ஆனால் கேள்வி என்னவென்றால் பாலியல் கொடுமைக்கும் வல்லுறவுக்கும் ஆளானவர்கள் இந்தப் பொறிமுறைகளால் பயன் பெறுவார்களா என்பதுதான்.
பாலியல் கொடுமையைச் சுற்றியுள்ள மௌனமானது அதன் தன்மை, அளவு, பரிமாணம் என்பவற்றை நிர்ணயம் செய்வதில் நீண்டகாலமாக ஒரு சவாலாகவே இருக்கிறது.
இன்னொரு வகையில் சொல்வதென்றால், பெண்கள் தாமாகவே முன்வந்து அது பற்றிப் பேச முடியாதபடி அவர்களைத் தடுக்கும் வெட்கம்தான் அதற்குக் காரணம் எனலாம்.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ரஜினி திராணகம தனது ‘முறிந்த பனை மரம்’ என்ற நூலில் பின்வருமாறு கூறியிருந்தார்.
ஒரு இளம் பெண் கன்னித்தன்மையை இழந்தால் எமது சமூகத்தில் அவள் திருமணம் செய்துகொள்ள விரும்பமாட்டாள். ஏற்கனவே திருமணம் முடித்தவளாக இருந்தால் அவள் கணவனால் கைவிடப்படக்கூடிய வாய்ப்புகளே அதிகம் என.
பாதிக்கப்பட்டவர்களை ‘கெட்டுப்போன பொருட்களாகப் பார்ப்பதும் அவர்கள் நடந்ததை சரியாக கூறாமலிருப்பதற்கு ஒரு காரணம்.
இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டோம் என்ற வெட்கம் மற்றும் பயத்தினால் மௌனமாக்கப்படுகிறார்கள்.
வல்லுறவுக்கு உட்படுத்தியோர் பழி வாங்குவார்கள் என்ற பயமும், பாதுகாப்பு தர வேண்டியவர்களிடமிருந்தே, வன்முறையும் பிரயோகிக்கப்படுவதும் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கின்றன.
சற்குணானந்தன் என்பவர் யுத்தத்துக்குப் பின்னரான பாலியல் கொடுமை பற்றிய பெண்களின் மௌனத்தைக் குறிப்பிட்டு எழுதும் போது,
அவர்கள் மௌனம் காத்தவாறே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி யுத்தத்துக்குப் பின்னான இராணுவ மயப்படுத்தப்பட்ட காலச் சூழலில் ஜீவாதார தொழில்களை தேடிக் கொள்கிறார்கள்.
வெளியில் இருக்கும் போது, தமக்கு நடந்தது குறித்த கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ என்ற பயமும் அவர்கள் மௌனமாக இருக்க இன்னுமொரு காரணமாக இருக்கலாம் எனக் கூறுகிறார்.
ஆனால், 1990 மற்றும் 2000ம் ஆண்டுகளில் நிலைமை மாறியிருந்தது. ஒருசில பெண்கள் வெட்கத்தையும், பயத்தையும் விட்டுவிட்டு பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பாலியல் வல்லுறவு முறைப்பாடுகளை முன்வைத்தார்கள்.
பாதுகாப்புப் படையினராலோ, உப இராணுவ குழுக்களாலோ கொலைசெய்யப்பட்டு, வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள்.
இந்தச் சம்பவங்களில் இரண்டு தவிர ஏனையவை முறையாக விசாரணை செய்யப்படவோ குற்றம் புரிந்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவோ இல்லை.
நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சிலருடைய வழக்குகள் பூர்த்தி செய்யப்படவே இல்லை.
இவ்வாறான பல வழக்குகளில் மருத்துவ சான்றுகள் சரியான நேரத்தில் சேகரிக்கப்படவில்லை. சாட்சிகள் துன்புறுத்தப்பட்டனர்; அச்சுறுத்தப்பட்டனர்.
ஒரு சில வழக்குகள் வடக்கிலுள்ள நீதிமன்றங்களிலிருந்து தென்னிலங்கை நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. பின்னர் அந்த வழக்குகள் மரணித்தே போயின.
கிருஷாந்தி குமாரசுவாமி (1996) விசுவமடுவில் இடம்பெற்ற சம்பவம் (2010) என்ற இரண்டு வழக்குகளில் மட்டுமே பாதுகாப்புப் படையினர் பாலியல் வன்முறையிலும் கொலையிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
ஆனால், இலங்கையின் 30 வருட கால யுத்தத்தில் தண்டனையிலிருந்து பாதுகாப்பு, பாலியல் வன்முறைக்கு பொறுப்புக்கூறல் இன்மை என்ற இந்த இரண்டு அம்சங்களும் ஆழமாக வேர்விட்டுள்ளன.
இருப்பினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம், மனித உரிமைகள் கண்காணிப்பு, சித்திரவதையிலிருந்து விடுதலை போன்ற சர்வதேச அமைப்புகள் பாலியல் வன்முறை, வல்லுறவு தொடர்பான நூற்றுக் கணக்கான சாட்சியங்களை முன்வைத்துள்ளன.
