அப்பா என்ற படத்தில் ஒரு தந்தை தன் மகனுக்குச் சொல்கின்ற புத்திமதி இருக்கிறது தெரியாமல் இருந்து விட்டுப் போகவேணும் என்பதுதான்.
இருக்கிற இடம்தெரியாமல் இருப்பதென்பது சம்பந்தப்பட்டவர் உட்பட யாருக்கும் பிரயோசனமற்றது.
எனினும் எங்கள் தமிழினத்தில் இருக்கிற இடம் தெரியாமல் - எங்கள் அலுவல்களைப் பார்த்துக் கொண்டு -நாம் வாழ்ந்தால் போதுமென்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள் பலர். இந்த நினைப்புத்தான் எங்கள் இனத்துக்குப் படுபாதகத்தை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக மற்றவர்கள் பாடுபடட்டும் அதனால் நமக்கும் கிடைக்கும் என்ற எங்களின் குறுகிய நோக்கம் எங்கள் இலட்சியத்தை அடைவதற்குப் பெரும் தடையாக உள்ளது.
தவிர, சொந்த நலன்களுக்காகவும் பதவி படோபகாரங்களுக்காகவும் ஒரு இனத்தின் உயர்ந்த இலட் சியத்துக்கு உலை வைக்கின்ற பாதகங்களும் நம் மண்ணில் இடம்பெற்றதால்தான் எத்தனையே தியாகம் நிறைந்த எங்கள் மண்ணுக்கு; எங்கள் இனத்துக்கு இன்னமும் விமோசனம் கிடைக்காமல் உள்ளது.
இந்த நிலைமைக்கு அடிப்படைக் காரணம் நேர்மையான - விசுவாசமான அரசியல் தலைமை தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் போனதுதான்.
நேர்மையான அரசியல் தலைமை தமிழர்களுக் குக் கிடைக்காமல் போய்விட்டது என்று கூறுவதானது திருத்திய வாசிப்புக்கு உட்பட வேண்டும் என வாதிடுவர்களும் இருக்கவே செய்வர்.
அதாவது நேர்மையான - விசுவாசமான தலைமையைத் தமிழ் மக்கள் உருவாக்கவில்லை என்பதே திருத்திய வாசிப்பாக இருக்கும்.
இதில் நியாயமும் இருக்கவே செய்கிறது. அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களை உசுப்பேத்தும் அரசியல் கலாசாரமே நீடிக்கின்றது. யதார்த்த பூர்வமாகச் சிந்திக்காமல் அரசியல்வாதிகளின் உசுப்பேத்தலில் எல்லாவற்றையும் மறந்து போகக் கூடியவர்கள் தமிழ் மக்கள் என்பதால்தான் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற தந்திரோபாயங்கள் கனகச்சிதமாக நடந்தேறுகின்றன.
தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்று சிங்கள ஆட்சியாளர்கள் நினைத்ததை விட, தமிழ் அரசியல் தலைமைகள் நினைத்ததும் செய்ததுமே அதிகம்.
இப்போதுகூட இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியம் என்று கூறப்படுகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியப்படுமாயின் அது மிகவும் வரவேற்கத்தக்கது.
ஆனாலும் சாத்தியமான தீர்வு என்ன என்பது இன்று வரை தமிழ் மக்களுக்குத் தெரியாமல் உள்ளது.
தீர்வு என்ன என்பது தமிழ் அரசியல்வாதிகளுக் குத் தெரிந்தால் அதுபோதும் என்று நினைக்கின்ற அளவிலேயே நாம் இருக்கின்றோம்.
தமிழ் மக்களுக்கான தீர்வு என்றால் அது எங்களுக்கானது. எங்களுக்கானது என்றால் அதில் இருப்பது என்ன? இல்லாதது என்ன? என்பதை அறிகின்ற அதிகாரமும் உரிமையும் நமக்கே உள்ளது.
இருந்தும் அதுபற்றி நாம் எதுவும் அலட்டிக் கொள்ளாமல் அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டு விட்டோம்.
அவர்களுக்கும் இது நல்லதாகிப் போக அவர்களும் தீர்வு வருகிறது ... தீர்வு வருகிறது ... என்று கூறுகிறார்களே தவிர, என்ன என்று கூறாமல் தவிர்த்து வருகின்றனர்.
உண்மையில் எங்களுக்கான தீர்வில் எங்களுக்கு கருசனை இருந்திருக்குமாயின் தேர்தலில் வாக்களிப்பது என்ற பணியை மட்டும் நாம் செய்து கொண்டிருக்க மாட்டோம்.
மாறாக எங்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் எங்களின் வாக்குகள் பெற்று பதவிக்கு வந்த தமிழ் அரசியல் தலைமை எமக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்திருப்போம்.
அந்த உறுதித் தன்மை எங்களிடம் இல்லாமல் போனதன் விளைவாக இன்றைய எங்களின் நிலைமை ஆபத்தானதாக உள்ளது.
எனவே எங்களை நாம் புதுப்பிக்க வேண்டும். எங்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்தையும் சரியாகச் செய்ய நேர்மையான தமிழ்த் தலைமை உருவாக்க இன்றைய நாளில் தமிழ் மக்கள் உறுதி பூண வேண்டும்.