ஆனால், தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்க, அந்தப் புதல்வர்கள் பாடுபட்டும் கூட இதுவரை கொடியவனின் காலடித்தடத்தில் அடங்கிக் கிடக்கிறாள் ஈழத்தாய்.
தாயை மீட்க தவப்புதல்வர் எவ்வாறெல்லாம் களம் கண்டார்கள் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
ஈழத்துத் தாயை எவ்வாறு அடிமைப்படுத்தினார்கள் என்பது குறித்து ஆராய்ந்தறிவது வரலாற்றுக் கடமையாகின்றது.
ஈழ தேசம் அது இன்றுள்ளதைப் போன்று வடக்குக் கிழக்கைத் தனியாக கொண்ட தேசம் அல்ல. இலங்கை என்று இன்று சொல்லப்படும் முழுப்பகுதியுமே ஈழதேசம் தான்.
அது பல்வேறு படையெடுப்புக்கள், ஆக்கிரமிப்புக்களால் தேசத்தின் வரைபடம் இலங்கையின் வடக்குக் கிழக்கை மட்டும் தமிழர்களின் தாயக பூமியாக இன்று சொல்லுமளவிற்கு நிலைமை வந்து நிற்கிறது.
பிற்காலத்தில் இலங்கையானது மூன்று இராச்சியங்களாக பிரிக்கப்பட்டு தனி அலகாக அரசாட்சி செலுத்தத் தொடங்கிற்று.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் எனும் முப்பெரும் இராச்சியங்கள் இலங்கையில் கோலோச்சிக் கொண்டிருந்தது.
1505ம் ஆண்டு இலங்கை மீது போர்த்துக்கேயர்களின் படையெடுப்பு நிகழ்கின்றது. அப்படையெடுப்பின் மூலமாக இலங்கையானது முதல் முதலில் அந்நியர் ஆதிக்கத்திற்கு உட்பட்டுக் கொள்கிறது.
பின்னர், 1621ம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் போர்த்துக்கேயர்கள், சங்கிலிய மன்னனை அழித்ததன் மூலமாக இலங்கையில் இருந்த தமிழ் அரசனின் ஆட்சியும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
அன்றே தமிழ் மக்களின் அடிமை வாழ்வு ஆரம்பித்தது. போர்த்துக்கேயர்களைத் தொடர்ந்து, ஒல்லாந்தர், ஆங்கிலேயர்கள் என்று மேலைத்தேய நாட்டவர்களின் ஆக்கிரமிப்பால் இலங்கை முழுவதுமே அந்நியர் சக்திக்குள் உட்பட்டதாயிற்று.
பிரித்தானியர்கள் தங்கள் நிர்வாக இலகுவிற்காக இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார்கள்.
ஒட்டுமொத்த இலங்கையும், ஒரே தேசமாக, ஒரே நாடாக மாற்றினார்கள். அன்று முதல் இலங்கைத் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்தது.
பல தலைவர்கள் ஈழத்தைக் காக்க முனைந்தார்கள். எவரும் வெற்றிக்கனியை மட்டுமல்ல, அதில் துளியளவைக் கூட பெறமுடியவில்லை.
அதாவது, ஈழத்தின் நவீனகால அரசியல் வரலாறு 1850களில் இருந்து ஆரம்பித்தது என்று சொல்லலாம்.
ஆறுமுக நாவலர், பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம், ஹென்றி பேரின்பநாயகம், ஜி.சுந்தரலிங்கம், ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்று பெரிய தலைவர்கள் பரம்பரையையே தமிழினத்திற்கு இருக்கிறது.
இந்தத் தலைவர் பரம்பரையிடம் இல்லாத சிறப்பு, தனித்துவம் பிற்காலத்தில் பிறந்த வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்திருக்கிறது.
ஏனெனில், கடந்த காலத் தலைவர் பரம்பரையை அடிப்படைவாதத் தலைவர்கள், மிதவாதத் தலைவர்கள் என்று இரண்டாக வகுக்கலாம்.
