வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தையொட்டி, வடமாகாணத்தின் பல இடங்களிலும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளும் யாழ்ப்பாணத்தில் பேரணியும் நடத்தப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகிய ஆகஸ்ட் 30 ஆம் திகதி
மட்டுமல்லாமல், ஏனைய பல சந்தர்ப்பங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு
வந்துள்ளது.
ஆயினும் இம்முறை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தின் மறுநாளாகிய 31 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை முன்னிட்டு அன்றைய தினத்தில் பல இடங்களிலும் போராட்டங்களும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளும்
பேரணியும் நடத்தப்பட்டிருக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம்
ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத நிலையிலேயே இந்தப் போராட்டங்கள் வலுப்பெற்றிருக்கின்றன.
அது மட்டுமல்லாமல், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றுக்குப் பொறுப்புக் கூறுவதற்காக அமைக்கப்படவுள்ள பொறிமுறையின் ஓர் அங்கமாக காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு சட்ட ரீதியாக அரசாங்கம்
நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இந்தப் போராட்டங்கள் பரவலாக
முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது கவனத்திற்கும் ஆழ்ந்த சிந்தனைக்கும் உரியதாகும்.
சுமார் இருபதினாயிரம் பேர் வரையில் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடுகள்
செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்ற போதிலும், அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமானது என்பதே மனித உரிமைச் செயற்பாட்டாளர்களினதும், காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான செயற்பாட்டாளர்களினதும் கருத்தாகும்.
கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், பலபேர் சூழ்ந்திருக்க இராணுவத்திடம்
சரணடைந்ததன் பின்னர், காணாமல் போயிருப்பவர்கள் என பலதரப்பட்ட வழிகளில் ஆட்கள் காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கின்றார்கள். காணாமல் போனவர்களில் சிலரை, காணாமல் போனதன் பின்னர், அவர்களை இராணுவத்தினருடனும், அடையாளம் தெரியாத இடங்களிலும், தடுப்பு முகாம்களிலும் கண்ணால் கண்டதற்கான சாட்சியங்கள் தங்களிடம் இருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல், அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் தன்னைத் தடுத்து
வைத்திருக்கின்றார்கள் என்று காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய
கடிதத்தை சாட்சியமாக வைத்திருக்கின்ற ஒரு தாயாரும், அதுபற்றி காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவினரிடம்
சாட்சியமளித்திருக்கின்றார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான
பரப்புரையின்போது, வேட்பாளராகக் களமிறங்கியிருந்த மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படம் ஒன்றில் தமது புதல்விகள் காணப்பட்டதாக, அந்தப் பகைப்படத்தை ஆதாரமாக சில தாய்மார்கள் காட்டியிருக்கின்றனர்.
இந்தப் புகைப்படம் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக்கான துண்டுப் பிரசுரம் ஒன்றில் பிரசுரமாகியிருந்ததை அந்தத் தாய்மார்கள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் நேரடியாக அவரிடம் காட்டி, தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
ஆனால் அந்தக் கோரிக்கையைக் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்
அளித்திருந்த உறுதிமொழி வாய் பேச்சளவில் மட்டுமே இருக்கின்றது.
அந்தப் பிள்ளைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டனவா? என்ன நடந்தது? அந்தப்
புகைப்படத்தில் காணப்படுபவர்கள் உண்மையில் காணாமல் போன பிள்ளைகள் தானா அல்லது அவர்கள் வேறு குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளா என்ற விபரங்கள் எதுவும் பாதிக்கபட்ட
தாய்மார்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
இது விடயத்தில் ஜனாதிபதி தரப்பில் இருந்து பொறுப்பான பதிலேதும் வழங்கப்படவில்லை என்ற முறைப்பாடு பாதிக்கப்பட்ட அன்னையர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
ஆணைக்குழுக்களிடம் அளித்த சாட்சியங்கள்………..
இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தையடுத்து, படைத்தரப்பினரால் விடுக்கப்பட்ட பகிரங்க அறிவித்தலை நம்பி, இராணுவத்தினரிடம் நூற்றுக்கணக்கான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைந்தனர். முள்ளிவாய்க்காலில் இருந்து வெளிவந்து
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமில் அவர்கள் சரணடைந்தார்கள். அவர்களுடைய உறவினர்கள் பலர் அவர்களை இராணுவத்தினரிடம்
கையளித்தார்கள்.
இவ்வாறு அவர்கள் சரணடைந்ததையும், குடும்ப உறவினர்கள் அவர்களை இராணுவத்தினரிடம் கையளித்ததையும் அங்கு சூழ்ந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேரடியாகக்
கண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இவர்கள் எவரையும் தாங்கள் பொறுப்பேற்கவில்லை. எவரையும் நாங்கள் கைது
செய்யவில்லை என்று இராணுவ தரப்பில் இப்போது தெரிவிக்கப்படுகின்றது. இறுதி
யுத்தத்தின்போது, சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் எவரையும் இராணுவம் இன்னும் விடுதலை செய்யவில்லை.
அதேபோன்று அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள்? இப்போது எங்கு
வைக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து எதனையும் அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.
இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ள முன்னாள் விடுதலைப்புலி
உறுப்பினர்கள் தொடர்பில் போதிய அளவில் அவர்களின் உறவினர்கள், நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு அதிகாரிகளிடம் அளித்த
சாட்சியங்களின் ஊடாக போதிய அளவு தகவல்களையும் சான்றுகளையும் தெரிவித்திருந்தனர். இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய சாட்சியங்கள் மட்டுமல்ல. ஏனைய காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியங்களும் பலனற்றவையாகவே போயிருக்கின்றன.
இதனால் இந்தக் குழுக்களின் விசாரணைகள் வெறும் விசாரணைகளாகவும், அவற்றிடம்
அளிக்கப்பட்ட சாட்சியங்கள் வெறும் ஏட்டளவிலான சாட்சியங்களாகவும் மட்டுமே
எஞ்சியிருக்கின்றன.
ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இத்தகைய நிலையில்தான்
இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சில உறவினர்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல்
செய்திருக்கின்றனர்.
சுமார் பதினான்கு மனுக்கள் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டு அவற்றில் சில மனுக்கள் தொடர்பாக ஆரம்ப விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம்
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த சம்பவம் முல்லைத்தீவில் நடைபெற்றதனால், அந்தப்
பிரதேசத்திற்குரிய நியாயாதிக்கத்தைக் கொண்ட நீதிமன்றத்தில் அந்தச் சம்பவங்கள் எவ்வாறு நடைபெற்றன. யார் யார் அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதை உள்ளடக்கிய விசாரணை மூலமான தகவல்களைப் பெற்று மேற்கொண்டு விசாரணைகளைத் தொடர்வதற்காக இவ்வாறு மேல் நீதிமன்றம் அந்த விசாரணைகளை முல்லைத்தீவு நீதிமன்றத்திற்குப்
பாரப்படுத்தியுள்ளது,முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இந்த ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக நடைபெற்று வருகின்ற விசாரணைகளில் காணாமல் போயுள்ளவர்களின் குடும்ப உறவினர்கள் சாட்சியமளித்திருக்கின்றனர். தமது சாட்சியத்திற்கு ஆதாரமான சாட்சிகளையும் அவர்கள் உடன் அழைத்துச் சென்றதையடுத்து, அவர்களுடைய சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இதனையடுத்து, இராணுவ தரப்பு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய ஒரு சாட்சியத்தில் முல்லைத்தீவு இராணுவ முகாமில் சரணடைந்தவர்கள் பற்றிய பதிவுகள்
இருப்பதாக இராணுவ தரப்பில் அளிக்கப்பட்ட சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்ட ஒரு
தகவலையடுத்து, அந்தப் பதிவுகள் தொடர்பிலான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவையடுத்து, இராணுவத்தின் புனர்வாழ்வுப் பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றதன் பின்னர், சமூகத்தில் இணைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்டதொரு பட்டியல் இராணுவ தரப்பில் சாட்சியமளித்த இராணுவ அதிகாரி ஒருவரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆயினும் அந்த சாட்சியிடம் காணாமல் போயுள்ளவர்களின் நலன்களுக்காக நீதிமன்றத்தில்
முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் நடத்திய குறுக்கு
விசாரணைகளின்போது, நீதிமன்றத்தினால் கோரப்பட்ட பெயர்ப்பட்டியல் நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படவில்லை என்ற தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, இறுதி யுத்தத்தின்போது முல்லைத்தீவில் இராணுவத்தினரிடம் ஆட்கொணர்வு மனுக்களில் குறிப்பிடப்பட்டவர்களும், அவர்களுடன் சரணடைந்த ஏனையோரும் சரணடைந்த போது பதிவு செய்யப்பட்ட பதிவு
விபரங்கள் அடங்கிய பெயர்ப்பட்டியலை அடுத்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அவகாசம் அளித்து இராணுவ உயரதிகாரிகளுக்கு நீதிமன்றம்
உத்தரவிட்டிருக்கின்றது.
