இன விகிதாசாரத்தை குழப்ப அரசு முயற்சி!

இன விகிதாசாரத்தை குழப்ப அரசு முயற்சி!

வெலிஓயா பிரதேசத்தின் 3,696 வாக்காளர்களை நெடுங்கேணியுடன் இணைந்து இனவிகிதாசாரத்தை குழப்ப முயற்சி நடைபெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேசத்தின் மூவாயிரத்து 696 வாக்காளர்களை நெடுங்கேணி பிரதேசத்தின் பட்டிக்குடியிருப்பு கிராமத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, நெடுங்கேணி, மருதோடை கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றும்போது,
கடந்த காலத்தில் இந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் தமிழ்த் தலைவர்களையும், தமிழ் மக்களையும் ஏமாற்றியதன் விளைவாகத்தான் இந்த நாடு பாரியதொரு யுத்தத்தையும் அழிவையும் சந்திக்க வேண்டியேற்பட்டது. அன்று மிதவாதத் தலைவர்களோடு இந்தப் பிரச்சினையைச் சுமுகமாகப் பேசித் தீர்த்திருந்தால், 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் ஏற்பட்டிருக்காது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது.
இந்த ஆட்சி மாற்றத்தின் பிறகும், இன்றைக்கும், கடந்த அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரலையே – முக்கியமாக குடியேற்றம், காணிப் பறிப்புகள் போன்றவற்றையே இந்த அரசாங்கமும் நடைமுறைபடுத்தப் பார்க்கின்றது. இன்றைக்கு முல்லைத்தீவு மாவட்டத்திலே, வெலிஓயா பிரதேசத்திலே இருக்கின்ற 5 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குரிய கிராமங்களைச் சேர்ந்த 3,696 வாக்காளர்களை வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கின் நெடுங்கேணிப் பிரதேசத்திலுள்ள பட்டிக்குடியிருப்புக் கிராமத்துக்குள்ளே கொண்டுவந்து இணைக்கின்றார்கள். ஏற்கெனவே இருக்கின்ற பட்டிக்குடியிருப்புக் கிராமம் என்பது 245 தமிழ் வாக்காளர்களைக்கொண்ட ஒரு கிராம சேவையாளர் பிரிவாகும். ஒரு மாவட்டத்தில் இருக்கின்றவர்களை இன்னுமொரு மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பிலே இரகசியமாகப் பதிவு செய்கின்றார்கள். அவ்வாறு பதிவதன்மூலம் என்ன செய்ய நினைக்கின்றார்கள்? என்ன செய்ய யோசிக்கின்றார்கள்? ஆகவே, தொடர்ந்தும் கடந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலையே இந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்துவதற்குப் பார்க்கின்றார்கள்.
வெலிஓயாவுக்குள் வருகின்ற கஜபாகு மொனராவெவ, கவியாணபுர கிராமம், எத்தாவெட்டுவ, நுவவெவர, சம்பத்நுவர, நிக்வெவ என்ற ஐந்து கிராமங்களின் வாக்காளர்களையே பட்டிக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவுக்குள்ளே உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இவ்வளவு இழப்புக்கள் மற்றும் அழிவுகளைச் சந்தித்ததற்குப் பின்னரும்கூட இன்னும் இந்த நிலை தொடர்கிறது. வெறுமனே சர்வதேசச் சமூகத்தை ஏமாற்றுவதற்காகத்தான் இந்த விடயங்களைக் கையாளுகின்றார்களா?, அல்லது காணாமற்போனவர்களை உண்மையாகக் கண்டறிய வேண்டும், போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற விடயங்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வகையில் இந்த விடயங்களைக் கையாளுகின்றார்களா? அப்படியாக இருந்தால் அதற்கான செயற்பாட்டை இதயசுத்தியோடு செய்ய வேண்டும்.
குறித்த விடயங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களோடு நேரடியாகப் பேசவேண்டிய தேவை இருக்கின்றது. அவர்களோடு கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. அவற்றை விடுத்து, வெறுமனே பாராளுமன்றத்தில் இருந்து எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. இதை நான் காணாமல் போனோர் தொடர்பான பாராளுமன்ற விவாததத்தின் போதும் தெரிவித்திருக்கின்றேன். தமிழர் நிலத்தை அபகரித்து வெலிஓயா பகுதியை விஸ்தரித்து அதனை தனிப்பிரதேச செயலாளர் பிரிவாக மாற்ற திரை மறைவில் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனவே, இப்பகுதியைச் சேர்ந்த போரால் பாதிக்கப்பட்ட மக்களாகிய நீங்கள் உங்கள் நிலங்களில் குடியேறுங்கள். அவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. உங்கள் காணிகளில் நீங்கள் வாழ்வாதாரத் தொழில்களை செய்து அவற்றை பயன்படுத்திக் கொண்டு இருப்பதன் மூலம் அவற்றை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
மருதோடை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நெடுங்கேணி பிரதேச பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் த.தேவராசா அப்பகுதி மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
14183833_886828724782574_886651234774298766_n 14184524_886828851449228_2646344267575913900_nஇன விகிதாசாரத்தை குழப்ப அரசு முயற்சி!
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila