இடம் கொடுத்தால் மடம் பிடிக்கும் வேலையை புத்தர் சிலைகள் கனக்கச்சிதமாக செயற்படுத்துகின்றன. எங்கெல்லாம் பௌத்த பேரினவாதம் காலூன்ற வேண்டுமோ அங்கெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் புத்தர் சிலைகள் முளைப்பது வாடிக்கைதான். அதன் பின்னர் புத்தர் சிலையை ஆராதிக்கும் சாட்டில் பிக்குவும் அவரை பராமரிக்கும் சாட்டில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரும் அங்கே குடியேறிவிடுவார்கள். காலப்போக்கில் அது புத்தருக்குரிய காணியாகிவிடும். ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வேறு ஒரு இடத்தில் புத்தர் சிலைகள் எழும்போது இதை மறந்துவிட்டு புதிய புத்தர் சிலையை எதிர்க்க சென்று விடுவார்கள். இப்படி போருக்கு பின்னர் தமிழர் பிரதேசங்களில் முளைத்த புத்தர் சிலைகள் ஏராளம்.
இலங்கைச் சட்டத்தை பொறுத்தவரையில் புத்தர் எது செய்தாலும் சரியானதே அதை யாரும் விமர்சிக்கமுடியாது. புத்தருக்கு எதிராக எவரும் சுட்டு விரலை நீட்ட முடியாது. இலங்கையில் தமிழர்களின் வழிபாட்டு தலங்கள் கூட பௌத்தமயமாக்கப்பட்டு விட்டது. கதிர்காமத்தில் உறைந்திருக்கும் தமிழ்க் கடவுளான முருகன் கதிர்காமத் தெய்வமாக மாற்றப்பட்டுவிட்டார். பின்னர் கின்னியாவிலும் இரவோடு இரவாக புத்தர் சிலையை புதைத்துவிட்டு சில மாதங்களுக்கு பின்னர் தொல்பொருளியல் ஆய்வாளர்களால் தோண்டி எடுக்ப்பட்டது. பின்னர் கின்னியாவும் பௌத்தபிரதேசமாகியது. கதிர்காமத்தை புத்தர் விழுங்கியது போல் நயினாதீவையும் விழுங்கத் தயாராகிறார் புத்தர். அதைவிட அரசமரங்கள் தோறும் உயிர்த்தெழும் புத்தர் சிலைகள், தமிழர்களின் ஏனைய இடங்களையும் புத்தரின் வழிபாடு நிறைந்த புராதன நகரங்களாக அடையாளப்படுத்தப் படப்போகின்றன
அரசமரங்கள் சந்திகள் தோறும் படையினரால் நடப்படுவதும், முகாம்களுக்குள் வழிபடும் புத்தர் சிலைகள் சில காலங்களில் சிறிய புத்தர் சிலைகளாக உருமாறுவதும், விகாரைகளைச் சுற்றியுள்ள காணிகள் புத்தருக்கே சொந்தமாவதும் போர் நிகழத்தொடங்கிய காலத்திலிருந்து போர் முடிந்த பின்னரும் தொடர் கதை தான்.
போர் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் பல விகாரைகள் முளைத்தன. 2012ம் ஆண்டு சைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமான பாலாவித் தீர்த்தக்கரையில் பெரிய அளவிலான புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. புத்தர் சிலை நிறுவப்பட்ட இடம் “தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான காணி” எனும் பெயர்ப் பலகையும் நிறுவப்பட்டது. எந்த ஓர் காலத்திலும் புத்தர் சிலையோ அல்லது பௌத்தமத எச்சங்களோ இல்லாத இடத்தில் புத்தர் சிலையை நிறுவுவதற்கு தொல்பொருள் தினைக்களமும் ஆதரவளிப்பதுடன் அதனை பேணியும் வருகின்றது. ஆக மொத்ததில் தொல்பொருள் தினைக்களத்தின் அனுசரனையோடே பௌத்த ஆக்கிரமிப்புகள் தொடர்கிறது.
