ஒக்டோபர் 5ஆந் திகதி சர்வதேச ஆசிரியர் தினம். எனினும் எங்கள் நாட்டில் ஒக்டோபர் 6ஆந் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று ஆசிரியர் தினம். பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து அவர்களைக் கெளரவம் செய்கின்ற நிகழ்வுகள் நடந்தேறும்.
எனினும் சர்வதேச ஆசிரியர் தினம் என்ற ஒன்றைப் பிரகடனம் செய்தது மகா தவறு என்பது நம் தாழ்மையான கருத்து.
இதை நாம் கூறும்போது ஆசிரியர் தினம் தேவையில்லையா? என்று சிலர் விழிக்கவே செய்வர். இவர் களுக்கு நாம் சொல்வது ஆசிரியர்கள் என்றும் மரியாதைக்குரியவர்கள் - போற்றுதலுக்குரியவர்கள் - வணங்குதற்குரியவர்கள்.
இவ்வாறு என்றும் எப்போதும் கெளரவிக்கப்பட வேண்டிய - மரியாதை செலுத்தப்பட வேண்டியவர்களை ஒருநாளில் கெளரவித்து விடுவது என்று எல்லைப்படுத்தியபோது ஆசிரியர்களை ஒக்டோபர் 6ஆந்திகதி கெளரவித்தால் போதும் என்றொரு மனப்பாங்கு வந்துவிடும்.
உதாரணத்துக்கு சர்வதேச கடவுள் தினம் என்று பிரகடனம் செய்துவிட்டால், நாள்தோறும் இறை வணக்கம் என்ற அருமந்த முறைமை பழுதடைந்து விடுமல்லவா? இதேபோன்றுதான் ஆசிரியர் தினமும்.
எழுத்தறிவித்தவன் இறைவன் என்று கடவுள் ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய ஆசிரி யர்களை ஒருநாள் மட்டும் கெளரவித்துவிட்டு பின்னர் கவனிக்காமல் விடுவதென்பது எந்த வகையிலும் பொருத்துடையதன்று.
நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே
வாச மனையாளைப் பஞ்சணையில்
மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்!
என்று தனிப்பாடல் திரட்டுப் பேசுகிறது.
இந்தப் பாடல் வரிகள் யாரை எவ்விடத்தில் வைத்து போற்ற வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.
இந்தப் பாடலின்படி ஆசானை மட்டும் எந்த இடத்திலும் எப்போதும் போற்ற வேண்டும் என்று கூறப் படுவது இங்கு கவனிக்கத்தக்கது.
இருந்தும் எல்லா ஒழுக்கங்களையும் துறந்து எப்படியும் வாழலாம் என்ற மேலைத்தேய கலாசாரங்களில் தம் மக்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த வாழ்வியலும் பழுதடைந்து விடப்போகிறது என்ற பயத்தில் ஆசிரியர் தினம், பெற்றோர் தினம் என்று வகுத்து அன்று ஒருநாளாவது மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதற்கும் பிள்ளைகள் தம் பெற்றோரைப் பார்ப்பதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், சர்வதேச தினங்களை அறிமுகப்படுத்திவிட நாமும் அதனைப் பின்பற்றியதால் எங்கள் அருமந்த பண்பாட்டு விழுமியங்கள் அறுந்துபோகத் தலைப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் ஆசிரியர்களுக்கான மாணவர் மரியாதை.
ஆம் ஒக்டோபர் 6ஆம் திகதி ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்துவிட்டால் அதுபோதும் என்று மாணவர்கள் நினைக்கின்றனர்.
காலையில் தன் பெற்றோரை விழுந்து வணங்கும் நடிகர் வடிவேலு மாலையில், குடிபோதையில் பெற் றோரை வதைப்பதைப் பார்த்து நாம் சிரிப்பது உண்டு.
உண்மையில் அந்த நிகழ்வும் எங்கள் ஆசிரியர் தினக் கொண்டாட்டமும் ஒன்று என்பதுதான் நம் கருத்து.
ஒக்டோபர் 6ஆந் திகதி ஆசிரியர்களை விழுந்து வணங்குவது. அதன்பின்னர் ஆசிரியர்களை எதிர்ப்பது அவர்களின் வார்த்தைக்கு மதிப்பளிக்காமல் விடுவது உள்ளிட்ட அனைத்தும் நடக்கும்.
எனவே தமிழ்த் தரப்பிலேனும் ஆசிரியர் தினம் என்பதை நிறுத்தி, எந்நாளும் ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டிய தெய்வங்கள் என்ற நிலைமையை உருவாக்கம் செய்வது மிகவும் அவசியம். இதைச் செய்யும் போது ஆசிரியர்களும் தங்கள் மேன்மையை பாதுகாக்கத் தலைப்படுவர்.