ஆறுமுக நாவலர், சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர். பொன்னம்பலம் அருணாசலம், ஜி. சுந்தரலிங்கம் ஆகியோரை அடிப்படைவாதத் தலைவர்களுக்குள்ளும், ஹென்றி பேரின்பநாயகம், ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி செல்வநாயகம் போன்றோரை மிதவாதத் தலைமைக்குள்ளும் அடக்கலாம்.
அதிலும், அடிப்படைவாதத் தலைவர்கள் குறுகிய சமய சாதிய வட்டத்துக்குள் நின்று கொண்டு, தமிழ் மக்களது உரிமைப்போரையும், அந்த வட்டத்திற்குள் குறுக்க நினைத்தார்கள்.
ஆனால், மிதவாதத் தலைவர்கள் இந்த வட்டத்திற்கு அப்பால் செல்ல முயன்றபோதும், மக்களின் உரிமை அரசியலை வாக்குச் சீட்டு அரசியலைத் தாண்டி, இறுதி இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல முடியாமலோ அன்றி விரும்பாமலோ இருந்தவர்கள், இருந்தார்கள்.
இருப்பினும் இத்தலைவர்களிடத்தில் ஓர் ஒற்றுமையும் இருக்கத் தான் செய்திருக்கிறது.
ஏனெனில் மேற்சொன்ன தலைவர்கள், ஆங்கிலவழிப் புலமைக் கொண்டவர்கள், அவர்கள், பிரித்தானியர்களின் அரசியல் தத்துவக் கோட்பாடுகளை நன்கு அறிந்தவர்கள். ஆதலால் அதன் மூலமாக இலகுவாக வெற்றியை ஈட்டலாம் என்னும் கனவில் இருந்தனர்.
மேலும் இவர்களில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பிரித்தானியர்களால் கொண்டுவரப்பட்ட கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக போராடி சைவத்தைக் காப்பாற்ற எண்ணியிருந்தார்.
சைவத்தையும் தமிழையும் காப்பாற்ற முனைந்த அவரால் தமிழ் மக்களின் அரசியல் என்னும் மிகப் பெரும் நகர்வை மேற்கொள்ள இயலவில்லை. அல்லது முடியவில்லை.
ஆறுமுக நாவலரை இன்றளவுக்கும் மதப்பெரியாராகவே பார்க்க வேண்டிய ஒரு சூழல் இருக்கின்றதே அன்றி அவரை அரசியல் தலைவராக அன்றி மக்களின் வாழ்வியலுக்குப் போராடிய தலைவராகப் பார்க்கும் எண்ணம் மக்களிடத்தில் இல்லை.
இவரைத் தொடர்ந்து சேர். பொன் இராமநாதன், சேர். பொன். அருணாசலம், போன்றவர்கள் இலங்கை தேசியம் என்னும் சதிக்குள் விழுந்து, அந்த சதிவலையில் இருந்து மீள முடியாத் தலைவர்களாயினர்.
தமிழர்கள் மீது பிரித்தானியர்கள் காட்டிய சதிச் செயலைப் புரியாத அல்லது அந்தச் சதிச் செயலை முறியடிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர்.
இதற்கிடையில், முதலாம் உலகமகா யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், சிங்கள மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும், லண்டன் சென்று அதற்காக வாதாடத் தெரிந்த சேர்.பொன் இராமநாதனாலும் தமிழ் மக்களின் இருப்புக் குறித்தோ அன்றி, பிற்காலத்தில் வரவிருந்த பேராபத்துக் குறித்து கிஞ்சித்தும் சிந்திக்கத் தோன்றவில்லை.
அவரைப் போன்று தான், சேர். பொன் அருணாசலம் கூட சிங்களத் தேசியத்தின் நயவஞ்சகத்தன்மையை அவரால் ஊகித்தறிந்து கொள்ள இயலவில்லை.
இவர்களுக்குப் பின்னர் மிதவாதத் தலைவர்கள் தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம் பற்றியெல்லாம் அடிப்படைவாதத் தலைவர்கள் பேசியதை விட அதில் இருந்து சற்று முன்னேறி சித்தித்திருந்தாலும், பிரித்தானியாவின் மூலமாகவும், இலங்கை அரசியலமைப்பு மூலமாகவும் இந்தப் பிரச்சினையை கையாளலாம் என்று சிந்தித்திருக்கின்றார்கள்.
