உடுவில் மகளீர் கல்லூரி குழப்பங்களில் ஒளிந்து கிடக்கும் கேள்விகள்

uduvi123

தென் கிழக்காசியாவில் அமையப் பெற்றுள்ள தென் இந்திய திருச்சபையின் கல்லூரிகளுக்குள்ளே முதன்மையானதும், 192 வருட பாரம்பரியத்தைக் கொண்டது உடுவில் மகளீர் கல்லூரியாகும்.
இலங்கையிலேயே கல்வியின் முதன்மை மாவட்டமாக ஒருகாலத்தில் யாழ்ப்பாணம் திகழ்ந்ததென்றால், அந்தப் பெருமைக்கு மகுடமாகத் திகழ்ந்த கல்லூரிகளில் உடுவில் மகளீர் கல்லூரியும் பிரதானமாக இருந்தது
அத்தகைய பாரம்பரியத்தையும், புகழையும் யாழ். மண்ணில் தனக்கே உரியதாக வைத்திருந்த கல்லூரியின் இன்றைய நிலை கண்டு கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
தென் இந்திய திருச்சபைக்குள்ளே இரண்டு அணிச் செயற்பாடுகள் தலைதூக்கத் தொடங்கியதிலிருந்து பிரச்சினைகளும் தலைதூக்கத் தொடங்கியிருந்தன. இந்த இரு அணிகள் செயற்பாடுகளால் சபைக்குள்ளேயே அவ்வப்போது பிரச்சினைகள் தலைதூக்கியபோது அதையிட்டு மாணவிகளும், பெற்றோர்களும் கண்டு கொள்ளவில்லை.
உடுவில் மகளீர் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம் செய்யப்படுவதிலும் பின்னணிக் காரணமாக தென் இந்தியத் திருச்சபைக்குள்ளே ஏற்பட்டிருந்த முரண்பாடுகள்தான் காரணமாக இருந்துள்ளது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
இந்தப் பின்னணியை புரிந்து கொள்ளாமலே மாணவிகள் பதவியில் இருந்த சிராணி அதிபரை தொடர்ந்தும் பதவி நீடிப்புச் செய்ய வேண்டும் என்று போராடத் தொடங்கியிருக்கின்றார்கள்.
சிராணி மில்ஸ் ஆசிரியை 60 வயதை எட்டிவிட்டார் ஆகையால் அவர் ஓய்வில் செல்ல வேண்டும் என்பது நியாயமாக இருந்தபோதும், உடுவில் கல்லூரியின் வரலாற்றில் ஆளுமையுள்ள அதிபர்களாக இருந்தவர்கள் 72 வயது வரையும் கடமையில் இருந்திருக்கின்றார்கள். ஆகவே திருச்சபையில் ஏட்டிக்குப் போட்டடியான பிரச்சினை ஏற்படாமலிருந்திருந்தால் சிராணி ஆசிரியை தொடர்ந்தும் பதவி வகிப்பதில் தடையேதும் இருந்திருக்காது.
இந்த அதிபர் நியமன சர்ச்சையில் மாணவிகள் பகடைக்காய்களாகவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றார்கள். மாணவிகள் செப்ரெம்பர் 3ஆம் திகதி போராடத் தொடங்கி மூன்று நாட்களாகப் போராடினார்கள்.
மாணவிகள் கல்லூரியின் பிரதான வாசல் கதவை மூடி யாரையும் உட்புக விடாமல் தடுத்து நின்றார்கள். கல்லூரி நிர்வாகமோ மாணவிகளின் தடையை மீறியும் புதிய அதிபரை கல்லூரிக்குள் அழைத்துச் செல்வதற்கு எடுத்துக்கொண்ட அணுகுமுறைகள் அநாகரீகமானவையாக பார்க்கப்பட்டது.
மாணவிகளும் தமது நிலைகளை மறந்து கூச்சல் குழப்பங்களைச் செய்ததுடன், கல்வி கற்றுத் தரும் ஆசிரியர் சமூகத்திற்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகளையும் பிரயோகித்திருக்கின்றார்கள். அதேபோல் ஆசிரியைகளும், ஆசிரியர்களும் மாணவிகளுடன் தர்க்கப்படுவதில்; தமது சுயத்தை இழந்து நடந்துகொண்டிருக்கின்றார்கள்.
இவை தவிரவும் புதிய அதிபரை அழைத்துக் கொண்டு உட்பிரவேசித்த நிர்வாகத்தினரை வழிமறித்து பிரதான வாசலை தடுத்து படுத்துக் கிடந்த மாணவிகளை கால்களில் பிடித்து இழுத்து ஓரப்படுத்திவிட்டு நிர்வாகத்தினர் உட்செல்ல முற்பட்டிருக்கின்றார்கள். அப்படி மாணவிகளை கால்களில் பிடித்து இழுத்தபோது சிலர் கைத் தொலைபேசியில் வீடியோ பதிவுகளை செய்ததாகவும் அந்த மாணவிகள் கூறியிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் அந்த வீடியோ காட்சிகள் வெளிவரலாம் என்ற அச்சமும் மாணவிகளிடையே இருக்கின்றது.
