குருநாகலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது சம்மேளனத்தை தலைமையேற்று உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வந்து சென்றிருந்தபோது, இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமை பேரவையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. யுத்தத்தின்போது பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாக சர்வதேச நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிட்டது. அதற்கிணங்க ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் பாரதூரமானவையாக காணப்பட்ட போதும், புதிய அரசாங்கம் ஆட்சியேற்றதன் பின்னர் அந்த நிலை மாறியுள்ளது.
விமர்சனங்களால் மட்டும் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது. யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படுவது அவசியம்.
அண்மையில் ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கை வந்திருந்தபோது, நாடு எதிர்நோக்கியுள்ள கடன் சுமையை சுட்டிக்காட்டியதோடு, நல்லிணக்கத்தை ஏற்படுத்த கால அவகாசம் கோரியிருந்தோம். பான் கீ மூனும் புன்னகைத்தபடியே உங்களது பணியை செய்யுங்கள் என குறிப்பிட்டார்.
சர்வதேசத்திடமிருந்து வரும் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவமதிப்புகளில் இருந்தும் நாடு முற்றிலும் விடுவிக்கப்பட்டு விட்டது. சிலர் அர்த்தம் கற்பிப்பது போன்று இந்த நாட்டில் எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் தலையிடுவதற்கு இடமளிக்க மாட்டோம். அவ்வாறான எந்த அச்சுறுத்தலும் தற்போது நாட்டிற்கு கிடையாது. அவ்வாறான அச்சுறுத்தல்கள் இனி வந்தாலும்கூட அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என மக்களுக்கு உறுதியளிக்கின்றேன்” என்றார்.