ஆனால் நடந்தது என்ன? இலங்கை அரசாங்கம் எல்லாவற்றையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டது. தமிழர்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கொண்டே அவர்களின் இனத்தை அழிக்க சித்தமாகியது.
தமிழ் மக்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா சொல்லுமளவிற்கு இலங்கை அரசாங்கங்கள் செய்த அட்டூழியங்கள், ஏமாற்று நாடகங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
இவற்றில் இருந்து ஓர் பொறி வெளிவந்தது தான் ஆயுதப் போராட்டம். இத்தனை ஆண்டுகால ஏமாற்றத்திற்குப் பின்னர், தம் மீது விழும் அடி ஒவ்வொன்றுக்கும் பதிலடி கொடுத்தால் அன்றி தலை நிமிர்வு இல்லை என்பதை அன்று பிரபாகரன் நினைத்திருந்தார்.
அதனால் முளைத்தது தான் ஆயுதப் போராட்டம். இதுவரை காலமும், உரிமை உரிமை என்ற கோரிக்கைக்கு கிடைத்தது எல்லாம் என்னமோ அடியும், உதையும், தான். இதனால் வேறு வழியின்றிப் பிறந்தது தான் ஆயுதப் போராட்டம்.
தனித்தலைமை கொண்ட, தீர்க்கமான முடிவு கொண்ட முழுக்க முழுக்க இளைஞர் படையைக் கொண்டு மேல் எழுந்தது.
யாரையும் நம்பி, இளைஞர்கள் ஆயுதம் தூக்கவில்லை. தங்களை நம்பினார்கள். தங்கள் தாய் மண்ணையும், தம் மக்களையும் நம்பினார்கள். அதனால் அவர்கள் துணிந்து ஆயுதம் தரித்தார்கள்.
மறுபுறத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் திட்டம் வகுக்கும் பணி. இதுவரை உலகில் தோன்றிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருந்து அவர் பாடங்களைக் கற்றாரே அன்றி அந்தப் போராட்டத்தை போட்டோக் கொப்பி எடுக்க வேண்டும் என்று எண்ணவில்லை.
ஈழத்தின் களநிலவரத்திற்கு ஏற்றால் போல, அரசியல் மற்றும் தாக்குதல் வியூகங்களை வகுத்தார்.
அதனால் தான் குறுகிய காலத்திற்குள், தரைப்படை, கடற்படை, கரும்புலிப்படை, விமானப்படை, எல்லைப்படை என்று அத்தனையையும் திரும்பட ஒரு கட்டமைக்கப்பட்ட இராணுவ அமைப்பைக் கொண்டு வழிநடத்த அவரால் முடிந்தது.
தவிரவும், நீண்ட காலமாக போராட்டத்தை நல்லொழுக்கத்தோடு நடத்திச் செல்லவும் பிரபாகரனால் முடிந்திற்று.
ஆக, இதுவரை காலமும் ஈழம் கண்ட தலைவர்களில் பிரபாகரன் தவிர்க்க முடியாத தலைவராக வரலாறாகியிருக்கிறார்.
உலகம் ஒன்று கூடி ஒரு மனிதனை அழிக்க வேண்டும் என்று துணிந்தது என்றால் அவரின் வளர்ச்சி எவ்வளவு விவேகமானதும், எதிர்ப்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டியிருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு சிறிய நாட்டை உலக வல்லரசுகளே திரும்பிப் பார்த்தது எனில் அது வேலுப்பிள்ளை பெற்றெடுத்த இறுதிப் புதல்வனால் தான் முடிந்திற்று.
வேலுப்பிள்ளைக்கு வேண்டுமானால் அவர் இறுதிப் பிள்ளையாகலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு அவர் தலைமகன் அல்லவா.
வரலாற்றை உருவாக்கியவர்களும் இருக்கிறார்கள். வரலாறாகியும் இருக்கிறார்கள். பிரபாகரன் வரலாற்றை உருவாக்கி வரலாறாகியிருக்கிறார்.