நிர்வாகத்தினரதும், ஆசிரியர்களினதும் பின்னணியில் மறைந்திருந்த அரசியல் பிரதிநிதிகளினதும் அணுகுமுறைகளைத் தொடரந்தே வீதிப்போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் கடமையைச் செய்யவேண்டிய பொலிஸ் உத்தியோகத்தரும் தனது கைத் தொலைபேசியை தூக்கிக்கொண்டு தம்மை வீடியோ பதிவு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் கவலை தெரிவிக்கினறனர்.
இத்தனை அவமானங்களுக்குப் பிறகும் தொடர்ந்தும் அதே கல்லூரியில் கல்வி கற்க முடியாது என்ற காரணத்தினால் உடுவில் மகளீர் கல்லூரியிலிருந்து சில மாணவிகள் விலகிக் கொள்ள கோரிக்கை முன்வைத்திருப்பதாகவும் அறிய முடிகின்றது.
இது தவிரவும் பழைய அதிபருக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணிவிகளை கல்லூரியின் நிர்வாகமும், புதிய அதிபரும் பழி வாங்கக் கூடும் என்ற அச்சத்தையும் மாணவிகள் வெளிப்படுத்தியுள்ளதால், இப்பிரச்சினையானது பெற்றோருக்கும் சங்கடமான நிலைமையை தோற்றியிருக்கின்றது.
கல்லூரியில் நடைபெற்ற குழப்பங்கள், மாணவிகள் தாக்கப்பட்டது, மாணவிகளை வீடியோ பதிவுகள் செய்தது, பொலிஸ் உத்தியோகத்தர் கடமை தவறி நடந்து கொண்டிருப்பது, நிர்வாகத்தின் முரண்பாடுகள் ஆகியவை தொடர்பில் பூரணமான விசாரணை ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதி உத்திரவிட்டுள்ள நிலையில், அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்த தென் இந்திய திருச்சபையின் பேராயர், கலாநிதி டேனியல் தியாகராஜா, மகளீர் கல்லூரியில் நடைபெற்ற குழப்பங்கள் தொடர்பான திருச்சபையின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியிருந்தார்.
அதேவேளை கல்லூரியில் நடைபெற்ற பிரச்சினைகள் தொடர்பாக விசாரணைகளை தாமே முன்னெடுப்பதாகவும், அதை வெளியார் முன்னெடுக்கத் தேவை இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
பேராயரின் இந்த கருத்துத் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் உடுவில் மகளீர் கல்லூரியின் பழைய மாணவிகள் மத்தியில் விசனம் ஏற்பட்டுள்ளது. பேராயரின் கூற்றானது, யுத்தக் குற்றத்தைச் செய்த இலங்கை இராணுவமே யுத்தக் குற்றம் தொடர்பாகவும், அவர்கள் புரிந்த மனித உரிமைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதாகவும், இதற்கு சர்வதேச பிரதிநிதிகள் தேவையில்லை என்றும் கூறுவதைப்போல் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.
நடந்த பிரச்சினைகளில் கல்லூரியின் நிர்வாகம் நியாயமாகவே நடந்திருக்குமானால் வெளிப்படையான விசாரணைகளுக்கு நிர்வாகம் ஏன் பின்னடிக்க வேண்டும்? கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகையில் அவர்களிடமிருந்து நடுநிலையான விசாரணையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்ற கேள்விகளையும் பெற்றோர்கள் முன் வைக்கின்றார்கள்.
கல்லூரியின் புகழுக்கும், கீர்த்திக்கும் களங்கம் ஏற்படாத வகையில், நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மீண்டும் கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதும், மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை இல்லாமல் செய்வதற்கும், மாணவிகள் உணரத் தொடங்கியிருக்கும் பாதுகாப்பின்மையை போக்குகின்ற வகையிலும், இயல்பு நிலைமையை தோற்றுவிக்கவும், நிர்வாகமும், மாணவிகளும், பழைய மாணவிகளும், ஆசிரியர் சமூகமும் பரஸ்பரம் கலந்துரையாடி சுமூக சூழலை ஏற்படுத்துவதே நிரந்தர தீர்வாக அமையும்.

– ஈழத்துக் கதிரவன்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila