1998 மே 14ஆம் திகதி கரும்புலி ஒருவரால் பருத்தித்துறையில் வைத்துக் கொல்லப்பட்டார்.அதுபோலவே, யாழ்.நகர படைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் சுசந்த மென்டிஸும், தமிழ் மக்களுடன் மென்சக்தியைப் பயன்படுத்தி, புலிகளை ஒடுக்க முயன்றார்.
அவரும், 1998 செப்ரெம்பர் 11ஆம் திகதி புலிகளால் நல்லூரில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.இவர்களுக்குப் பின்னர், மென்சக்தியை பயன்படுத்தி தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு இராணுவ அதிகாரிகள் பலரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், அந்த முயற்சிகள் அவ்வளவாக வெற்றியைத் தரவில்லை.
காரணம், இலங்கை இராணுவத்தின் வன்சக்தி ஏற்படுத்தியிருந்த விளைவுகள், தாக்கங்கள். தமிழ் மக்களின் மனதிலிருந்து அகலவில்லை. பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி குறிப்பிட்டது போன்று இலங்கை இராணுவம், புலிகளுக்கு எதிராக கையாண்ட வன்சக்தி, நண்பர்களை விட எதிரிகளையே அதிகம் சம்பாதிக்க வைத்தது.
இலங்கை இராணுவத்தை தமிழ் மக்கள் இன்னமும் அச்சத்துடன் பார்ப்பதற்கு, அவர்களால் கையாளப்பட்ட வன்சக்தியின் விளைவுகளே காரணம். திடீரென மென்சக்தி யின் பக்கம் இராணுவம் திரும்ப முயன்றாலும், அதன் பழைய - கோரமான முகத்தை தமிழ் மக்களால் அவ்வளவு இலகுவாக மறந்து விடவும் முடியாது.
சர்வதேச அரங்கில் அதனை மறைத்துவிடவும் முடியாது.இலங்கை இராணுவம் இப்போது, மென் சக்தியின் பக்கம் திரும்ப முனைவதற்கு, தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது மாத்திரம் காரணமன்று.
சர்வதேச அளவில் இலங்கை இராணுவம் தொடர்பாக இருக்கின்ற கறைகளைப் போக்கிக் கொள்வ தும் மற்றுமொரு காரணமாகும்.அதேவேளை, வன்சக்தியின் மீது கட்டியெ ழுப்பப்பட்ட ஒரு இராணுவத்தை, மென்சக்தியின் பக்கம் முற்றாகத் திருப்புவது ஒன் றும் அவ்வளவு இலகுவானதாக இருக்காது.
இராணுவக் கட்டமைப்பில் உள்ள உயரதிகாரிகள் பலரும் வன்சக்தி மீது அசாத்தியமான நம்பிக்கை கொண்டவர்க ளாக இருப்பதால், குறுங்கால நோக்கில் இத்தகைய இலக்கை எட்டுவது சவாலான காரியமாகவே இருக்கும்.