வடக்கில் பாதுகாப்பு தொடர்பில் ஐ.நா.வுக்கு என்ன தெரியும்? வருபவர்கள், போகின்றவர்கள் கூறுவதற்காக நாம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. அவசியம்ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே வடக்கு, கிழக்கில் இராணுவத்தைக் குறைக்க முடியும் என பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஐநா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடந்த புதன்கிழமை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதனையடுத்து வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கிற்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் கருத்து தெரிவித்த போது வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் நடமாட்டம் குறைக்கப்பட வேண்டும். மக்களின் காணிகள் விரைவில் கையளிக்கப்படல் வேண்டும் உள்ளிட்ட விடயங்கள் குறித்து வலியுறுத்தியிருந்தார். அது தொடர்பில் அரசின் நிலைப்பாடு எவ்வாறானதாக அமையக்கூடும் என கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் என்ற வகையில் பார்க்கின்ற போது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மாத்திரமன்றி முழுநாடு தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டிய நிலைமை உள்ளது. இருப்பினும் கடந்த காலங்களில் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் அங்கிருந்து இராணுவத்தினரை அகற்றும் செயற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதற்காக முழுமையாக இராணுவத்தை நீக்க வேண்டும் என்பதை பாதுகாப்பு தரப்பினர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த நிலைப்பாட்டினை அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.
அதனால் வருகின்றவர்கள், போகின்றவர்கள் கூறுகின்றார்கள் என்பதற்காக எமது நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. நாட்டில் தற்போது வலுவாக உள்ள பாதுகாப்பு நிலைமைகளை மாற்றுவது தொடர்பில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற விதத்திலான மிகப்பெரிய அழுத்தங்கள் எவையும் எமக்கு விடுக்கப்படவில்லை. எவ்வாறாயினும் இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஐ.நா. முழுமையாக அறிந்திருக்க முடியாது. நாம் தான் அது தொடர்பில் முழுமையாக அறிந்தவர்கள்.
எவ்வாறாயினும் தற்போது ஐநா செயலாளர் நாயகம் இலங்கையின் மீது ஐ.நா. பாரிய அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்திலும் ஐ.நா.செயலாளர் நாயகம் இலங்கையின் மீது பாரிய அழுத்தங்கள் எதனையும் விடுக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நிலைப்பாடு இலங்கைக்கு வாய்ப்பாக அமையும்.
அதேநேரம் பாதுகாப்பு விடயத்தில் உரிய செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் ஐ.நா.சபையினால் எமது நாட்டின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். இருப்பினும் எமது நாட்டின் பாதுகாப்புத் தன்மைகளை கருத்திற்கொள்ளும் வகையிலான தீர்மானங்கள் உரிய நேரத்தில் அரசாங்கத்தின் அனுமதியுடன் எமது பாதுகாப்புத் தரப்பினர்களால் முன்னெடுக்கப்படும் என்றார்.
இதேவேளை பான் கீ மூன் கொழும்பில் ஆற்றிய உரையில் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் இடம்பெயர்ந்து இறுதி யுத்தத்தின் போது குறித்த ஏழு மாத காலப் பகுதியில் பல உயிர்களைக் காப்பாற்றியிஜருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பாரிய தவறை ஐ.நா. சபை மேற்கொண்டு விட்டது என்றார்.
ஐ.நா. மாத்திரமல்ல இலங்கை அரசாங்கமும் தமது மக்களுக்கு பாரிய தவறை இழைத்து விட்டது. குறிப்பாக அந்த ஏழு மாதங்களில் இலங்கையில் பாரிய தவறு இழைக்கப்பட்டு விட்டது.
ஐ.நா.வை பொறுத்தவரையில் நாம் மிகவும் கசப்பான பாடங்களைக் கற்றுக் கொண்டோம். குறித்த ஏழு மாத காலத்தில் ஐ.நா.பணியாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள உள்ளக விசாரணை ஒன்றுக்கு நான் ஏற்பாடு செய்ததில் எமது நடவடிக்கையில் பாரதூரமான தவறுகள் இருப்பதைக் கண்டுகொண்டேன்.
நாம் மிகுந்த செயல் முனைப்போடு செயற்பட்டிருந்தால் அதிக உயிர்களைக் காப்பாற்றியிஜருக்க முடியும். இறுதிக்கட்ட யுத்ததர்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்துபோயுள்ளனர்.. இவ்வாறு பான் கீ மூன் குறிப்பிட்டிருந்தார்.