பாலியல் வன்முறை, வல்லுறவு போன்ற பயங்கரமான சம்பவங்கள் தப்பி வந்தவர்களின் குரலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த படுபாதக செயல்களைச் செய்தவர்கள் பாதுகாப்புப் படையின் சில கீழ் நிலையிலுள்ள காவலர்கள் முதல் அதிகாரிகள் மட்டத்திலுள்ளவர்கள் வரை அடங்குகின்றனர்.
இரகசிய இடங்கள் மற்றும் தடுப்புக் காவல் மையங்களில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு அவர்களுடைய குடும்பத்தினர் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் எல்லோருமே தற்போது வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.விசாரணையாளர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியத்திலேயே அவர்கள் தங்கியிருக்க நேர்ந்தது.
வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவர்களின் மனத்துயரம், வல்லுறவுக்குள்ளாக்கியோர் பழிவாங்குவார்கள் என்ற பயம், சாட்சிகளுக்கு பாதுகாப்பு இன்மை போன்ற காரணிகளை ஆலோசிக்கும் போது இலங்கையில் நேரடியாக விசாரணைகளை நடத்த முடியாது என சர்வதேச அமைப்புக்களே தெளிவாகக் கூறியுள்ளன.
நீதி, பொறுப்புக்கூறல் போன்ற கோரிக்கைகளும் இந்த அறிக்கைகளில் வலியுறுத்தப்படுகின்றன.
இந்தச் சம்பவங்களை சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் என்ற வரையறைக்குள் அடக்க முற்படும் அவர்கள், அவை தனித்தனியான சம்பவங்கள் இல்லை. மாறாக, சம்பவங்கள் நடந்த இடம், தன்மை என்பவற்றைப் பார்க்கும் போது அவை நன்கு திட்டமிடப்பட்ட குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை எனவும் ஒரு சில இராணுவ வீரர்களால் அல்ல என்றும் வாதிடுகின்றனர்.
உண்மையில், எல். ரி. ரி. ஈ. இயக்கத்துக்கு ஆதரவு வழங்கிய அல்லது அவர்களோடு இணைந்திருந்தவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கு பாலியல் வன்முறை, சித்திரவதை செய்யும் போது வல்லுறவு செய்வது என்பன அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு யுக்திதான் எனவும் அவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
இந்தக் குற்றங்களை விசாரணை செய்ய உள்நாட்டுப் பொறிமுறை மட்டும் போதாது.சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் அடங்கிய நீதிமன்றம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்.
இதற்குக் காரணம், குற்றவாளிகள் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் மூலம் விசாரணை செய்யப்பட்டால் தண்டனையிலிருந்து தப்பிவிடக்கூடிய சாத்தியம் இருப்பதால் அப்படிப்பட்ட பொறிமுறை நம்பகத்தன்மையற்றது.
மேலும், சாட்சியம் வழங்குவது உட்பட இலங்கையில் இடம்பெறும் நீதி பெற்றுக் கொடுக்கக் கூடிய செயல்முறைகளில் பங்குபற்ற பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நாட்டுக்குள் அனுமதிக்குமாறும் சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றன.
இவ்வாறான ஒரு செயல் முறையில் பங்குபற்ற விருப்பம் தெரிவித்த ஒரு நபரைக் கேட்டபோது தனது சாட்சியம் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு, அடையாளம் பாதுகாக்கப்பட்டால் வெளிநாட்டிலிருந்து தனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார் என இலங்கையில் நீதி, உண்மை செயல்திட்டத்துக்கான சர்வதேச அமைப்பு கூறுகின்றது.
2015ம் ஆண்டு பெப்ரவரியில் பாதிக்கப்பட்டவர், சாட்சி பாதுகாப்பு சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் பிரகாரம் இலங்கையில் தூர இடங்களில் வசிப்பவர்கள் ஓடியோ/ வீடியோ தொடர்புச் சாதனங்கள் ஊடாக பொதுச் சேவை அதிகாரி ஒருவர் முன்னிலையில் சாட்சியமளிக்க முடியும்.
இது போதாது என விமர்சனங்கள் எழுந்திருப்பதால் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இலங்கைத் தூதரகம் ஒன்றில் வாக்களிக்க வசதியாக அமைச்சரவை இந்த சட்ட மூலத்தில் திருத்தம் செய்திருக்கிறது.
இருப்பினும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சாட்சியம் வழங்கும் போது அரச அதிகாரி ஒருவருடன் தனியறையில் அமர்ந்திருக்க விரும்பமாட்டார்.
மேலும், சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக வெளிநாட்டிலிருந்து சாட்சியம் சேகரிப்பது அனுமதிக்கப்பட்டாலும் வழக்கு விசாரணைகளில் சர்வதேச ஈடுபாடு என்ற விடயம் இலங்கையில் அதிகம் எதிர்க்கப்படும், சர்ச்சைக்குரிய பிரச்சினையாகும்.