வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களைத் திருப்பி அனுப்பும் அளவிற்கு இன்னமும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலப்பகுதியிலும் 17 சித்திரவதை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் நிலையில் திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்படக்கூடிய ஆபத்து நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்தும் சுமூகமான நிலைமைக்கு வந்துவிட்டதாக நான் கூறவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் கூறியது. எனினும் அது இன்னமும் நீக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதிக்கு பின்னரும் கூட தாக்குதல், துன்புறுத்தல் தொடர்பில் 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
யுத்தத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்குப் பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளது என என்னால் கூற முடியாது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்படாவிடின், நபர்களைக் கைதுசெய்து நீண்டகாலம் தடுத்துவைத்துக் கடுமையான முறையில் வழக்குகள் பதிவுசெய்யப்படும். ஏற்கனவே உள்ள அரசியல் கைதிகள் விடயத்திலும் இதுவே நடைபெறுகின்றது என தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் வாழும் ஒரு இனத்திற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கப்படாது, அனைவரையும் சமமாக அங்கீகரிக்கும் நிலையை அரசியல் சாசனத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் தஞ்சம் கோரியவர்கள் மீண்டும் நாட்டிற்கு வருவார்களா என நீங்கள் கேட்ட கேள்விக்கு சாதகமான பதிலை வழங்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் என்னைத் தடுக்கின்றது. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, சாதாரண சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்.
வெளிநாட்டில் தஞ்சமடைந்தவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவந்தால் அவர்களை தடுத்து வைத்து, 15 வருடங்களுக்கு முன்னர் என்ன செய்தீர்கள்? 20 வருடங்களுக்கு என்ன செய்தீர்கள்? 5 வருடங்களுக்கு முன்னர் என்ன செய்தீர்கள் என விசாரணை செய்வார்கள். பாரபட்சம் காட்டப்பட்டமையே அவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட முன்னுரிமை அளித்தது.
ஆகவே அவர்கள் நாடு திரும்புவதற்கு பாதுகாப்பான நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். முதன்மையாக பயங்கரவாத தடைச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும்.
வேறு ஒரு முறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டுவராமல் இருக்க வேண்டும். கடந்த காலங்கள் தொடர்பில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால் அனைவரும் நாட்டிற்கு வரலாம். அவர்கள் வரவேண்டும். அவர்களை நாங்கள் வரவேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.