ஆட்கொணர்வு மனுக்கள் சம்பந்தப்பட்ட மிகவும் முக்கியமான ஒரு நீதிமன்ற
விசாரணைகளிலும்கூட காணாமல் போயுள்ளவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் கூட தாமதம ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. இருப்பினும் நீதிமன்றம் தனது
விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது.
இந்த நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதுதான் இந்த விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ புலனாய்வாளர்களின் ஏற்பாட்டில் கடந்த ஆட்சியின் போது முல்லைத்தீவு நகரத்தில் நீதிமன்றத்திற்கு சற்று தொலைவில் அவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்
நடத்தப்பட்டிருந்தன.
இதில் குறிப்பாக விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை
பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் எஸ்.சசிதரன் தொடர்பில்ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்த அவருடைய மனைவி அனந்தி சசிதரனுக்கு எதிராகவே இந்த
ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
அந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள்
விடுதலைப்புலிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள்
ஏந்தியிருந்த சுலோக அட்டைகளில் அனந்தி சசிதரனின் கணவன் எழிலன் பல இளைஞர்களை பலாத்காரமாக விடுதலைப்புலிகள் அமைப்பிற்குக் கொண்டு சென்று அவர்களைக் காணாமல்
ஆக்கியிருந்ததாகத் தெரிவித்து அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொரு வழக்குத் தவணையின்போதும் நடத்தப்பட்டது
மட்டுமல்லாமல் வடமாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த அனந்தி சசிதரனின் வாகனத்தில் அவருடன் வழக்குத் தவணைக்காக வருகை தந்திருந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்த பெண்களை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் பயணஞ் செய்த வாகனமும்,
புலனாய்வு பிரிவினர் என்று சந்தேகிக்கப்பட்டவர்களினால் பின்தொடரப்பட்டு மிக நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டது.
இதேபோன்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனு ஒன்றில் சம்பந்தப்பட்ட காணாமல் போனவருடைய மனைவி தொடர்ச்சியாக புலனாய்வு
பிரிவினரால் அந்த வழக்கைக் கைவிடுமாறு கோரி அச்சுறுத்தப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக அவர் மன்னாரைவிட்டு வெளியேற நேர்ந்திருந்தது. இதனால் முதலில் தாக்கல் செய்திருந்த அந்த ஆட்கொணர்வு மனுவை கைவிட வேண்டிய நிலைமைக்கு அவர்
தள்ளப்பட்டிருந்தார். இருப்பினும் ஆட்சிமாற்றத்தையடுத்து. மீண்டும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக நீதிக்கான நிலைமாறு காலச் சூழலில் நான்கு அம்சங்களைக் கொண்ட ஒரு பொறிமுறையின் முதலும், முக்கியமான அம்சமுமாகக் கருப்படுகின்ற காணாமல் போனோருக்கான அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டம் இயற்றப்பட்டு இன்னும் மூன்று மாத காலப்பகுதியில் அந்த அலுவலகம் செயற்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
காணாமல் போனோருக்கான அலுவலகம்
சர்வதேசத்திடம் அளித்திருந்த உறுதி மொழிக்கமைவாக மனித உரிமை மீறல்கள், சர்வதேச
மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் அரசாங்கத்தினால்
அமைக்கப்படவுள்ள பொறி முறையின் முதல் அம்சமாக – முதல் நடவடிக்கையாக காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்ட மூலத்தை அரசாங்கம்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கின்றது.
இந்தச் சட்டமானது வாக்கெடுப்பின்றி மிகவும் சாதுரியமாக சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் சாதாரண ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதைப் போல நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதற்காக அரசாங்கத்துக்குப் பாராட்டுக்களும் கிடைத்திருந்தன. காணாமல் போனோருக்கான அலுவலகமானது ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி நியாயமும், நிவாரணமும் கிடைப்பதற்கு வழி செய்யும் என்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஓரளவிலான
எதிர்பார்ப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கின்றது.
