
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதத்திலும் பிரிந்து செல்லக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக ஒரு கூட்டணியை ஏற்படுத்தினால் அதற்கு நீங்கள் தலைமை தாங்குவீர்களா?” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் நேற்று நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
முடியுமானால் மற்றைய கட்சிகளையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அங்கம் வகித்தது.
ஆகவே இந்த கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒருமித்து முன்செல்ல வேண்டிய அவசியம் இப்போது எமக்குள்ளது.
குறைந்த தீர்வை எமது தலையில் கட்டலாம் என்று அரசாங்கம் இருக்கும் போது எம்மிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நாம் இவ்வாறு ஒற்றுமையாக இருந்தால் தான் சர்வதேசமும் எமக்கு ஒரு அடையாளத்தை கொடுப்பார்கள்.
தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும்.
இருக்கும் கட்சிகளை தக்க வைத்துக் கொண்டும், பிரிந்து போன கட்சிகளை உள்வாங்கியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்செல்ல வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.