2014ம் ஆண்டு கிளிநொச்சி உருத்திரபுரத்தில் சிவன் கோவிலுக்கு அருகாமையில் படையினரால் தொன்மையான விகாரையின் எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வழமை போலவே தொல்பொருள் திணைக்களம் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டது. யாரையும் உள்ளே விடாது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
2014 முல்லைத்தீவு கொக்கிளாயில் அரச வைத்தியசாலை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணியின் ஒருபகுதியையும் தனியார் காணியையும் இணைத்து பிரமாண்டமான புத்தர் சிலையையும் விகாரை ஒன்றையும் கட்டிவருகிறார். இதனை சட்டரீதியாக தடுத்தபோதும் பிக்கு தனது நடவடிக்கைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளார்.
நயினா தீவில் 2016 நடுப்பகுதியில் 75 அடி உயர பிரமாண்ட புத்தர் சிலையை அமைக்கும் முயற்சியில் நாகதீப விகாரை பீடாதிபதி ஈடுபட்டிருந்தார் எனினும் அதனை அரசாங்க அதிபர் தடுத்திருந்தார். ஆயினும் நயினா தீவில் புத்தர் சிலை அமைக்க எந்தத் தடையும் இல்லை என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார். எனவே கட்டாயம் வெகு விரைவில் புத்தர் சிலையை கானக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு போருக்கு பின்னர் புத்தர் சிலைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. கந்தரோடையிலும் உருத்திரபுரத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட தூபிகளின் எச்சங்களை வைத்துக்கொண்டே அரசு வடக்கில் பாரம்பரிய சிங்களக் கிராமங்கள் இருப்பதாக கூறுகிறது. ஆனால் அவ்வாறு எச்சங்கள் யாவும் தமிழ் பௌத்தர்களின் இருப்பையே அந்த எச்சங்கள் உறுதிப்படுத்துகின்றன தவிர சிங்களக் குடியேற்றங்களை உறுதிப்படுத்தவில்லை. பௌத்தர்கள் எல்லோரும் சிங்களவர்கள் அல்ல. இலங்கையில் பௌத்தம் தோன்றிய காலத்திலேயே தமிழகத்திலும் ஒருசாரார் பௌத்தர்களாக இருந்தார்கள். தமிழகத்திற்கும் ஈழத்தமிழர்களுக்கும் இருந்த தொடர்பு தமிழ் பௌத்தர்களை உருவாக்கி இருந்தது. பின்னர் காலப்போக்கில் தமிழ் பௌத்தம் அழிவடைந்து விட்டது.
எனினும் பௌத்தர்களே இல்லாத இடத்தில் புத்தசிலைகள் நிறுவுதல் தற்போதய அரசின் சிரித்துக்கொண்டு முதுகில் குத்தும் தந்திரோபாயமாகவே வெளிப்படுகிறது.
இதற்கிடையில் கொக்கிளாய் விகாரை கட்டும் பிக்கு சில தினங்களுக்கு முன்பு கூறுகையில் தமிழ்த் தலைமைகள் விகாரை கட்டுவதை தாமதிக்கின்றனர். இது எமக்கு எரிச்சலூட்டுகிறது என தெரிவித்தார்.
ஆயினும் தமிழ்த் தலைமைகள் தமிழர் பிரதேசங்களில் அமைக்கப்படும் விகாரைகள் தொடர்பில் மௌனம் காக்கின்றனர். அன்மையில் அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிடுகையில் பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு முதல் எமக்கு அறிவித்தால் நாம் எதாவது செய்யலாம் என்றும் விகாரை கட்டப்படும் போது முறையிட்டால் தாம் ஒன்றும் செய்ய ஏலாது என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு திரைமறைவில் தமிழ் தலைமைகளும் இதற்கு துணைபோவது வருந்ததக்கதாகும். நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் மைத்திரி – ரனில் அரசு சிரித்துக்கொண்டு முதுகில் குத்தும் கதையாகவே உள்ளது.