முன்னாள் தலைவர்கள் ஆரம்பித்த திட்டங்களின் பெயர்ப்பலகைகளைக் அகற்றி தமது பெயரைச் சேர்த்து அவற்றை மீண்டும் திறந்து வைப்பது தனது கொள்கையல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரசு புதிதாக எதனையும் மேற்கொள்ளவில்லையென முன்னாள் தலைவர்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு ஓராண்டு காலமாக பதில் அளிக்காதிருந்த போதிலும் மீண்டும் அக்கரு த்துக்கள் தெரிவிக்கப்படுவதனால் தான் பதில் அளிக்கத் தீர்மானித்ததாகவும் நேற்று பிற்பகல் பொலன்னறுவை, திம்புலாகல, நுவரகல, சுகலாதேவிகம மாதிரிக் கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்.
கடந்த அரசாங்கங்கள் ஆரம்பித்து இடைநடுவில் நிறுத்தப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை முன்னெடுத்துச் செல்வது அரசின் பொறுப்பாகும் அத்துடன் வேலைகள் முடிவடைந்த திட்டங்களை திறந்து வைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக ஜனாதிபதி கூறினார்.
2016 உலக குடியிருப்புத்தினத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டி \\\'அனைவருக்கும் புகலிடம்\\\' தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சுகலாதேவிகம மாதிரிக் கிராமம் இன்று ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. அதனோடு இணைந்த அபிவிருத்திச் செயற்பாடுகளின் பெறுமதி 33 கோடி ரூபா ஆகும்.
2017 ஆம் ஆண்டு இந்த நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கமைவாக வீடமைப்பு நிர்மாணங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அடங்கிய முன்மொழிவுகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டைவிடவும் வீடமைப்பு, நிர்மாணம் தொடர்பில் மாற்றம் ஏற்படுத்தும் ஆண்டாக 2017ஐ மாற்றுவதாக கூறிய ஜனாதிபதி அதற்கு அனைத்துத் தரப்புகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்
நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் சமமான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தலைவர்கள் தத்தமது பிரதேசங்களை மட்டும் அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சி நிரலுக்குப்பதிலாக முழு நாட்டையும் ஒரேமாதிரி அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசின் நிகழ்ச்சி நிரலாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சுகலாதேவிகம மாதிரிக்கிராமத்தில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி கிராமத்தை மக்களுக்கு ஒப்படைப்பதனை குறிக்கும் முகமாக வீடொன்றையும் திறந்துவைத்தார்.
சுகலாதேவிகமவில் 24 வீட்டுப்பயனாளிகளுக்கு வீட்டு உரித்துக்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதியால் மேற்கொள்ளப்பட்டது. உலக குடியிப்புத்தினத்தை முன்னிட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களால் நாடளாவியரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சித்திரம், கட்டுரை மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஜனாதிபதி பரிசில்களை வழங்கினார்.
திம்புலாகல தேர்தல் தொகுதியிலுள்ள முன்பிள்ளை பராய பராமரிப்பு நிலையங்களுக்கான நீர் வடிகட்டித் தொகுதிகள் வழங்கப்பட்டதுடன் \\\'சில்பசவிய\\\' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிற்சிக்கான பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.
வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே. அத்துகோரல, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.