அதேவேளை, சிங்களத் தீவிர அரசியல்வாதிகள் இராணுவத்தினருக்கு எதிராக, அவர்கள் மீது போர்க்குற்றத்தைச் சுமத்தி தண்டிப்பதற்காக நிறுவப்படுகின்ற ஒரு பொறியாகவே இந்த
அலுவலகம் அமைக்கப்படுகின்றது என அதற்கு எதிராகப் பெரும் எடுப்பில் அரசியல் ரீதியான
பிரசாரங்களை முடுக்கிவிட்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களே இந்தப் பிரசார நடவடிக்கைகளில் முக்கிய பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை, காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தி நீதியும்
நிவாரணமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேசத்திற்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த அலுவலகத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்ப்புக்கள் ஏற்பட்டு இந்த அலுவலகத்தை அமைப்பதற்கான
சட்டமூலத்தை நிறைவேற்றவிடாமல் சிங்களத் தீவிர அரசியல்வாதிகள் குழப்பிவிடக் கூடாது, அவர்களை முந்திவிட வேண்டும் என்ற ஓர் அவசர போக்கில் இந்த சட்டமூலத்தை
நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
இந்த அவசர நடவடிக்கையானது ஒரு வகையில் அரசாங்கத்திற்கு இந்த சட்டத்தை
நிறைவேற்றுவதற்கு உதவியிருக்கின்ற போதிலும், இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டிய பல முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நலன்களைக் கவனிப்பவர்கள் தரப்பில் இருந்து குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் அவசர அவசரமாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதை மனித உரிமைச்
செயற்பாட்டாளர்கள் கண்டித்திருக்கின்றார்கள். அதேபோன்று தம்மால் முன்வைக்கப்பட்ட
திருத்தத்திற்குரிய அம்சங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனக்குரல் எழுப்பியிருக்கின்றன.
காணாமல் போனோர் தொடர்பிலான இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள், அதன் செயற்பாட்டாளர்கள். அதன் அதிகார எல்லை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் போதிய வெளிப்படைத் தன்மை பேணப்படவில்லை என்று இந்த அலுவலகம் உருவாக்கப்படுவதற்காக உழைத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களினால் கவலையும் ஆதங்கமும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற விசாரணை குழுக்களைப் போலவே இந்த அலுவலகமும் நீதித்துறை சார்ந்த அதிகாரமற்றதொரு பொறிமுறையாக அமையப் போகின்றது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக் கின்றார்கள். காணாமல் போயுள்ளவர்கள் பற்றிய தரவுகளையும், விபரங்களையும் மாத்திரம் திரட்டி அதற்குரிய நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வெளிப்படுத்தவதற்காக மட்டுமே இந்த அலுவலகம் பயன்படப் போகின்றது என்பது அவர்களுடைய கருத்தாகும்.
இத்தகைய செயற்பாடுகளைக் கொண்டதோர் அலுவலகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும் எவ்வாறு கிடைக்கும் என்பது அவர்கள் எழுப்பியுள்ள முக்கியமான கேள்வியாகும். இந்தக் கேள்வியின் பரிமாணத்திலேயே பல்வேறு கருத்துக்களும் கோரிக்கைகளும்கூட காணாமல் போனோருக்கான சர்வதேச தினத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள். பேரணிகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியாயினும் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமையானது தண்டனைக்குரிய ஒரு குற்றச் செயல் என்பதை அரசாங்கம் அதிகாரபூர்வமாக முதலில் பிரகடனப்படுத்த வேண்டும். நீதி நடைமுறைகளின் மூலம் அந்தக் குற்றத்திற்குரிய தண்டனை என்ன? எத்தகையது என்பது சட்டத்தில் உள்ளடக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த காணாமல் போனோருக்கான அலுவலகம் செயற்பட வேண்டும். அந்தச் செயற்பாட்டில் குற்றம் புரிந்தவர்களாகக் காணப்படுபவர்கள் எந்தத் தரத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.இதுவே பாதிக்கப்பட்டவர்களினதும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களினதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
செல்வரட்னம் சிறிதரன்